Published:Updated:

இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் அந்த 7 நிறுவனங்கள்; ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

சொந்த நாட்டில் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு ரூ. 65,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் ஏழு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன

``சுயசார்புத் திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவந்த ஆயுதத் தொழிற்சாலைகளுக்கான வாரியத்தைக் (Ordinance Factory Board) கலைத்துவிட்டு, அந்த வாரியத்தின் கீழ் செயல்பட்டவந்த 41 தொழிற்சாலைகளை ஏழு நிறுவனங்களாக மத்திய பா.ஜ.க அரசு மாற்றியிருக்கிறது. அந்த ஏழு நிறுவனங்களுக்குத்தான், பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிக்க ரூ. 65,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மோடி
மோடி

ஆயுதத் தொழிற்சாலைகளுக்கான வாரியத்தைக் கலைத்து, அதை ஏழு நிறுவனங்களாக உருவாக்கி, அவற்றை விஜயதசமி (அக்டோபர் 15-ம் தேதி) அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய ராணுவத் தொழிற்சாலைகளின் வலிமையை முதல் உலகப்போரின்போது உலக நாடுகள் பார்த்தன. ஆனால், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, அந்தத் தொழிற்சாலைகள் காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போதிய கவனம் செலுத்தப்படாமல் அவை புறக்கணிக்கப்பட்டன. அதன் விளைவு, ராணுவத் தளவாடத் தேவைகளுக்கு வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையை மாற்ற புதிதாக ஏழு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

ஆயுதத் தொழிற்சாலைகளுக்கான வாரியம் கலைக்கப்பட்டு ஏழு நிறுவனங்களாக மாற்றப்பட்டிருப்பதைப் பெருமையுடன் பிரதமர் மோடி குறிப்பிடுகிறார். ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, அந்த 41 தொழிற்சாலைகளில் பணியாற்றிவரும் ஊழியர்களும் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதற்காக, மிகப்பெரிய போராட்டங்களையும் அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். ஏன் இந்த எதிர்ப்பு?

ஆயுதத் தொழிற்சாலைகளுக்கான வாரியம், 246 ஆண்டு கால வரலாறு கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, இதன் தலைமையகம் கொல்கத்தாவில்தான் இருக்கிறது. இது, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவந்தது. இதன்கீழ் இந்தியாவின் பல்வேறு இடங்களில் 41 தொழிற்சாலைகள் செயல்பட்டுவந்தன. உதாரணமாக, சென்னை ஆவடியில் அமைந்துள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் (Heavy Vehicle Factory) பீரங்கிகள், ராணுவ உடைகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவங்காட்டில் ராணுவத்துக்குத் தேவையான வெடிமருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.எஃப்.ஐ-யில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆவடி திண் ஊர்தி தொழிற்சாலை
ஆவடி திண் ஊர்தி தொழிற்சாலை

இந்த தொழிற்சாலைகளைத்தான் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ஆர்மர்டு வெஹிகிள் நிகம் லிமிடெட், அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்டு எக்விப்மென்ட் லிமிடெட், இந்தியா ஆப்டல் லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ், யந்த்ரா இந்தியா லிமிடெட், இந்தியா ஆப்டெல் லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் என ஏழு நிறுவனங்களாக மத்திய அரசு மாற்றியிருக்கிறது. அதாவது, இவை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. தனியாரிடம் கொடுக்கப்படவில்லை. பிறகு என்ன பிரச்னை?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆயுதத் தொழிற்சாலைகளை, கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. ‘நிறுவனங்களாக மாற்றிவிட்டால், இவை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வந்துவிடும். அப்போது, திறமையாகவும் தரமாகவும் குறைந்த செலவில் உற்பத்தியைச் செய்யக்கூடியதாகவும் இந்தத் தொழிற்சாலைகள் செயல்படும்’ என்பது மத்திய அரசு எண்ணம். அரசுத்துறை மட்டுமே இருந்தால், அதிகளவில் உற்பத்தி இருக்காது. உற்பத்தி செலவு அதிகமாக இருக்கும். நிர்வாகத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்காது, தயாரிப்புகளில் புதுமை இருக்காது என்பதும் மத்திய அரசின் கருத்தாக இருந்தது.

மோடி
மோடி

ஆகவே, இவற்றை நிறுவனங்களாக மாற்றுவதற்கான முடிவை எடுத்த மோடி அரசு, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதங்கள் உற்பத்தியில் ’குறிப்பிட்ட தயாரிப்புகள் மட்டும்’ என்கிற வகையில் ஒரு கொள்கையை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து, பெரும்பாலான தொழிற்சாலைகளில் நடைபெற்றுவந்த முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம், ஒட்டுமொத்த உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. பொதுத்துறை என்று மாற்றிவிட்டால், பிறகு அதை எளிதாகத் தனியாரிடம் கொடுத்துவிடலாம் என்பது மத்திய அரசின் திட்டம் என்று குற்றம்சாட்டிய ஊழியர்கள், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். ஆனாலும், அரசு தனது முடிவில் உறுதியாக இருந்தது.

தேர்தல்களுக்குத் தயாராகும் காங்கிரஸ்...  `தலையாய' பிரச்னையை முதலில் தீர்க்குமா?

ஊழியர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி அதிரடியாக ஓர் உத்தரவை பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்தது. அதாவது, “41 இடங்களிலும் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகம், கட்டுப்பாடு, செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏழு நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு அரசு முடிவுசெய்துள்ளது” என்பதுதான் அந்த உத்தரவு. அதை எதிர்த்து சுமார் 70,000 ஊழியர்கள் அக்டோபர் 1-ம் தேதி ‘கருப்பு தினம்’ அனுசரித்தனர்.

இந்தத் தொழிற்சாலைகளில் சுமார் 90,000 பேர் நேரடியாகவும் சுமார் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த வேலைவாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. அதுபோக, 41 தொழிற்சாலைகளுக்கு இந்தியா முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல லட்சம் ஏக்கர் நிலம் உள்ளன. அவற்றை தனியாரிடம் கொடுப்பதற்கான நோக்கமும் அரசிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நிலம், வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தாண்டி நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

ராணுவம்
ராணுவம்

இந்தத் தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்பட்டுவிட்ட பிறகு, படிப்படியாக அதைத் தனியாரிடம் கொடுத்துவிடுவதற்கான திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தால், ஒவ்வொரு முடிவுக்கும் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். ஆனால், நிறுவனங்களாக மாற்றிவிட்டால், எல்லா முடிவுகளையும் நிறுவனமே எடுத்துக்கொள்ளலாம். எனவே, சொந்த உற்பத்தியை குறைத்துவிட்டு, வெளியிலிருந்து ஆயுதங்களையும் தளவாடங்களையும் வாங்குவதற்கான முடிவை எடுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதுகாப்புத் தளவாடங்களின் உற்பத்தி தனியாரிடம் போய்விட்டால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு