Published:Updated:

'நீட் முதல் கச்சத்தீவு வரை' முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பில் முன்வைத்த கோரிக்கைகள்!

 ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

பிரதமருடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது. `தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்’ என உறுதி அளித்துள்ளார். - தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவடைந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி, தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலினை தி.மு.க எம்.பி-க்கள் வரவேற்றனர். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அதன் பிறகு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளார். அது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர்,

``கொரோனா பெருந்தொற்றுப் பணிகள் காரணமாக முன்கூட்டியே பிரதமரைச் சந்தி்க்க முடியவில்லை. அவருடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது. `தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்’ என உறுதி அளித்துள்ளார். `எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், எங்களிடத்திலே வெளிப்படையாகக் தெரிவிக்கலாம்’ எனக் கூறியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும், கோரிக்கைகளையும் அவரிடம் கொடுத்துள்ளோம்” என்றார்.

மோடி
மோடி

பிரதமரிடம் முதல்வர் வைத்த முக்கியக் கோரிக்கைகள் :

1.கூடுதலான தடுப்பூசிகளைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

2. செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலையை உடனடியாகச் செயல்படவைக்க வேண்டும்.

3. ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

4. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

5. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

6. மேகதாது திட்டத்தைக் கைவிட வேண்டும்.

7. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட அனுமதிக்க வேண்டும்.

8. இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும்.

9. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.

10. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமைனையை விரைவாகக் கட்டி முடிக்க வேண்டும்.

11. மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தர வேண்டும்.

12. புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்.

13. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

14. ஈழத்திலிருந்து தமிழகத்தில்அகதிகளாகக் குடியேறியுள்ள மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

15. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும்.

16. இட ஒதுக்கீடு உரிமைகளை மாநில அரசே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

17. குடியரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்.

18. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும்.

இப்படியாக மேலும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம். அதை நிறைவேற்றவும் அழுத்தம் கொடுப்போம்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மத்திய அரசுடனான உறவு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ``உறவுக்குக் கை கொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என பதிலளித்தார்.

'நீட் முதல் கச்சத்தீவு வரை' முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பில் முன்வைத்த கோரிக்கைகள்!
அடுத்த கட்டுரைக்கு