Published:Updated:

பெண் வாக்காளர்களை ஈர்க்கும் பிரியங்கா காந்தி! - உ.பி-யில் காங்கிரஸ் கொடி பறக்குமா?!

பிரியங்கா காந்தி
News
பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில், பிரியங்கா காந்தியின் வியூகங்கள் எடுபடுமா... காங்கிரஸ் கொடி பறக்குமா?

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க-வின் வசமிருக்கும் உ.பி-யை எப்படியாவது தங்கள் கைக்குள் கொண்டுவர வேண்டுமென்கிற எண்ணத்தோடு தேர்தல் பணி செய்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். உ.பி தேர்தலுக்கான மாநிலப் பொறுப்பாளராக, பிரியங்கா காந்தியை நியமித்திருக்கிறது கட்சி மேலிடம். லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறையில் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கி, உ.பி மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கினார் பிரியங்கா. தொடர்ந்து, உ.பி-யின் பல்வேறு பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தும், அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டும் இந்தியாவின் முக்கியச் செய்திகளில் இடம்பிடித்துவருகிறார் பிரியங்கா.

பிரியங்கா காந்தி - யோகி ஆதித்யநாத்
பிரியங்கா காந்தி - யோகி ஆதித்யநாத்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உ.பி-யின் ஆக்ராவில் பணத் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர் ஒருவர், போலீஸ் காவலில் உயிரிழந்துவிட்டார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்காவைத் தடுத்து நிறுத்தியது உ.பி காவல்துறை. போலீஸார் பிரியங்காவைத் தடுத்து நிறுத்திக் காவலில் வைத்திருந்தபோது, அவருக்குப் பாதுகாப்பாகப் பெண் போலீஸார் நிறுத்தப்பட்டனர். அப்போது பெண் போலீஸார் பலரும் பிரியங்கா காந்தியிடம் `செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா' எனக் கேட்க, பிரியங்கா சம்மதம் தெரிவித்தார். பெண் போலீஸாருடன் பிரியங்கா எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த செல்ஃபி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ``யோகி ஜி இந்தப் புகைப்படம் உங்களுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறிகிறேன். அதனால்தான் பெண் போலீஸார்மீது நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்கள். என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குற்றமெனில் என்னையும் தண்டிக்க வேண்டும். விசுவாசமான பெண் போலீஸாரின் எதிர்காலத்தைக் கெடுப்பது முறையாகாது” என்று ட்விட்டரில் பதிவிட்டார் பிரியங்கா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உ.பி-யைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் பிரியங்கா காந்தியைக் கட்டி அணைப்பது போன்ற ஒரு வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இதைத் தொடர்ந்து, ஆக்ராவிலிருந்து பிரியங்கா காந்தி திரும்பிக்கொண்டிருந்த வழியில், பெண் ஒருவர் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டார் அவர். உடனே தனது காரை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கிய பிரியங்கா, அடிபட்ட பெண்ணுக்கு தானே முதலுதவியும் செய்தார். அப்போது, அங்கு எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து, `பிரியங்காவின் மனிதநேயத்தைப் பாருங்கள்' என்று புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டுவருகிறார்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்.

மேலும், ``உ.பி-யில் காங்கிரஸ் ஆட்சியமைந்தால் பள்ளிப் படிப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்போனும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டரும் வழங்கப்படும்'' என்கிற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் பிரியங்கா. சில மாணவிகளுடன் பேசிய பிறகு, அவர்களின் பாதுகாப்பையும், படிப்பையும் கருதி இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ``உத்தரப்பிரதேசத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில், 40 சதவிகித தொகுதிகள் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும்'' என்றும் அறிவித்திருக்கிறார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ச்சியாக உ.பி-யில் பெண்களுக்கு ஆதரவான செயல்களைச் செய்வதையும், வாக்குறுதிகள் அளிப்பதையும் வாடிக்கையாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார் பிரியங்கா காந்தி. இந்த வியூகம் உ.பி தேர்தலில் எடுபடுமா என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் சில கருத்துகளை முன்வைக்கின்றனர். ``உ.பி தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் கவனம்பெற்றுவருகின்றன. நான்கு முறை உ.பி-யை ஆட்சி செய்திருக்கிறார் மாயாவதி. அவருக்குப் பின்னர் உ.பி-யின் பெண் அரசியல் முகமாக மாறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பிரியங்கா. 2019 நிலவரப்படி, உ.பி-யில், 7.81 கோடி ஆண் வாக்காளர்களும், 6.61 கோடி பெண் வாக்காளர்களும் இருக்கின்றனர். 2017 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 59.4 சதவிகிதம் மட்டுமே. அதுவே பெண் வாக்காளர்களில் 63.2 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கின்றனர். பொதுவாகவே உ.பி தேர்தல்களில் வாக்களிப்பதில், பெண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, உ.பி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகப் பெண் வாக்காளர்களும் இருந்துவருகின்றனர். அதை குறிவைத்துத்தான் பிரியங்காவும், காங்கிரஸும் வியூகங்களை வகுத்துவருகின்றனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் பாலியல் வழக்கு, உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கு எனத் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உ.பி இருந்துவருகிறது. எனவே, ஒரு பெண் தலைவரை ஆதரிப்பது அவசியம் என உ.பி-யைச் சேர்ந்த பெண்கள் கருதத் தொடங்கியிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உ.பி பெண்களின் நம்பிக்கையைப் பெற்றுவருகிறார் பிரியங்கா. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி-யில் வலுவாக இருக்க வேண்டும். எனவே, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், வலுவான எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்கிற திட்டத்தோடு வேலை செய்துவருகிறது காங்கிரஸ்.

தொடர் சுற்றுப்பயணங்கள், பெண்கள் தொடர்பான அதிரடி அறிவிப்புகள் உள்ளிட்டவை காரணமாக, பிரியங்கா காந்தி பெண்கள் மத்தியில் பரவலாகச் சென்று சேர்ந்திருக்கிறார். காங்கிரஸுக்கான ஆதரவும் ஓரளவு பெருகியிருக்கிறது என்றே சொல்லப்படுகிறது. பிரியங்கா காந்தி, உ.பி-யில் நடக்கும் துன்பச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் அவரைத் தடுத்து நிறுத்துகிறது உ.பி காவல்துறை. இதுவே அவரது மைலேஜை அதிகரித்துவிடுகிறது. உ.பி மக்கள் மத்தியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பிரியங்காவுக்கான இமேஜையும் அதிகரித்திருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி, உ.பி-யில் கடந்த தேர்தலைவிடப் பெருமளவு முன்னேற்றத்தைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஆளுங்கட்சியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள்.