Published:Updated:

மோடி அரசுக்கு எதிராக ராகுல் சுழற்றும் சர்க்காஸ்டிக் சாட்டைகள் எடுபடுகின்றனவா? - ஓர் அலசல்

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

கடந்த சில மாதங்களாக மோடி அரசின் செயல்பாடுகளுக்கெதிராக, தனது சர்க்காஸ்டிக் சாட்டையை வேகமாகச் சுழற்றிவருகிறார் ராகுல் காந்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராகுல் காந்தியைப்போல் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. சோனியா காந்தியின் கைக்குழந்தை என்பதில் தொடங்கி மோடியால் 'பப்பு' எனக் கேலி செய்யப்பட்டும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சொந்த கட்சியினரே ராகுலை ஏற்கவில்லை என்றும், மேற்கு வங்க முதல்வர் மம்தா அளவுக்குக்கூட, மத்திய அரசை எதிர்க்கும் வலுவான தலைமை பிரதான காங்கிரஸ் கட்சிக்கு இல்லை எனவும் ராகுல்காந்தியின் மீதான விமர்சனங்கள் ஏராளம். ஆனால், ராகுல் காந்தி சமீபத்தில் அதிக விமர்சனங்களை அரசை நோக்கி முன்வைத்திருக்கிறார்.

குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கெதிராக, வலுவான சாட்டையைச் சுழற்றிவருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதுவரையில் அதிகம் விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் என்பதைத் தாண்டி, மத்திய அரசை அதிகம் விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர் என்று சொல்லப்படும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில்...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியபோதே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பேச்சில் சூடு அனல் பறந்தது. காரணம், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம். இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் உளவு செயலி மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டார்கள் எனப் பல்வேறு தரப்பினரின் செல்போன்களை மத்திய அரசு ரகசியமாக ஒட்டுக்கேட்டது என்ற தகவல் வெளியானது, எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை லாகவமாகக் கையாண்ட ராகுல் காந்தி, அனைத்து எதிர்க்கட்சியினரையும் ஓரணியில் திரட்டினார். விளைவு, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினர் போட்ட அமளியால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முறையாக நடத்தப்படாமலேயே முடங்கிப்போனது. இதனால், மத்திய அரசு நிறைவேற்ற நினைத்த கடல் மீன்வளச் சட்டம் போன்ற சில முக்கிய மசோதாக்கள் அவைக்கே வராமல் நின்றுபோயின.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி
எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி

அதன் பின்னணியில், எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றுதிரட்டி ஓரணியாகச் செயல்படவைத்த ராகுல் காந்தியின் பங்கு பிரதானமாக இருந்தது. குறிப்பாக, முன்னர் எதிர்க்கட்சியினர் திரண்ட ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி,

`அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் அங்கிருந்து வரும் குரல் வலிமைமிக்கதாக மாறும். அந்தக் குரலை பா.ஜ.க மற்றும் ஆா்.எஸ்.எஸ் அமைப்பால் நசுக்கவே முடியாது. ஒற்றுமையின் வலிமையை நினைவுகூர்ந்து நாம் நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்”
ராகுல்காந்தி

எனப் பேசி பாஜக-வுக்கு எதிரான அரசியல் கூட்டணிக்கு முன்கூட்டியே அடித்தளம் போட்டார்.

அதேசமயத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்களுடன் ஒன்றுசேர்ந்து பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றத்துக்கு எதிராக சைக்கிள் பேரணியும் நடத்தினார் ராகுல் காந்தி. அதற்கு முன்னதாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் பஞ்சாப்-ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்திலிருக்கும் காந்தி சிலை முன்னால் தனது எம்.பி-க்களுடன் சேர்ந்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி போராட்டம்
ராகுல் காந்தி போராட்டம்

பொதுச் சொத்துகள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக:

தொலைத் தொடர்பு, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அரசின் பொதுத்துறை சொத்துகளைத் தனியார்மயமாக்கும் `தேசிய பணமாக்கல் திட்டத்தை' செயல்படுத்துவதாக அறிவித்தது மத்திய அரசு. இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி,

``நாட்டின் சொத்துகள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டது. 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துகள் அனைத்தையும், ஏழே ஆண்டுகளில் பிரதமர் மோடி தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்குப் பரிசாக அளிக்கிறார்"
ராகுல்காந்தி

எனக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

கொரோனா பரவல்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொற்றுப்பரவல் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் கவலை அளிக்கிறது. அடுத்த அலையின் தீவிர பாதிப்புகளை தடுக்க வேண்டுமெனில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், மக்கள் தயவுசெய்து உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மத்திய அரசு, விற்பனை செய்வதில் மும்முரமாக இருக்கிறது" எனத் தாக்கி எழுதியிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter
அரசுக்கு எதிரான அதிரடிப் போக்குகள் - கெத்துகாட்டத் தொடங்கிவிட்டாரா ராகுல் காந்தி?

பா.ஜ.க-வுக்கு எகிறிய நன்கொடை பற்றி...

கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் குறித்து ஒவ்வோர் ஆண்டும் ஆய்வறிக்கை வெளியிடும் அமைப்பான ஏ.டி.ஆர் (ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு-ADR), 2019 - 2020-ம் ஆண்டுக்கான அறிக்கையை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், பா.ஜ.க தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.3,623.28 கோடிக்கு நிதி பெற்றிருக்கிறது என்ற தகவல் இடம்பெற்றிருந்தது. இதைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி,

``பா.ஜ.க-வின் ஆண்டு வருமானம் 50% அதிகரித்திருக்கிறது. உங்கள் வருமானம் என்ன ஆனது?"
ராகுல் காந்தி

என ட்விட்டரில் பதிவிட்டு கேள்வி எழுப்பினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழங்குடிகள், விவசாயிகள் மீதான தாக்குதல் பற்றி...

மத்தியப்பிரதேச மாநிலத்தில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை லாரியில் கட்டிவைத்து `ஜெய் ஶ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லி ஒருவர் தாக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ``அரசியல் சட்டத்தின் 15-வது, 25-வது பிரிவுகளையும் விற்றுவிட்டீர்களா?’’ எனக் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதேபோல் ஹரியானாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலைக் கண்டித்தவர், ``மீண்டும் விவசாயிகளின் ரத்தம் சிந்தியுள்ளது. இது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது!" எனப் பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: அரசியலா... பொறுப்பின்மையா?  - ஓர் அலசல்
ஜாலியன்வாலா பாக்
ஜாலியன்வாலா பாக்

ஜாலியன்வாலா பாக் நினைவிடம் புதுபித்தது குறித்து...

பழைமையும் தியாகமும் நிறைந்த ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தைப் புதுப்பித்து, அதை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பழைமையான தியாக அடையாளங்களை சுமந்து நின்ற நினைவிடத்தை, புனரமைப்பதாகக் கூறி அடையாளங்களை அழித்துவிட்டனர் என இதற்குப் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். பிரதமர் மோடியின் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, ``தியாகத்தின் அர்த்தம் தெரியாத ஒரே ஒருவரால் மட்டுமே ஜாலியன்வாலா பாக் தியாகிகளை அவமானப்படுத்த முடியும். நான் தியாகியின் மகன். இது போன்று தியாகிகளை அவமானப்படுத்துவதை எந்த விலை கொடுத்தேனும் பொறுக்க மாட்டேன். இது போன்ற அநாகரிகமான கொடுமையை எதிர்க்கிறோம்" என்றார். மேலும்,

``நம் நாட்டின் சுதந்திரத்துக்காக எந்த வகையிலும் போராடாத கூட்டம், போராடியவர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை!"
ராகுல்காந்தி

என தனது ட்விட்டர் பக்கத்தில் கொதித்திருந்தார்.

நிர்மலா சீதாராமன்/ ராகுல் காந்தி
நிர்மலா சீதாராமன்/ ராகுல் காந்தி
vikatan

தற்போது பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு குறித்து...

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், இரண்டு முறை காஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டது. இது குறித்து, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ``நாட்டின் ஜி.டி.பி (GDP) தொடர்ந்து உயர்ந்துவருவதாக பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறிவருகிறார்கள். நான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத்தான் (Gross domestic product(GDP)) குறிப்பிடுகிறார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் கூறும் GDP என்பது 'Gas - Diesel -Petrol' விலை என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது" எனக் கிண்டலடித்து பேசினார். மேலும்,

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. இந்த 23 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது?
ராகுல் காந்தி

எனச் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மோடி-ராகுல்!
மோடி-ராகுல்!

இப்படியாக, மத்திய அரசு எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், உடனடி பதிலடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி! அரசியல் களத்தில் படிப்படியாகத் தன் ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டுவந்தாலும், தேர்தல் களத்தில் மோடி அரசுக்கு எதிராக ராகுல் சுழற்றிக்கொண்டிருக்கும் இந்த `சர்க்காஸ்டிக் சாட்டைகள்' எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு