Published:Updated:

``முழு வரிகளைப் பயன்படுத்துங்கள்'' - பாஜக-வின் `தமிழ்த்தாய் வாழ்த்து' அரசியலுக்குப் பின்னால்..?!

மு.க.ஸ்டாலின்
News
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு பா.ஜ.க, `தமிழ்த்தாய் வாழ்த்து' அரசியலை கையிலெடுத்திருப்பது ஏன்... வரிகள் நீக்கப்பட்டதற்கு, தி.மு.க ஆதரவாளர்கள் சொல்லும் பதில் என்ன?!

டிசம்பர் 17-ம் தேதி அன்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்த நிலையில் பா.ஜ.க-வினர் பலரும், ``முதலமைச்சரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறோம். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாகப் பாட வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், ``தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழ்நாடு அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பயன்படுத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இதயப் பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரிசெய்யப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

வானதி சீனிவாசன், பாஜக
வானதி சீனிவாசன், பாஜக

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``பாரதிய ஜனதா கட்சி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குத் தமிழக அரசு அளித்திருக்கும் அங்கீகாரத்தை மிகவும் வரவேற்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970-ம் ஆண்டு நவ.23-ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார். அப்போதே அப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதில் சில வரிகளைத் தவிர்த்தது சர்ச்சையானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`மனோன்மணியம் சுந்தரனார்’ என்று போற்றப்படும் திருவனந்தபுரம் பெருமாள் சுந்தரம் பிள்ளை அவர்கள் இருந்திருந்தால், தாம் எழுதிய இப்பாடலுக்குக் கிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அதில் சில வரிகளை நீக்கி, திருத்திப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருக்கவே மாட்டார்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

(நீக்கப்பட்ட வரிகள் ஹைலைட் செய்யப்பட்டிருக்கின்றன.)

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

ஆகவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்மீது நல்லெண்ணம்கொண்டு செய்த முயற்சியை, அரைகுறையாகச் செயல்படுத்தாமல், அவர் பதவி ஏற்றபோது எடுத்துக்கொண்ட, `என் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செயலாற்றுவேன்’ என்ற உறுதி மொழியின்படி கடவுள் நம்பிக்கை வரிகளைச் சிதைக்காமல், முழுமையாகப் பாடலைப் பயன்படுத்துவதே தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் பாடுபட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரனாருக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும். இதைத் தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு பா.ஜ.க இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு தீவிரம்காட்டுகிறது என்று பா.ஜ.க நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். ``1970-லிருந்த தி.மு.க அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு சில வரிகளை நீக்கியிருக்கிறது. `பரம்பொருள்' என்ற சொல் வரும் வரியை ஏன் நீக்க வேண்டும்... ஒரு கவிஞர் எழுதிய பாடலை இவர்கள் ஏன் எடிட் செய்ய வேண்டும்? சட்டத்தின்படி, பதவிப்பிரமாணம் எடுக்கும்போதுகூட, `உளமார' அல்லது `கடவுள்மீது ஆணையாக' என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள இருமுறைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கையில், பரம்பொருள் என்பதை நீக்கவேண்டிய காரணம் என்ன?'' என்று கேள்வியெழுப்புகின்றனர்.

``பரம்பொருள் என்ற சொல் வரும் வரிகளை தி.மு.க அரசு சேர்த்துக்கொண்டால், பகுத்தறிவு பேசும் தி.மு.க அரசு, இறை நம்பிக்கையை ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்ற கணக்கோடுதான் பா.ஜ.க தமிழ்த்தாய் வாழ்த்து அரசியலில் இறங்கியிருக்கிறது'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கருணாநிதி- ஸ்டாலின்
கருணாநிதி- ஸ்டாலின்

தி.மு.க ஆதரவாளர்கள் சிலர், ``நீக்கப்பட்ட வரிகளில், `ஆரிய மொழிகள் உலக வழக்கத்திலிருந்து ஒழிந்து, சிதைந்து போனதுபோல இல்லாமல், தமிழ் மொழியானது இன்னும் இளமையாக இருக்கிறது' என்று சுந்தரனார் பாடியிருப்பார். மற்ற மொழிகளைக் குறைத்துக் கூறும் வரிகளைத் தவிர்த்துவிட்டு, தமிழ் மொழியின் பெருமை மட்டுமே இருக்கும்படியாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றியமைத்திருக்கின்றனர். மேலும், இந்தப் பாடல் இயற்றப்பட்டபோது தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்கள் அனைவரும் ஒரே மாகாணத்திலிருந்தனர். ஆனால், 1970-ல் அப்படியில்லையே... அதனால்தான் அந்த வரிகளும் நீக்கப்பட்டு, காலத்துக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றும் தவறில்லையே'' என்கிறார்கள்.