Published:Updated:

பிரதமர் மோடி வருகைக்கு எதிராகப் பதிவிட்டாலே போலீஸ் நடவடிக்கையா? - காவல்துறை விளக்கம்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில், `அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி வருகைக்கு எதிராகப் பதிவிட்டாலே போலீஸ் நடவடிக்கையா? - காவல்துறை விளக்கம்!

பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில், `அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
பிரதமர் மோடி

பிரதமர் வருகை:

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28-ம் தேதி) தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கவனித்துவருகின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தப் போட்டியைத் தொடங்கிவைக்க, பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகிறார். போட்டியின் தொடக்கவிழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்காக பிரதமர் அகமதாபாத்திலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் கடற்படை விமான தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நேரு உள் விளையாட்டரங்கத்துக்குச் செல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏழு அடுக்கு பாதுகாப்பு:

பிரதமர் மோடி இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் கலந்துகொண்டு, ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பிரதமர் சென்னைக்கு வருவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் மட்டும் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள். ஐந்தடுக்கு பாதுகாப்பு மேலும் இரண்டு அடுக்கு உயர்த்தப்பட்டு, ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் சென்னைக்கு வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ``முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54 ரௌடிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறோம். ராட்சத பலூன்கள், டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது" என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ``பிரதமர் வருகையை எதிர்க்க திட்டமிடப்பட்டிருந்தாலோ, பிரதமர் வருகைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தாலோ அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சியாக திமுக:

கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில், பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்திருந்தார். அந்தச் சமயத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடி வரும் தினத்தை துக்க தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், மோடி வருகையை எதிர்க்கும் வகையில் அனைவரின் வீட்டிலும் கறுப்புக்கொடியை ஏற்ற வேண்டும், கறுப்பு உடை அணிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

ஸ்டாலினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தி.மு.க-வினர் சார்பில் பிரதமர் வருகையை எதிர்க்கும்விதமாக, 2,000 கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டனர். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் கறுப்பு சட்டை அணிந்தும், வீடுகளில் கறுப்புக்கொடியை ஏற்றியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அண்ணா அறிவாலயம், கோபாலபுரம் கருணாநிதி வீடு, ஸ்டாலின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், தமிழ்நாட்டில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில், ``தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்கைக் கையாளும் மத்திய அரசுக்குத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து பாடம் புகட்டும் நேரம் இது" என்று மிகக் கடுமையாக தி.மு.க தனது எதிர்ப்பை பதிவுசெய்திருந்தது. தற்போது தி.மு.க ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது, சென்னைக்கு வரும் பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``பிரதமர் வருகை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தாலே காவல்துறை கைது நடவடிக்கை எடுத்துவிடும் என்பது போன்ற ஒரு பேச்சு பரவிக்கொண்டிருக்கிறது. அப்படிக் கிடையாது. உண்மையில், பிரதமர் வருகை குறித்து சமூக வலைதளங்களில் என்ன மாதிரியான பதிவுகள் போடப்படுகின்றன, பிரதமர் வருகையை எதிர்ப்பதற்காகச் சமூக வலைதளங்கள் மூலம் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்களா என்பதைத்தான் காவல்துறை கண்காணித்துவருகிறது. அப்படி எதுவும் இருந்தால் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்கள்.