Published:Updated:

விசேஷ, துக்க நிகழ்ச்சிகளில் ஆஜராகும் சசிகலா; அ.தி.மு.க-வை வளைக்க அடுத்த நகர்வா?

அ.தி.மு.க-வைக் கைப்பற்றிவிடலாம் என சசிகலா ஆடியோ வெளியிட்டார். தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால் தற்போது அ.தி.மு.க நிர்வாகிகளின் வீட்டு சுக, துக்கங்களில் கலந்துகொள்கிறார். இதுவாவது கைகொடுக்குமா அவருக்கு..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடந்தது. அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட இந்தத் திருமணத்தில் வி.கே.சசிகலா கலந்துகொண்டதுதான் ஹைலைட். திருமணத்துக்கு வருவாரா, மாட்டாரா என்ற பல்வேறு சந்தேகங்களுக்கு இடையே முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு திருமணத்தையும் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்த சசிகலா வந்ததும் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெருங்கூட்டத்துக்கு மத்தியில் பெங்களூருவிலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்தது தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. கொரோனா சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கும் அவரது சமாதி அமைந்துள்ள மெரினா கடற்கரைக்கும் செல்ல தடை விதித்தார். அ.தி.மு.க-வைக் கைப்பற்றி சட்டப்பேரவை தேர்தலில் டி.டி.வி.தினகரனோடு இணைந்து அரசியலில் அதிர்வை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன் என அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் சசிகலா.

சசிகலா
சசிகலா

பல்வேறு சந்தர்ப்பங்களில் சசிகலாவின் மூவ் எல்லாம் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்கானது என ஆரூடம் சொல்லப்பட்டது. ஆனாலும், எதுவும் நடக்கவில்லை. இப்போதும் டி.டி.வி.தினகரன் மகள் திருமணத்துக்கு அ.தி.மு.க கொடி கட்டிய காரில் வந்தது மீண்டும் சசிகலா அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முயல்கிறார் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது. அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவார் என சசிகலா ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் அவரது நடவடிக்கைகளும்:

சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்:  நடிகர் பிரபு உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்து!

சட்டப்பேரவை முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க-வை வளைத்துவிடலாம் என முடிவு செய்தார். முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் தொலைபேசியில் பேசி அ.தி.மு.க-வைக் கைப்பற்றிவிடலாம் என நினைத்தார். தொலைக்காட்சிகளில் நேர்காணல்கள் கொடுத்து தொண்டர்களை இழுத்துவிடலாம் என நினைத்தார். சசிகலா பேசியதால் சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்களே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டனவே என நினைத்திருந்த வேளையில்தான் தற்போது அ.தி.மு.க நிர்வாகிகளின் விஷேச, துக்க நிகழ்ச்சிகளில் சசிகலா பங்கெடுக்கத் தொடங்கியிருக்கிறார். அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் மறைந்தபோது அ.தி.மு.க கொடியுடன் காரில் வந்து அவரது உறவினர்களுக்கு ஆறுதல் சொன்னார். மேலும், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்குச் சென்றவர் ``உண்மையான விசுவாசி நீங்கள்தான்” எனச் சொல்லிவிட்டு வந்தார். ஆனாலும், அ.தி.மு.க-வில் பெரிய அசைவுகளை அவரால் நிகழ்த்த முடியவில்லை.

சசிகலா - பன்னீர்செல்வம்
சசிகலா - பன்னீர்செல்வம்

அனைத்து மாவட்டங்களிலும் சசிகலாவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தீர்மானம் போடச் சொன்னார். ஆனால், பல மாவட்டங்களில் அப்படி ஏதும் நிறைவேற்றப்படாததோடு சில மாவட்டங்களில் சசிகலாவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா முடிவுக்கு வந்ததும், மாவட்டவாரியாக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் சசிகலாவின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க-வினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து கொடநாடு கொலை விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க பெருந்தலைகளும் கதிகலங்கிப்போய்விட்டனர். ஜெயலலிதா பிறந்தநாள் அல்லது சசிகலாவின் பிறந்தநாளன்று, ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரிய அளவில் இல்லையென்றாலும் அமைந்த சில முக்கிய நிகழ்வுகளிலாவது அ.தி.மு.க-வின் தற்போதைய தலைவர்களுக்கு சசிகலா பீதியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அ.தி.மு.க கொடி கட்டிய காரில் சசிகலா
அ.தி.மு.க கொடி கட்டிய காரில் சசிகலா

ஆனால், சுற்றுப்பயணம் செல்லவில்லை, கொடநாடு விவகாரத்தில் வாய் திறக்கவில்லை, ஆடியோவும் வெளியாகவில்லை, வீடியோவும் வெளியாகவில்லை. ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் செல்லாமல் அமைதியாக அடங்கிப் போய் இருந்தார்.

டி.டி.வி.தினகரன் மகள் திருமண நிகழ்வுக்கு வந்த சசிகலா அ.தி.மு.க கொடிகட்டிய காரில் வந்திருக்கிறார். சுக, துக்க நிகழ்வுகளில்தான் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால் இந்தத் திருமண நிகழ்வு மீது அ.தி.மு.க - அ.ம.மு.க வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. திருமணத்தில் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். அதனால், சசிகலாவின் அரசியல் ரீஎன்ட்ரி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒருசிலர் வந்தால் தமிழ்நாடு அரசியலில் நிச்சயம் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது. சசிகலாவும் டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னதும் இந்த நம்பிக்கைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால் அப்படி எதுவுமே இந்தத் திருமணத்தில் நடக்கவில்லை. காரணம் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வினர் ஒருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கவில்லை என அ.ம.மு.க-வின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் சொன்னார்கள். வழக்கம்போல இதுவும் புஸ்வணம்போல ஆகிவிட்டதால் அ.தி.மு.க-வை சசிகலா கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை சுத்தமாக நீர்த்துப் போயிருக்கும். ஆனாலும், போனாலும் அதிமுக கொடி என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தினகரன் மகள் திருமணம்
தினகரன் மகள் திருமணம்

கட்சியைத்தான் கைப்பற்ற முடியவில்லை சசிகலாவின் சகோதரர் திவாகரன் - டி.டி.வி.தினகரன் - சசிகலா ஆகியோருக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டையாவது இந்தத் திருமண நிகழ்வுகள் சரிசெய்துவிடலாம் என சசிகலா விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திவாகரனும் திருமணத்தில் கலந்துகொள்ளாமல் ஒரு கோயில் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார். கட்சியைத்தான் சரிக்கட்ட முடியவில்லை... குடும்பப் பிரச்னைகளையாவது சரி சசிகலா சரி செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு