Published:Updated:

`கழகப் பொதுச்செயலாளர்' சசிகலாவின் கல்வெட்டு அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் எடப்பாடி?

சசிகலா, கல்வெட்டில் `அ.தி.மு.க பொதுச்செயலாளர்' என்று குறிப்பிட்டு மீண்டும் களத்தில் இறங்கியிருப்பது அ.தி.மு.க தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வைத் தொடங்கி, கடந்த அக்டோபர் 17-ம் தேதியோடு 49 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி, அந்தக் கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் தன் பங்குக்குப் பொன்விழாவைக் கொண்டாடும்விதமாகச் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

சசிகலா பேச்சு
சசிகலா பேச்சு
Vikatan

அக்டோபர் 16-ம் தேதியன்று சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா. தொடர்ந்து, அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை தியாகராய நகர் வீட்டில், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அ.தி.மு.க கொடியையும் ஏற்றினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், `கொடியேற்றியவர்: திருமதி. வி.கே.சசிகலா, கழகப் பொதுச்செயலாளர்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``ஒரு கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகிவிட முடியுமா? செஞ்சிக் கோட்டையில் ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு ஆகிவிட முடியாது. பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தியிருக்கிறாரா? ஒருவேளை பொன்விழா அடுத்த ஆண்டு வந்திருந்தால், அப்போதுதான் அவர் வெளியே வந்திருப்பார். வானத்திலிருந்து குதித்த அவதாரம்போல நான்தான் புரட்சித் தாய் என்கிறார். அப்படிச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு என்ன புரட்சி செய்திருக்கிறார் அவர்? கல்வெட்டு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்று கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

சசிகலா - கல்வெட்டு
சசிகலா - கல்வெட்டு
ஒதுங்கியிருக்கிறாரா, விலகியிருக்கிறாரா? - சசிகலா கடிதம் உணர்த்தும் 5 விஷயங்கள்

`அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்' என்று தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிவிட்டு இவ்வளவு காலம் அமைதியாக இருந்தார் சசிகலா. ஆனால், தற்போது கல்வெட்டில் `அ.தி.மு.க பொதுச்செயலாளர்' என்று குறிப்பிட்டு மீண்டும் களத்தில் இறங்கியிருப்பது அ.தி.மு.க தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகலா, எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சவால்விடும் வகையில்தான் இந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சசிகலா கல்வெட்டு அதிரடிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பின் ரியாக்‌ஷன் என்ன?' என்பது குறித்துத் தெரிந்துகொள்ள எடப்பாடியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

``கட்சியின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அப்படியிருக்கையில் `நான்தான் பொதுச்செயலாளர்' என்று சசிகலா கல்வெட்டு வைத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு. அதுமட்டுமல்லாமல், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தலைமையில் நாங்கள் நான்கு தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கியது. 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் மாநிலத் தேர்தல் ஆணையமும் எங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கியது. உச்ச நீதிமன்றமும் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில், எங்களுக்குத்தான் சின்னத்தை வழங்கியது. அப்படியிருக்கையில், கட்சிக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத சசிகலா எப்படி பொதுச்செயலாளராக இருக்க முடியும்... இது தொடர்பாகச் சட்டரீதியான நடவடிக்கைகளைக் கட்சி எடுக்கும்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.
பொன்விழா அ.தி.மு.க... வேகமெடுக்கும் சசிகலா... எடுபடுமா புது அஸ்திரம்?

மேலும், இது கட்சித் தலைமைக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது போன்ற கருத்துகள் பரவிவருகின்றன. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தலைமையின்கீழ்தான் இருக்கிறார்கள். கட்சியில் பதவி கிடைக்காத சில முன்னாள் தலைவர்கள்தான் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதனால், கட்சிக்கோ, எங்கள் தலைவர்களுக்கோ எந்தவித பின்னடைவும் இல்லை'' என்கிறார்கள் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு