Published:Updated:

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், ஆண்களுக்கு அதிக கட்டணமா? புகாரும் விளக்கமும்

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்

மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இலவசம் என அறிவித்து விட்டு ஆண்களிடம் குறைந்த பட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கிறது என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் புகார் தெரிவித்துள்ளார்.

தி.மு.க-வின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று ஆட்சிக்கு வந்ததும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படும் என்பது. இதை ஒட்டியே அ.தி.மு.க-வும் 50 சதவிகித பேருந்து கட்டணத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்தது. இரண்டு பிரதான கட்சிகளின் முக்கிய வாக்குறுதி என்பதாலேயே ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் கவனம் பெற்றது மகளிருக்கான பேருந்துப் பயணம். தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இட்ட கையெழுத்துகளில் ஒன்று அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற உத்தரவு. இந்த வாக்குறுதி அமல்படுத்தப்பட்டதிலிருந்து பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மகளிருக்கு மட்டுமல்லாது திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பு தி.மு.க அரசுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. இலவச பயணச் சீட்டைக் கொடுத்து முறைகேட்டில் ஈடுபடுவதாகச் சேலத்தில் நடத்துநர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து தொடங்கியது இந்தத் திட்டம் தொடர்பான சர்ச்சைகள்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தற்போது சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என அறிவித்துவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது சாதாரண பேருந்துகளில் 5 ரூபாய் என இருந்த குறைந்தபட்ச கட்டணத்திற்குப் பதிலாக தற்போது 10 ரூபாய் வசூலிப்பதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சட்டத்துக்குப் புறம்பாக அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. நகர்ப்புறப் பேருந்துகளைவிடப் புறநகர்ப் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்றும், நகர்ப்புறப் பேருந்துகளில் மட்டும்தான் இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர்ப் பேருந்துகளில் ‘மகளிருக்கு இலவசம்' என்ற பலகை வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாகத் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். “மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல்.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து
தி.மு.க-வின் மக்களைக் கவர்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?

அதிகக் கட்டண வசூல் அரசாங்கத்துக்கு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது” எனவும் குற்றம்சாட்டும் ஓ.பன்னீர்செல்வம் “முதல்வர் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் பேசினோம் “விழுப்புரத்தில் ஓரிடத்தில் தவறு செய்திருப்பதாகச் செய்தி வந்தது. அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதை ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு முழுவதும் நடப்பதாகத் தவறாகச் சித்திரிக்க முயல்வது தவறானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிடுவது போன்று ஆண்களிடம் அதிக கட்டணம் எந்தப் பகுதியிலும் வசூல் செய்யப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பல கோட்டமாகப் பிரிந்து சேவை அளித்து வருகிறது. கிட்டத்தட்ட 1.22 லட்சம் பேர் பணியிலிருக்கிறார்கள்.

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

ஓ.பன்னீர்செல்வம் எழுப்பும் புகார் தமிழ்நாட்டின் எந்தக் கோட்டத்தில், யார் என்று எந்தத் தெளிவும் இல்லாமல் வெறுமனே அதிகக்கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று மட்டும் இருக்கிறது. தவறு நடக்கும் இடத்தை குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட்டாமல் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருப்பது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என்றவர்...

”கட்டண உயர்வு, கட்டணத்தில் மாற்றம் என இதுவரை எதுவும் அரசு அறிவிக்கவில்லை. அந்தத் திட்டமும் தற்போதைக்கு இல்லை. பழைய கட்டணம்தான் தற்போதுவரை தொடர்கிறது. மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 இருந்து 60 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதுதான் உண்மை. தங்கள் அரசியல் இருப்பைக் பாட்டிக் கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது இதுபோன்ற அறிக்கைகள் விடுக்கிறார். இப்போது விடப்பட்டிருக்கும் அறிக்கையும் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்கானது தானே தவிர அதில் உண்மை ஏதுமில்லை. தவறு நடந்திருக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் என்றில்லை. மக்கள் சுட்டிக்காட்டினாலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.

மாநகரப் பேருந்து
மாநகரப் பேருந்து

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டணம்தான் உள்ளது. மகளிருக்கு இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் அரசு எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. அது அரசாங்கத்தின் பொறுப்பு” என ஓ.பன்னீர்செல்வத்தின் புகாருக்கு விளக்கம் அளித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு