Published:Updated:

``சசிகலாவை அதிமுக-வில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு'' - ஓ.பி.எஸ் அதிரடிக்குப் பின்னால்?!

``சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்'' என்று ஓ.பி.எஸ் பேசியிருப்பதற்குப் பின்னால்..?

``சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்'' என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ``அ.தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமேயில்லை'' என்று சொல்லிவரும் நிலையில், ஓ.பி.எஸ் இவ்வாறு கூறியிருப்பது கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"கையெழுத்து போட மாட்டேன்"
- முரண்டு பிடித்த பன்னீர்
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ் பேச்சுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். ``கடந்த வாரம் ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை. கட்சியில் இல்லாதவரைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். சூரியனைப் பார்த்து... (`சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குத்தான் பாதிப்பு' என்ற பழமொழியை முழுமையாகச் சொல்லாமல் நிறுத்திக்கொண்டார்.) அதை நான் வெளிப்படையாகச் சொல்ல முடியாது'' என்று பேசியிருந்தார். இது கட்சியிலுள்ள முக்குலத்தோர் சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எடப்பாடி ஆதரவாளரும், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சம்பவத்துக்குக் கட்சி சார்பில் அறிக்கை வெளியிட வேண்டுமென்று எடப்பாடி தரப்பு சொல்ல, அதில் கையெழுத்து போட மறுத்தார் ஓ.பி.எஸ். இதனால், எப்போதும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரின் கையெழுத்தோடு வெளியாகும் அ.தி.மு.க அறிக்கை, இந்த முறை இ.பி.எஸ் கையெழுத்தோடு மட்டும் வெளியானது. இதைத் தொடர்ந்துதான் சசிகலாவைக் கட்சியில் இணைப்பது பற்றிப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

தனது கையெழுத்தில்லாமல் வெளியான தலைமைக் கழக அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா பற்றிப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். மேலும், `என்னதான் இருந்தாலும், சசிகலாவை எடப்பாடி அப்படிப் பேசியிருக்கக் கூடாது' என்று முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் ஓ.பி.எஸ்ஸிடம் நொந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது பற்றி பாசிட்டிவாகப் பேசி நொந்துகொண்ட தனது சமூகத்தினரை ஆறுதல்படுத்தியிருக்கிறார்'' என்கின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி - அதிமுக
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி - அதிமுக

மேலும், ஓ.பி.எஸ்ஸின் இன்றைய பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. `அ.தி.மு.க கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அடிப்படையிலேயே செயல்பட்டுவருகிறது' என்றிருக்கிறார். ``சசிகலா பொதுச்செயலாளர் பதவியைக் குறிவைத்து நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். அப்படியான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பவருக்கு, `கட்சிக்குள் வந்தாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டுதான் வர வேண்டும்' என்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓ.பி.எஸ்ஸின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ``சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சசிகலாவுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ.பி.எஸ். சசிகலாவோடும், அவரைச் சார்ந்தவர்களோடும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார் அவர். இருந்தும், சசிகலா பற்றி ஓ.பி.எஸ் பேசியதை முழுமையாகப் பார்த்துவிட்டு இது பற்றி விளக்கம் தருகிறேன்'' என்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து சசிகலா பற்றிக் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில், ஓ.பி.எஸ்ஸுக்கு ஜெயக்குமார் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி. `ஓ.பி.எஸ்., எந்தக் கருத்திலும் நிலையாக இருக்க மாட்டார். மாற்றி மாற்றிப் பேசுபவர். கட்சியின் தீர்மானங்களை மீறிப் பேசுகிறார்' என்பதே ஜெயக்குமார் மூலம் எடப்பாடி சொல்லவரும் கருத்து'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, ``சசிகலாவை எடப்பாடி இழிவாகப் பேசியபோது அமைதியாக இருந்த ஓ.பி.எஸ்., இப்போது `சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்கப்படும்' என்று கூறுகிறார். வருகிற 30-ம் தேதி குருபூஜைக்குச் செல்லும்போது முக்குலத்தோர் மக்கள் தங்களை எதிர்ப்பார்கள் என்பதாலேயே இந்த நாடகத்தை நடத்துகிறார் ஓ.பி.எஸ்'' என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு