Published:Updated:

சசிகலா: அமமுக வரவேற்புடன் சுற்றுப்பயணம்; அதிமுகவை அசைக்குமா இந்தப் புதிய 'மூவ்'?

சசிகலா அடுத்த வாரம், தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் நிலையில், தினகரனின் ஆதரவு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

``அ.தி.மு.க-வை மீட்க சசிகலா சரியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். தனது சொந்த முயற்சியால் அ.தி.மு.க-வை மீண்டும் வலிமைப்படுத்தும் திட்டங்களை அவர் கையில் எடுத்திருக்கிறார். எனவே, எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவுக்கு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். சசிகலா எந்த ஊருக்கு, எப்போது சென்றாலும் அ.ம.மு.க தொண்டர்கள் அவரை வரவேற்பார்கள்.”
டி.டி.வி.தினகரன்

சசிகலாவின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளில் தினகரனுக்கு விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிவந்த நிலையில், ``சசிகலா சுற்றுப்பயணம் செல்லும்போது அமமுக நிர்வாகிகள் அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்'' எனும் டி.டி.வி.தினகரனின் இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியிருக்கிறது.

சசிகலா
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி, சசிகலா பெங்களூரிலிருந்து சென்னை வந்தபோது, தமிழக எல்லையான ஓசூரிலிருந்து சென்னைவரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதில், அமமுக நிர்வாகிகளின் பங்கு மிக அதிகம். அதனால், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்தபோதே அதேயளவு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தன் ஆதரவாளர்களுக்கு, குறிப்பாக அமமுக நிர்வாகிகளை அழைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார் சசிகலா. ஆனால், 16-ம் தேதி சசிகலா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியபோது பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை.

அதற்கு அடுத்த நாளான, அக்டோபர் 17-ம் தேதி, தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லத்துக்குச் சென்ற சசிகலா, அ.தி.மு.க கொடியை ஏற்றியும், `அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்தும் வைத்தார். அப்போது முதல் நாள் கூடிய கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட்டம்தான் கூடியது. ராமாவரம் தோட்டத்தில் நடந்த விழாவிலும் குறைவான அளவிலேயே தொண்டர்கள் கலந்துகொண்டனர். டி.டி.வி.தினகரனிடமிருந்து, அமமுக நிர்வாகிகளுக்கு தெளிவானதோர் உத்தரவு வராததால், பல அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை, அதனால்தான் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிற தகவல்கள் அப்போது வெளியாகின. அதுமட்டுமல்லாமல், சசிகலாவின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளில் தினகரனுக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், தனியார் பத்திரிகை ஒன்றுக்கு தினகரன் அளித்த பேட்டியில்,

தினகரன் - சசிகலா
தினகரன் - சசிகலா

``சசிகலா எந்த ஊருக்கு, எப்போது சென்றாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் அவரை வரவேற்பார்கள். சசிகலா வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போது அவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சந்தித்துப் பேசுவார்கள்'' என்று பதிலளித்திருக்கிறார். சசிகலா அடுத்த வாரம், தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் நிலையில் இது அதிமுக-வில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

சசிகலா அதிமுக-வில் இணைப்பு?!  `கழகத் தலைமை முடிவெடுக்கும்!' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` நிச்சயமாக பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை. கடந்த சட்டமன்றத் தேர்தல் தொடங்கி தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் வரை, அமமுக நிர்வாகிகள் தங்கள் கைக்காசைப் போட்டுத்தான் செலவு செய்துவருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்து அனைவரும் களைப்படைந்துவிட்டனர். இனிமேல் நிர்வாகிகள் யாரும் செலவு செய்வதற்குத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல, சசிகலா சுற்றுப்பயணம் செல்லும்போது, அந்தந்தப் பகுதி அமமுக நிர்வாகிகள் சென்று சந்திப்பதால் ஒரு பயனும் உண்டாகாது. அதிமுக-விலும் கீழ் மட்ட நிர்வாகிகளில் ஒருசிலர் வேண்டுமானால் சின்னம்மாவை வந்து சந்திக்கலாம்.

சசிகலா
சசிகலா

அதிமுக=வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வந்து சின்னம்மாவைச் சந்திக்காதவரை, சின்னம்மாவின் பக்கம் வராதவரை எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை. மாவட்டச் செயலாளர்கள்கூட சின்னம்மா பக்கம் வராதபோது, எப்படி மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்க முடியும்? அவர்களாக வருவார்கள் என எவ்வளவு ஆண்டுக்காலம் காத்திருந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. சின்னம்மா நேரடியாகக் களத்தில் இறங்கி இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் பேசி, அவர்களைத் தனக்கு ஆதரவாகக் கொண்டுவர வேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சுற்றுப்பயணத்திலாவது அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்ய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு'' என்றார்கள் அவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு