கொரனா பெருந்தொற்று தீவிரமடைந்திருந்த காலத்தில் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோரை ஆட்சியாளர்களும் பொதுமக்களும் நன்றியுணர்வோடு பாராட்டினார்கள். குறிப்பாக, பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களின் சேவை பெரிதும் போற்றப்பட்டது. அவர்களின் சேவைக்கு வெறும் பாராட்டும் கைத்தட்டலும் போதுமா? அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?

சென்னையில் எந்த மாதிரியான பணிச்சூழலில் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள், எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய நேரில் சென்றோம். மாநகராட்சியால் நேரடியாக நியமிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களாக ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். தேசிய நகர வாழ்வியல் இயக்கத்தின் ( National Urban livelihood Mission) கீழ் பலர் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். என்.எம்.ஆர் எனப்படும் நிரந்தரப்படுத்தப்படாத தூய்மைப் பணியாளர்களாகப் பலர் வேலை செய்கின்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎன்.எம்.ஆர் வகைத் தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலை செய்கிறார்கள். பொதுவாக, அரசுத் துறையில் வேலையாட்கள் தேவை என்றபோது, இவர்கள் அந்தப் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். குறைந்தது 240 நாள்களுக்கு மேல் என்.எம்.ஆர் தொழிலாளிகள் வேலை செய்தால், அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால், 240 நாள்களைக் கடந்து நீண்ட காலமாக வேலை செய்யும் ஏராளமான என்.எம்.ஆர் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.
2018-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் 3, 4 வருடங்களுக்கு மேல் வேலை செய்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், 28 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் செய்யப்படாமல், பல தூய்மைப்பணியாளர்கள் சென்னையில் வேலை செய்கிறார்கள்.

பள்ளிக்கரணை குப்பைப் கிடங்கில் வேலை செய்யும் என்.எம்.ஆர் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்தோம். இவர்கள், பாலவாக்கம் ஊராட்சியாக இருந்தபோது, 1993-1994 ஆண்டில் தூய்மைப்பணியாளராகப் பணியைத் தொடங்கியுள்ளனர். 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்கள், ஷிப்டு அடிப்படையில் வேலை செய்துவருகிறார்கள். பாலவாக்கம், சென்னை மாநகராட்சியின் கீழ் 2011-ல் கொண்டுவரப்பட்டது. ஆனால், அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது, பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் அவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இது குறித்து அங்கு பணியாற்றும் கன்னியப்பன் பேசுகையில், ``பணிநிரந்தரப்படுத்தாத காரணத்தால் முறையான சம்பள உயர்வு இல்லை. வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும் போக்குவரத்துக்குமே செலவாகிவிடுகிறது. மற்ற செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கிறது. பணிநிரந்தரம் செய்யப்படாதவர்களுக்கு செட்டில்மெண்ட்டும், பென்ஷனும் கிடையாது” என்றார். குப்பைக்கிடங்கில் வேலை செய்வதால், தோல் வியாதிகள் பாடாய் படுத்துவதாக அவர் சொல்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொழிலாளி ஏகாம்பரம், ``மூன்று வேளையும் சாப்பிட்டு வேலை பார்ப்பவர்கள் இங்கு யாரும் இல்லை. ஒருவேளை பட்டினியோடுதான் வேலை செய்கிறோம். மூணு வேளை சாப்பிடும் அளவுக்கு எங்களுக்கு வருமானம் இல்லை. மூன்று வேளையும் சாப்பிட வேண்டுமென்றால், நாங்கள் பிச்சைதான் எடுக்க வேண்டும். வயதாகி வேலையிலிருந்து விலகினால் எங்களுக்கு பென்ஷன் இல்லை. வேலையில் இருக்கும்போதே இறந்துட்டா எங்களுக்கு எந்த நஷ்டஈடும் கிடையாது. அஜ்ரத் எனும் தொழிலாளி எட்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். அவர் குடும்பத்துக்கு எந்த நஷ்டஈடும் தரப்படவில்லை. அதே நிலைமை எங்களுக்கும் வந்துருமோ என்று பயமாக இருக்கிறது” என்று கண் கலங்கினார்.

செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த மோசஸ் கூறுகையில், ``மாதவரம், சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், புழுதிவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட என்.எம்.ஆர் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். நான்கு வருடங்களுக்கு முன்பு ரிப்பன் பில்டிங்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். அப்போது, நிரந்தரப்படுத்துகிறோம் என்று கூறினார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியாளர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பரிசீலித்தனர். இந்த ஆட்சியிலாவது எங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.
பள்ளிக்கரணை, மண்டலம் 14 கீழ் செயல்படுகிறது. இது தொடர்பாக மண்டல அலுவலரிடம் கேட்ட போது; என்.எம். ஆர் தூய்மை தொழிலாளர்கள் பாலவாக்கம் ஊராட்சியாக இருந்த போது பணியில் இணைந்தனர்.2011 ம் ஆண்டு மாநகராட்சியான பின்னும் பணியை தொடர்கின்றனர். இது போல் நிறைய இடங்களில் என்.எம்.ஆர்கள் தூய்மைபணியில் செயல்படுகின்றனர். இதற்கு மண்டல அளவில் நடவடிக்கை எடுக்க இயலாது. அரசு தரப்பில் தான் எடுக்க வேண்டும் என்றார்.
தூய்மைப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து, 14-வது மண்டல அலுவலர் இளங்கோவிடம் கேட்டபோது, ``என்.எம். ஆர் தூய்மை தொழிலாளர்கள் பாலவாக்கம் ஊராட்சியாக இருந்தபோது பணியில் இணைந்தனர். 2011-ம் ஆண்டு மாநகராட்சியான பின்னும் பணியை தொடர்கின்றனர். இது போல் நிறைய இடங்களில் என்.எம்.ஆர்-கள் தூய்மைப் பணியில் செயல்படுகின்றனர். இதற்கு மண்டல அளவில் நடவடிக்கை எடுக்க இயலாது. அரசு தரப்பில்தான் எடுக்கவேண்டும்" என்றார்.
இந்தப் பிரச்னை குறித்து ஆளும் கட்சியான தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசியபோது, ``சில இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் தனியார் ஒப்பந்தங்களின் அடிப்படையில் பணியில் இணைந்துள்ளனர். இதனால்கூட பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கலாம். சட்ட விதிமுறைகளின்படி சில இடங்களில் என்.எம்.ஆர் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்வோம்” என்றார்.

தூய்மைப்பணியாளர்களைக் கைதட்டிப் பாராட்டுவதையும், மாலை அணிவித்து அவர்களை கௌரவிப்பதையும்விட, அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும், சுயமரியாதையுடன் அவர்கள் வாழ்வது உறுதிசெய்யப்பட வேண்டும். தூய்மைப்பணியாளர்களின் துயரங்கள் துடைக்கப்படுமா?