Published:Updated:

கே.சி.வீரமணி சிக்குவாரா?! கணக்கில் தப்பிய சிமென்ட் தொழிற்சாலை!

வீரமணிக்குத் தொடர்புடைய 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு சிக்கியிருக்கும் நிலையில், இரண்டு முக்கியமான இடங்களில் கைவைக்க லஞ்ச ஒழிப்புத்துறை தவறிவிட்டதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, ஏறத்தாழ ஐந்து கிலோ தங்க நகைகளை அள்ளியிருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட ஒன்பது கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் வராத 1.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வீரமணிக்குத் தொடர்புடைய 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு சிக்கியிருக்கும் நிலையில், இரண்டு முக்கியமான இடங்களில் கைவைக்க லஞ்ச ஒழிப்புத்துறை தவறிவிட்டதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வீரமணி
ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வீரமணி

நம்மிடம் பேசிய மூத்த காவல்துறை உயரதிகாரிகள் சிலர், ``வீரமணிக்கு நெருக்கமான சிலர் சமீபத்தில் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையை வாங்கியிருக்கிறார்கள். இதற்குத் தேவைப்பட்ட பெரும் தொகை ஒரு தனியார் பால் நிறுவனம் மூலமாக மடைமாற்றப்பட்டு வீரமணி தரப்பிடம் வந்திருக்கிறது. பால் நிறுவனத்தின் ஆந்திர அதிபரும், வீரமணி தரப்பும் மிக நெருக்கம் என்பதால், கறுப்பு வெள்ளையாகி இருக்கிறது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சிமென்ட் தொழிற்சாலையை வாங்குவதற்கு இரண்டு கட்டங்களாகப் பிரித்து தொகையை அளித்திருக்கிறார்கள். அந்த சிமென்ட் தொழிற்சாலை தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்தால், பல ஆவணங்கள் சிக்கியிருக்கும்.

கே.சி.வீரமணி: `ரூ.34 லட்சம் பணம்; 4.9 கிலோ தங்கம்; 9 சொகுசு கார்கள் பறிமுதல்!’ - லஞ்ச ஒழிப்புத்துறை

அதேபோல, கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும், வீரமணி தரப்பும் மிக நெருக்கம். சில வெளிநாட்டு முதலீடுகள் அவர் மூலமாகத்தான் செய்யப்பட்டுள்ளன. அந்த நபரும் சோதனையிலிருந்து தப்பிவிட்டார். இருந்தாலும், சமீபத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கியிருக்கும் சில ஆவணங்கள் வீரமணிக்குப் பெரும் குடைச்சல் கொடுக்கும். வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு முறையான ஆவணங்களை வீரமணி காட்டாவிட்டால், மத்திய அமலாக்கத்துறை தன் பங்குக்கு ஒரு வழக்கு பதிவு செய்துவிடும். அதன் பிறகு வீரமணி பாடு திண்டாட்டம்தான்” என்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். ``வீரமணியிடம் கேட்பதற்கென சுமார் 240 கேள்விகளைத் தயாரித்துவைத்திருக்கிறோம். வருமானத்துக்கு அதிகமாக 400 கோடி ரூபாய்க்கு மேல் அவர் தரப்பில் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், எங்களிடம் 28 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள்தான் சிக்கியிருக்கின்றன. மேற்கொண்டு விசாரித்துவருகிறோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி

இந்த ரெய்டுகள் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் கே.சி.வீரமணி, ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த ரெய்டு நடைபெற்றிருக்கிறது. அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் முதற்கொண்டு சோதனை செய்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். எந்த வழக்கு போட்டாலும், அதை நீதிமன்றத்தில் சந்திப்பதற்குத் தயார்” என்றிருக்கிறார். ‘எதையும் சந்திப்பதற்குத் தயார்’ என வீரமணி அறிவித்தாலும், லஞ்ச ஒழிப்புத்துறை வீசியிருக்கும் வலை வீரமணிக்குச் சிக்கலைத்தான் ஏற்படுத்தும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு