Published:Updated:

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் உறுதி காட்டும் திமுக அரசு... எதிர்ப்புகள் கூடுமா... குறையுமா?!

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் உறுதி காட்டும் தி.மு.க அரசு. அந்தப் பகுதி மக்களின் பதில் என்ன?

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் உறுதி காட்டும் திமுக அரசு... எதிர்ப்புகள் கூடுமா... குறையுமா?!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் உறுதி காட்டும் தி.மு.க அரசு. அந்தப் பகுதி மக்களின் பதில் என்ன?

Published:Updated:
பரந்தூர் விமான நிலையம்

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமைக்க முடிவுசெய்து, அதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டுவருகிறது தமிழ்நாடு அரசு. இந்தத் திட்டத்துக்காக, பரந்தூர், ஏகனாபுரம், மேலேரி, வளத்தூர், நெல்வாய் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 4,971 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. ஆனால், அந்தப் பகுதியிலுள்ள மக்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.

அரசு கையகப்படுத்தவிருக்கும் நிலத்தில் சுமார் 2,600 ஏக்கர் நஞ்சை நிலம். `நாங்கள் கால்நடை வளர்ப்பையும், விவசாயத்தையும் நம்பியிருக்கிறோம். இங்கு விமான நிலையம் வந்தால், அது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும்' என அரசுக்கு எதிராகப் போராடிவருகின்றனர். இந்த நிலையில், நேற்று இந்தத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முன்வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், சி.பி.எம் கட்சியின் நாகை மாலி, பா.ம.க-வின் ஜி.கே.மணி சி.பி.ஐ கட்சியின் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசினார்கள். பேசிய அனைவரும், `விவசாயிகளை பாதிக்காத வகையில், விமான நிலையத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ``விமான நிலையம் அமைக்கும்போது யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். சரக்குகளைக் கையாளும் திறனில் நாம் நான்கு சதவிகித வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். அதேநேரம், அண்டை மாநில நகரங்களான ஹைதராபாத்தும், பெங்களூரும் இதைவிட இரண்டு மடங்கு கூடுதல் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. காரணம், அந்த இரு நகரங்களிலும் கூடுதலாக அமைக்கப்பட்டிருக்கும் விமான நிலையங்கள்தான். ஏற்கெனவே இருக்கும் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் ஆசியாவிலுள்ள பல பகுதிகளை, சென்னை மாநகருடன் இணைக்க முடியும். இதனால், தொழில் முதலீடுகளும் அதிகரிக்கும்.

புதிய விமான நிலையம் அமைப்பதற்கு 11 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அவற்றில், புவியியல், நில அமைப்பியல்ரீதியாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டத்தை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். கையகப்படுத்தப்படும் நிலத்துக்குச் சந்தை மதிப்பைவிட 3. 4 மடங்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், மாற்று இடம், வீடு, வேலைவாய்ப்புகளும் மக்களுக்கு வழங்கப்படும். இரண்டு ஓடுதளங்கள் அமைக்கப்படவிருக்கும் ஏகனாபுரத்தில், 2,400 குடியிருப்புகள் இருக்கின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களுக்கான மாற்று வழியைச் சொல்ல வேண்டும் எனக் கேட்டிருக்கின்றனர். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, ``விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதில் அரசு முழு கவனத்துடன் இருக்கிறது. அதேநேரம், காலத்தின் தேவையால் புதிய விமான நிலையம் அமைப்பதும் அவசியமாகிறது'' என்றும் கூறினார்.

பரந்தூர்
பரந்தூர்

விமான நிலையம் அமைப்பதில் அரசு உறுதியாக இருப்பது தொடர்பாக, பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் குழுவின் தலைவர் சுப்பிரமணியிடம் பேசினோம். ``அமைச்சர் சில விஷயங்களைச் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். குறிப்பாக ஏகனாபுரம் மக்களுக்குப் பாதிப்பில்லாமல் பணிகளைச் செய்வது குறித்து ஆராய்வோம் என்றிருக்கிறார். அதனால், அரசுக்கு சில காலம் அவகாசம் கொடுக்கலாம் என்றிருக்கிறோம். 80 நாள்களுக்கு மேலாக எங்கள் கிராமத்தில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகிறோம். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம். எங்கள் கிராமத்துக்கும், இங்குள்ள குடியிருப்புகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டம் அமைந்தால் மட்டுமே நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.

ஏழை மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விஷயத்தில் அரசு சிந்தித்துச் செயல்பட வேண்டுமென்பதே சுற்றுச்சூழலியலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது!