Published:Updated:

`அதிமுக -வில் வெடித்த கலகம்!'- நடிகையுடன் நடந்த சந்திப்பில் சசிகலா சூசகம்!

சசிகலா - நடிகை லதா

நடிகையுடன் நடந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்களுக்கும் இப்போது சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் ஒழிக்க ஆரம்பித்துள்ளதுக்கும், சம்பந்தம் உள்ளதோ? என்கிற எண்ணம் எடப்பாடி தரப்பிடம் ஏற்பட்டுள்ளது. 

`அதிமுக -வில் வெடித்த கலகம்!'- நடிகையுடன் நடந்த சந்திப்பில் சசிகலா சூசகம்!

நடிகையுடன் நடந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்களுக்கும் இப்போது சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் ஒழிக்க ஆரம்பித்துள்ளதுக்கும், சம்பந்தம் உள்ளதோ? என்கிற எண்ணம் எடப்பாடி தரப்பிடம் ஏற்பட்டுள்ளது. 

Published:Updated:
சசிகலா - நடிகை லதா

சசிகலா, தினகரனை அ.தி.மு.க-விற்கு மீண்டும் சேர்க்க வேண்டும் என்கிற கோஷங்கள் அ.தி.மு.க விற்கு எழும்பியிருக்கிறது. இந்த நேரத்தில் சசிகலாவை சில தினங்களுக்கு முன்பு சந்தித்த அ.தி.மு.க பிரமுகரும், நடிகையுமான லதா அவர்களிடம் என்ன பேசினார்? என்கிற சர்ச்சை இப்போது அ.தி.மு.க வட்டாரத்தில் புகையத் தொடங்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு பிரமாண்டமாக வரவேற்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் களத்திலிருந்து நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்று சசிகலா வெளியிட்ட அறிக்கையால் துவண்டு போனார்கள் அவரின் ஆதரவாளர்கள். சசிகலாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் தினகரன் பக்கம் சென்றார்கள். ஒருகட்டத்தில் தினகரனின் அ.ம.மு.க கட்சியும் சோபிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அ.தி.மு.கவில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பை உள்ளே நுழையமுடியாத அளவுக்கு சட்டத் திருத்தங்களையும் கொண்டுவந்தது எடப்பாடி தரப்பு. இதனால் அரசியல் களத்தில் சசிகலா இனி அவ்வளவுதான் என்கிற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் முப்பது ஆண்டுகளாக நிழல் அரசியல்வாதியாக இருந்த சசிகலா ஆக்டிவ் அரசியல் செய்ய பல வகைகளில் முயற்சி செய்துவந்தார். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சசிலா தரப்பிலிருந்து அடுத்தடுத்து சில அறிக்கைகளும் வெளியாகின. இந்நிலையில் பிப்ரவரி 24-ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் சசிகலா கலந்துக்கொண்டு பேசும்போது "அ.தி.மு.கவில் உள்ளவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு காரணம், நடந்துமுடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த படுதோல்வியும் அதனால் தொண்டர்கள் மத்தியில் எழுந்த குமுறலையும் சசிகலா தரப்பு உணர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தனக்கு நெருக்கமானவர்களை சசிகலா தரப்பு தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளது. அதன் காரணமாகவே சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் ஒழிக்கத் தொடங்கியுள்ளன என்கிறார்கள். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக சசிகலா, நடிகை லதாவைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்களுக்கும் இப்போது சசிகலாவுக்கு ஆதரவாக எழுகின்ற குரல்களுக்கும் சம்பந்தம் உள்ளதோ? என்கிற அச்சம் எடப்பாடி தரப்பிடம் ஏற்பட்டுள்ளது.

பன்னீர் செல்வம் - நடிகை லதா
பன்னீர் செல்வம் - நடிகை லதா

நடிகை லதா எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை துவங்கியபோதே, அந்த கட்சிக்கு நிதி திரட்ட நாட்டிய நிகழ்ச்சி நடத்தியவர். எம்.ஜி.ஆருடன் ஆரம்ப காலத்தில் அ.தி.மு.கவுக்காக களமாடியவர்களில் முக்கியமானவர். ஒருகட்டத்தில் அரசியல் பக்கம் தலைக்காட்டாமல் இருந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டபோது, அந்த அணிக்கு ஆதரவாக களமிறங்கினார். அதன்பிறகு அ.தி.மு.கவின் பிரசாரங்களுக்கு லதாவை பயன்படுத்த ஆரம்பித்தது அ.தி.மு.க தலைமை. ஆனால் கட்சியில் அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தான் சசிகலா தரப்பிலிருந்து லதாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. பன்னீரின் ஆதரவாளராகவே நடிகை லதாவை எடப்பாடி தரப்பு இப்போது பார்த்துவரும் நிலையில், கடந்த வாரம் நடந்த இந்த சந்திப்பு எடப்பாடியை யோசிக்க வைத்திருக்கிறது.

சசிகலா, லதா, ஜெயலலிதா மூவருக்குமே நல்ல நட்பு ஒருகட்டத்தில் இருந்தது. நட்பின் அடிப்படையில் சசிகலாவை லதா சந்தித்தபோது அரசியல் குறித்த பேச்சும் நடந்திருக்கிறது. அப்போது சசிகலா “நான் அமைதியாக இருப்பதால் அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. இந்தக் கட்சியை இப்படி காலி செய்வதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. விரைவில் அ.தி.மு.கவுக்குள் சில மாற்றங்கள் வரும். என்னிடம் யாரெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் அ.தி.மு.கவுக்குள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றியும் சசிகலா, லதாவிடம் சூசகமாக சில தகவல்களைப் பகிரிந்திருக்கிறார். குறிப்பாக டெல்லியில் நடந்துவரும் சில மூவ் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் - நடிகை லதா
எம்.ஜி.ஆர் - நடிகை லதா

லதாவும், “பன்னீர் அணியில் நான் இருந்ததால், இரண்டு அணிகள் இணைந்த பிறகு தனக்குரிய முக்கியத்துவத்தை எடப்பாடி தரவில்லை என்பதையும், எம்.ஜி.ஆர் வேடம் போட்டவரை எடப்பாடி காலில் விழ வைத்தது எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது" என எடப்பாடி தரப்பு மீதான தனது வருத்ததையும் சசிகலாவிடம் பகிர்ந்திருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை வலுப்படுத்த சசிகலாவுக்கு துணை நிற்பதாகவும் அப்போது கூறியுள்ளார்.

சசிகலாவுடன் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து நடிகை லதா தரப்பு வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லை. ஆனால் “அ.தி.மு.கவில் நல்ல நிகழ்வுகள் சீக்கிரம் நடக்கும்” என்கிற தகவலை மட்டும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் லதா. இப்போது சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கள் எழ ஆரம்பித்திருக்கும் நிலையில், சசிகலா- லதா சந்திப்பில் என்ன பேசப்பட்டது, பன்னீரின் துாதுவராக லதா சென்றாரா? என்கிற ரீதியில் ஆராய ஆரம்பித்துள்ளது எடப்பாடி தரப்பு.