Published:Updated:

ரெய்டு பின்னணி: ``இரவில் வந்த போன்கால்; பரபரப்பான வேலுமணி!”

வேலுமணி
வேலுமணி

ரெய்டு வரும் தகவல் முன்கூட்டியே கசிந்ததால், வேலுமணி உஷாராகி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக அ.தி.மு.க சீனியர்களே குறிப்பிடுகிறார்கள்.

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்புடைய 55 இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. கோவை, சென்னை, திண்டுக்கல் எனப் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை, படிப்படியாக முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. வேலுமணியின் கோவை வீட்டிலிருந்து கட்டுக்கட்டுக்காக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்டகச் சாவியையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தநிலையில், ரெய்டு வரும் தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட வேலுமணி, உஷாராக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடிய விடிய மேற்கொண்டதாகப் பரவும் தகவல்தான் அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு
சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு

இதுகுறித்து வேலுமனிக்கு நெருக்கமானவர்கள், அ.தி.மு.க சீனியர்கள் எனப் பல தரப்பினரிடமும் விசாரித்தோம். “சட்டமன்றம் வரும் 13-ம் தேதி கூடுகிறது. இதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 10-ம் தேதி) சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சட்டமன்றத்தை எவ்வளவு நாள்கள் கூட்டுவது, எந்தெந்த தேதிகளில் மானியக் கோரிக்கை விவாதத்தை வைத்துக் கொள்வது என்பதை அலுவல் ஆய்வுக் குழுதான் முடிவு செய்யும். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பாகக் கலந்து கொள்ள, கட்சியின் கொறடாவான வேலுமணி சென்னையில் முகாமிட்டிருந்தார். இந்தச் சூழலில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்திருக்கிறது.

`மொத்தம் 100 பேருக்குக் குறி!’ - எஸ்.பி.வேலுமணி ரெய்டு பின்னணி..!

சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள ‘சீப்ரோஸ்’ அடுக்குமாடி குடியிருப்பில் வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்குச் சொந்தமாக சொகுசு வீடு இருக்கிறது. இதில்தான் ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு வேலுமணி தங்கியிருந்தார். இரவு அவருக்கு ஒரு போன் வந்தது. மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் வேலுமணி. ‘'எஃப்.ஐ.ஆர் போட்டுட்டாங்களா. சட்டமன்றம் நடக்கப் போகும்போது எப்படி ரெய்டு பண்ணுவாங்க?, அதுவும் 50 இடங்கள்ல...’' என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டார். மறுமுனையில் பேசியவர் அதை உறுதிப்படுத்தியவுடன், வேலுமணியின் முகத்தில் கலவர ரேகைகள் படர்ந்தன. தன் மீது ரெய்டு அஸ்திரம் பாயுமென்பது வேலுமணிக்குத் தெரியும். இதை உணர்ந்துதான், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியபோது, ‘'நான் தான் முதலில் குறிவைக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன்’' என்றார் வேலுமணி. ஆனால், தமிழகம் தழுவிய அளவில் சுமார் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப் போகும் ரகசியத் தகவல் கிடைத்தவுடன் வேலுமணி உஷாராகிவிட்டார்.

எம்.எல்.ஏ ஹாஸ்டல்
எம்.எல்.ஏ ஹாஸ்டல்

கோவைக்கும் சென்னையிலுள்ள சிலருக்கும் அடுத்தடுத்து போன்கால்கள் பறந்தன. சில நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கச் சொன்னார். கோவையிலுள்ள கட்சி நிர்வாகிகள் சிலரிடம், "என்ன செய்வீங்களோ தெரியாது, நாளைக்கு ஒவ்வொரு நிர்வாகியும் குறைஞ்சது 30 பேரையாவது என் வீடு முன்னாடி நிறுத்தணும். ரெய்டு ஆரம்பிச்சவுடனே 1000 பேராவது எனக்கு சப்போர்ட்டுக்கு வந்தாத்தான் எனக்கு வெயிட்டா இருக்கும்" என்று துரிதமாகக் கட்டளையிட்டார். அன்று இரவே எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கும் வந்து தங்கிவிட்டார். அவர் உத்தரவிட்டபடி, காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு தொடங்கியவுடன் உடனடியாக கோவை சுகுணாபுரத்திலுள்ள வேலுமணியின் வீடு முன்பாக திரளாக கட்சிக்காரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவும் வழங்கப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடைபெற்றபோது, கட்சித் தொண்டர்கள் யாரும் அவரது வீடு அமைந்திருக்கும் ஆர்.ஏ.புரத்திற்குச் செல்லவில்லை. கரூரிலும் பெரிய எதிர்ப்பு கிளம்பவில்லை. அதுபோல தனக்கு நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் வேலுமணி” என்றனர்.

“என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெய்டு வரும் தகவல் முன்கூட்டியே கசிந்ததால், வேலுமணி உஷாராகி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக அ.தி.மு.க சீனியர்களே குறிப்பிடுகிறார்கள். அப்படி எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருந்தாலும், தேவையான ஆவணங்கள் ஏற்கெனவே தங்கள் கைவசம் இருக்கிறது என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம். இதுகுறித்து பெயர் வெளியிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் பேசிய அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “ரெய்டைப் பொறுத்தவரை அதிரடியாக சூட்டோடு நடத்தினால்தான் தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களைக் கைப்பற்ற முடியும். 2011-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், அடுத்த 20 நாளில் ரெய்டுகள் தமிழகம் முழுவதும் தடதடத்தன. ஆனால், இப்போது அப்படி எதுவும் விரைவாக நடத்தப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்து 90 நாள்களைக் கடந்துவிட்டது. வேலுமணி உட்பட பல்வேறு மூத்த அமைச்சர்கள் மீது தி.மு.க அளித்திருந்த புகார்கள், அறப்போர் இயக்கம் அளித்திருந்த ஆவணங்கள், ஒப்பந்ததாரர்களின் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வசம் ஏற்கெனவே இருக்கின்றன.

சென்னை ரெய்டு காட்சிகள்
சென்னை ரெய்டு காட்சிகள்

இந்தத் தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. வேலுமணிக்கு தொடர்புடைய 55 இடங்களில் சோதனையிட்டிருக்கிறோம். அங்கேயிருந்து கிடைத்திருக்கும் ஆவணங்கள் மற்றும் எங்கள் கைவசமிருக்கும் ஆவணங்களுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளோம். இனி வேலுமணி உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அளிக்கப்படும். அப்போது தேவைப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்றார்.

டீ முதல் டிபன் வரை..! - ரெய்டுக்கு வேலுமணி தயாரானது எப்படி?

இந்தக் களேபரங்களுக்கு நடுவே, சென்னை எம்.எல்.ஏ ஹாஸ்டல் முன்பு அ.தி.மு.க மகளிரணியைச் சேர்ந்தவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கதவை தள்ளி உள்ளே செல்ல சிலர் முயன்றனர். இதை போலீசார் தடுத்தவுடன், சுவற்றில் ஏறிய மகளிரணியினர் சிலர், “ஏய் போலீசு, எங்க ஆட்சியில நல்லாத்தானே அனுபவச்சீங்க. இப்ப என்ன தடுக்குறீங்க?” என்று ஆவேசமாகினர். இவர்களை அமைதிப்படுத்தி அப்புறப்படுத்துவதற்குள் போலீசாருக்கு விழி பிதுங்கிவிட்டது.

போராட்டத்தில் குதித்த மகளிரணி
போராட்டத்தில் குதித்த மகளிரணி

ஆகஸ்ட் 11 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "என்னைத் தொட முடியாது; சவால் வேலுமணி’' என்கிற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், ‘கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ‘என்னை யாராலும் தொட முடியாது. பேசவேண்டிய இடத்தில் பேசிவிட்டேன்’ என்று வேலுமணி சொன்னதாக ஒப்பந்ததாரர் திருவேங்கடம் என்பவர் நம்மிடம் கூறியிருந்தார். இந்தக் கவர் ஸ்டோரி வெளியான 72 மணிநேரத்தில் ரெய்டு அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இதிலிருந்து பூதம் கிளம்புமா, அல்லது புஸ்வானம் ஆகுமா என்பது விசாரணை செல்லும் போக்கை வைத்துதான் தெரியவரும்.

அடுத்த கட்டுரைக்கு