Published:Updated:

பப்ஜி, டிக் டாக் ஆப் தடை...! பா.ஜ.க. vs தி.மு.க

பப்ஜி - டிக் டாக்
பப்ஜி - டிக் டாக்

``பப்ஜி, டிக் டாக் உள்ளிட்ட சீன ஆப்களை மத்திய அரசு தடை செய்திருப்பதன் பின்னணியில், பல்வேறு காரணங்கள் இருக்கின்றன'' என்று ரகசியம் உடைக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அவற்றை இந்தக் கட்டுரையில் வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்.

டிக்டாக், பப்ஜி, ஹலோ உள்ளிட்ட பிரபல சீனச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருக்கிறது. `இந்திய நாட்டின் தேச ஒற்றுமையை, வலிமையை எதிரிக்கு உணர்த்தும்விதமாக சீனச் செயலிகளுக்குத் தடை விதித்து தக்க பதிலடி கொடுத்திருக்கிறது மத்திய அரசு' என்று கொண்டாடித் தீர்க்கின்றனர் பா.ஜ.க ஆதரவாளர்கள். ஆனால், `சீனாவை நேருக்கு நேர் எதிர்க்க முடியாத மத்திய அரசு, தனது இயலாமையை மறைப்பதற்கும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இது போன்ற செயலிகளுக்குத் தடை விதித்து நாடகம் ஆடிவருகிறது' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்தியா தடை செய்திருக்கும் செயலிகளின் பட்டியலில், மக்களின் பேராதரவு பெற்ற டிக்டாக், ஹலோ, பப்ஜி உள்ளிட்ட பிரபல ஆப்களும் அடக்கம் என்பதால், இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், `சீனச் செயலிகளைத் தடை செய்வதால், உண்மையில் ஏற்படும் இழப்பு என்ன, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பதற்றச் சூழ்நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன...' என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கேட்டு மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் பேசினோம்.

``எல்லையில் சீனாவின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தக்கூடிய வல்லமையோ அல்லது ராஜ தந்திரமோ, போர் வியூகமோ நமது மத்திய அரசிடம் இல்லை. அதனால், இந்த விஷயத்தில் ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற நோக்கில், பப்ஜி, டிக் டாக் போன்ற சீன ஆப்களுக்குத் தடை விதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இணையத்தைப் பொறுத்தவரை, இந்தியப் பயனாளர்கள் அனைவருமே இலவச ஆப்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்திவருகிறார்கள். அதாவது வாடஸ்அப், யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக், டிக்டாக் ஆகிய இவை அனைத்துமே இங்கே இலவச ஆப்களாகத்தான் பயன்பாட்டில் இருந்துவருகின்றன.

ஃபேஸ்புக், யூடியூப் போன்ற இணையதளப் பயன்பாட்டில், இந்தியா பெரிய மார்க்கெட்டாக இருக்கலாம். எனவே, இவற்றைத் தடை செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பெரிய அளவில் விளம்பர வருவாயும் தடைப்படும். ஆனால், டிக்டாக், பப்ஜி மாதிரியான பிரபலமான ஆப்களைத் தடை செய்துவிட்டதால், சீன நிறுவனங்களுக்குப் பேரிழப்பு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஏனெனில், இது போன்ற ஆப்களிலிருந்து பெரிய அளவில் விளம்பர வருவாய் கிடைப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக அளவிலான மார்க்கெட்டில், இந்திய ரூபாயின் மதிப்பு மிகக் குறைவானதாக இருப்பதும் இதற்கான காரணம். எனவே, இந்தியாவில் இந்த ஆப்களைத் தடை செய்வதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வருவாயில் மிகக் குறைவான சதவிகிதமே பாதிப்புக்குள்ளாகும். எனவே, சீன நிறுவனத்துக்கோ அல்லது அந்த நாட்டுக்கோ இது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று சொல்ல முடியாது.

நம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்துகொண்டிருக்கிறது சீனா. இந்த எல்லைப் பிரச்னையை எதிர்கொள்ளத் தெரியாத மத்திய அரசு, சீன நாட்டின் செயலிகளுக்குத் தடைவிதித்து, நாடகம் அரங்கேற்றி வருகிறது.

பப்ஜி
பப்ஜி

நம் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த அந்நியர் ஒருவர், சேரில் ஹாயாக உட்கார்ந்திருக்கிறார். வீட்டு உரிமையாளரான நாம் அந்நியனை வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்காமல், 'முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன் பார்' என்று திரும்பி உட்கார்ந்துகொள்வதைப் போன்ற டுபாக்கூர் வேலைதான் இது.

அடுத்து, மத்திய அரசின் இந்தப் போக்குக் காட்டுகிற வேலைகளுக்குப் பின்னணியில், மிகப்பெரிய ஊழலும் ஒளிந்திருக்கிறது. அதாவது, ஏற்கெனவே நாட்டின் முக்கிய துறைமுகம், விமான நிலையம் என ஒவ்வொரு துறையையும் அரசுக்கு வேண்டிய பெரு முதலாளிகளுக்கு ஏலம்விட்டு தனியார்மயமாக்கிவிட்டார்கள். அந்தவகையில், அம்பானி - அதானிகள் ஏகபோகமாக தொழில் செய்துவருகிறார்கள். இவர்களது தொழில்களுக்குப் போட்டியாளராக இருப்பவர்களையும் தடை செய்து தருவதுதான் மத்திய அரசின் தற்போதைய பணியாக இருக்கிறது.

உதாரணமாக, ஜியோ நிறுவனத்தில் ஏற்கெனவே ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றன. ஆக, ஃபேஸ்புக், ஜியோ, யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக இருக்கக்கூடிய டிக் டாக், பப்ஜி போன்ற ஆப்களுக்குத் தடை விதித்தால், மத்திய அரசு ஆதரவு பெற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் எந்தத் தடையுமின்றி கோலோச்சும் என்பதுதான் இதன் பின்னணியில் இருக்கிற உண்மை.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

எனவே, எல்லையில் நேருக்கு நேர் மோத முடியாதவர்கள், எதிரி நாட்டின் ஆப்களுக்குத் தடை விதித்து நாடகம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இந்தத் தடையால் நமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பில் ஐந்து சதவிகிதம்கூட சம்பந்தப்பட்ட நாட்டுக்கு பாதிப்பு கிடையாது. ஆனால், `சீப்பை ஒளித்துவைத்துவிட்டால், கல்யாணம் நின்றுவிடும்' என்பதைப்போல், ஆப்களுக்கு தடை விதித்திருப்பதையே பெரிய சாதனையாக சொல்லிக்கொண்டிருக்கிறது நம் மத்திய அரசு. சர்வ பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்ற தன்னுடைய சர்வாதிகாரத்தைக் காட்டி மகிழ்ச்சியடைந்துகொள்கிறார்கள்... அவ்வளவுதான்!'' என்றார்.

இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், சீனச் செயலிகள் மீதான தடையால் அந்த நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்புகள் குறித்தும் பொருளாதார ஆலோசகரும், பா.ஜ.க ஆதரவாளருமான ராம சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம்.

''லடாக்கில், சீனப்படை எல்லை தாண்டி வந்தது நிஜம். ஆனால், தற்போது நமது படை வீரர்கள் திபெத்திய வீரர்களின் உதவியுடன் சீனப்படையை அதன் இருப்பிடத்தை நோக்கி துரத்தியடித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதைப் பற்றிய முழு உண்மைகளையும் நமது ராணுவத் தரப்பில்தான் கேட்டு அறிந்துகொள்ள முடியும்.

ராமசுப்பிரமணியன்
ராமசுப்பிரமணியன்

பொருளாதாரரீதியில், சீனாவோடு நாம் அதிக அளவில் தொடர்புகொண்டிருக்கிறோம். எனவே, அதன் வழியாகவே நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சீனாவின் ஆப்களுக்குத் தடை விதித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, டெலிகாம் துறையிலும் சீனத் தயாரிப்புகள் வேண்டாம் என்ற முடிவையும் நம் இந்திய அரசு எடுத்துள்ளது. ஓர் இந்தியனாக நம் அரசின் இந்த எதிர்ப்பை நானும் வரவேற்கிறேன்.

அதேசமயம், நாம் காட்டிவரும் இந்த எதிர்ப்பால், சீனாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஏனெனில், உலக அளவிலான ஏற்றுமதியில் நம்பர் ஒன் நாடாக இருப்பது சீனாதான். அதன் மொத்த ஏற்றுமதியில் வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே இந்தியாவுக்கானது. இந்த கொரோனா காலகட்டத்தில் உலகின் அத்தனை நாடுகளுமே பொருளாதாரச் சரிவில் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது, சீனா மட்டும்தான் இன்றைக்கும் ஜி.டி.பி-யில் வளர்ச்சி கண்டுவரும் நாடாகத் திகழ்ந்துவருகிறது.

`டெல்லிக்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பா.ஜ.க ராஜாதான்!' - ஹெச்.ராஜா

ஆனாலும்கூட நாம் தடை செய்திருக்கக்கூடிய பப்ஜி உள்ளிட்ட சீன ஆப் நிறுவனங்களின் பங்குச் சந்தை நிலவரம் தற்போது குறிப்பிட்ட அளவில் பாதிப்படைந்திருப்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது. உதாரணமாக, சர்வதேசப் பங்கு வர்த்தகத்தில், 'டென்சென்ட்' நிறுவனத்தின் மார்க்கெட் வேல்யூவில் 34 பில்லியன் டாலர் குறைந்திருக்கிறது. எனவே, `சீன ஆப்களுக்குத் தடை’ என்ற இந்தியாவின் நடவடிக்கை குறிப்பிட்ட அளவிலான தாக்கத்தை அந்த நாட்டுக்கு ஏற்படுத்தியிருப்பது உண்மை. அதேபோல், டிக் டாக் செயலிக்கும் நம் நாட்டில்தான் முதலில் தடை விதித்தோம். இப்போது அடுத்தகட்டமாக அமெரிக்காவிலும் தடை விதிப்பதற்கான செயல்பாடுகள் போய்க்கொண்டிருக்கின்றன.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்
நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்

ஆக, நம்மோடு எல்லையில் பிரச்னை செய்துகொண்டிருக்கும் சீனாவுக்கு நாமும் பதிலடி கொடுத்துவருகிறோம். அந்த பதிலடி எதிரிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாவிட்டாலும்கூட, மத்திய அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கையை ஓர் இந்தியனாக நான் பெருமையுடனேதான் பார்க்கிறேன்'' என்கிறார்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``சீனச் செயலிகளை மத்திய அரசு தடை செய்துவருவதை இப்போது விமர்சனம் செய்பவர்கள்தான், இதற்கு முன்னர், 'பொருளாதாரரீதியாக சீனாவை நாம் முடக்குவதுதான் சரியான பதிலடியாக இருக்கும்' என்று கருத்து கூறிவந்தார்கள்.

கரூர்: கொரோனா வார்டு மருத்துவருக்கு வீடியோ காலில் வாழ்த்து! - நெகிழவைத்த ஆட்சியர்

உலகில் எந்த நாடுகளுக்கிடையே பிரச்னை என்றாலும் முதலில் அமலுக்கு வருவது பொருளாதாரத் தடைதான். அந்தவகையில், இப்போது நாம் எடுத்திருக்கும் இந்தத் தடை நடவடிக்கையால், சீன நிறுவனங்களும், சீன அரசும் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துவருகின்றன. ஏனெனில், சீனாவுக்கு அடுத்தநிலையில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இருப்பது இந்தியாதான். இந்த அளவு எண்ணிக்கை கொண்ட நாம், சீன நாட்டின் செயலிகளைத் தடை செய்திருப்பது மிகப்பெரிய அளவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஒரு நாட்டுடன் பிரச்னை உருவாகிறபோது பல்வேறு வழிகளிலும் எதிரி நாட்டுக்கு நாம் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். அந்தவகையில், வெளியுறவுக் கொள்கையில் மற்ற நாடுகளோடு சேர்ந்துகொண்டு சீனாவுக்கு எதிரான ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்று. இரண்டாவதாக, எல்லையில் நம் பலத்தை அதிகரிப்பது. குறிப்பாக, சீனாவைச் சுற்றியுள்ள கடலோர நாடுகளில் நம் வலிமையை, ஆதரவை நாம் பெருக்கிக்கொள்வது. இவற்றுக்கு மாறாக, 'சீனா மீதான எதிர் நடவடிக்கைகளால், இந்திய நிறுவனங்கள் பயன்பெற்றுவிடுமே' என்று கவலைப்படுபவர்கள், எதிரியைவிடவும் மோசமான துரோகிகள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு