Published:Updated:

அலுவல் சாரா கல்விக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் பாரபட்சமா... சர்ச்சைக்கு என்ன காரணம்?

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவல் சாரா கல்விக்குழுவில் `வலதுசாரிக்கு வாய்ப்பு’, `தலித் பிரதிநிதித்துவம் இல்லை‘, `பாலியல் புகாருக்கு ஆளானவருக்கு வாய்ப்பு’ எனச் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக, பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களைப் பற்றி அவர் இழிவாகப் பேசினார் என்றும், அப்படிப்பட்ட ஒருவரைப் பாடநூல் நிறுவனத் தலைவராக நியமிக்கக் கூடாது என்றும் பலர் கருத்துதெரிவித்தனர். இது குறித்து ட்வீட் செய்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ``பெண்களை இழிவுபடுத்திப் பேசும் ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்துவதைவிட, அந்தப் பதவியை மோசமாக அவமதிக்க முடியாது. பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கிவிட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அலுவலர் சாரா கல்விக்குழு உறுப்பினர் பட்டியல்
அலுவலர் சாரா கல்விக்குழு உறுப்பினர் பட்டியல்

இன்னொருபுறம், லியோனியின் நியமனம் நியாயமானது என்று பலர் கருத்துகளைத் தெரிவித்தனர். ``லியோனி அடிப்படையில் ஓர் அறிவியல் ஆசிரியர். திண்டுக்கல் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். எழுத்தறிவைப் பரப்பும் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டபோது அதை திண்டுக்கல் மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுசேர்த்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இயங்கியவர். ஒடுக்கப்பட்ட பின்னணியில் பிறந்து, மக்கள் மொழியில் முற்போக்குக் கருத்துகளைப் பேசியவர்” என்று லியோனிக்கு ஆதரவாகப் பலர் கருத்துகளை முன்வைத்ததுடன், ``லியோனியைவிட இந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார்?” என்ற கேள்வியையும் எழுப்பினர்.

தற்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது. அலுவல் சாரா கல்விக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் பாரபட்சம் இருப்பதாகப் பலர் விமர்சித்துவருகின்றனர்.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவல் சாரா கல்விக்குழு உறுப்பினர்களாகப் பலரை தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ஒடிசா மாநிலக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை, சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் வீ.அரசு, நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஆராய்ச்சியாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, சமூகவியல் ஆராய்ச்சியாளரும், மொழிபெயர்ப்பாளருமான வ.கீதா, கல்வியாளர் ச.மாடசாமி, கல்வியாளர் ஆயிஷா நடராஜன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, எழுத்தாளர் பூ.கோ.சரவணன் இ.வ.ப ஆகியோர் அந்தக்குழுவில் இடம்பெற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், ச.மாடசாமி உட்பட பலரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது பரவலான வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், இதில் சில விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் நியமனம் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் ஒரு வலதுசாரிக் கொள்கையை உடையவர் என்று விமர்சித்து, அவரது நியமனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை வெளியிட்டனர்.

பத்ரி சேஷாத்ரி
பத்ரி சேஷாத்ரி

இந்தச் சர்ச்சை குறித்து பத்ரி சேஷாத்ரியிடம் கேட்டபோது, தன் விரிவான பதிலை அவர் அளித்தார்.

``தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அலுவல் சாரா கல்விக்குழு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். தற்போது, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வீ.அரசு ஆகிய இருவர் மட்டுமே புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பூ.கோ.சரவணன் உட்பட மற்ற எல்லோரும் ஏற்கெனவே இந்த குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள்தான். இந்தக் குழுவில் இருந்த முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் இறந்துவிட்டதால், அவருக்கு பதிலாக சுப.வீரபாண்டியன் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தற்போது இந்தக் குழு இருப்பதாக எனக்கு ஒரு கடிதம் வந்தது. வரும் சனிக்கிழமை ஒரு மீட்டிங் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்தக் குழுவின் செயல்பாடுகள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது” என்றார் பத்ரி.

இந்தக் குழுவின் முந்தைய செயல்பாடுகள் குறித்து பத்ரியிடம் கேட்டபோது, ``மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மட்டும் இந்தக் குழு கூடியது. அதில் நான் கலந்துகொண்டேன். பாடப்புத்தகங்கள் தவிர்த்து, வேறு புத்தகங்களை ஒருகாலத்தில் பாடநூல் நிறுவனம் பதிப்பித்துக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமூகவியல், உளவியல் போன்ற பாடங்கள் தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கான `ரெஃபரன்ஸ்’ புத்தகங்களாக அவை கொண்டுவரப்பட்டுள்ளன. அவை, அருமையான புத்தகங்கள். அந்தப் பணி ஒருகட்டத்தில் நின்றுவிட்டது. எனவே, அந்த மாதிரியான புத்தகங்களைக் கொண்டுவருவது தொடர்பாகத்தான் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பலரும் அது குறித்து ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.

கருணாநிதியின் யானைப் பாசம் முதல் ‘காட்டுராஜா’வின் வசூல் வேட்டை வரை.. கழுகார் அப்டேட்ஸ்!
மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். மீண்டும் நிறைய புத்தகங்கள் கொண்டுவர வேண்டும் என்று சொன்னார். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து அவர் பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, அந்தக் குழுவின் கூட்டம் எதுவும் நடக்கவில்லை.

அப்போது, பூ.கோ.சரவணன் மீது எந்தச் சர்ச்சையும் இல்லை. அவர் நிறைய வாசிக்கக்கூடியவர். புத்தகங்கள் பற்றி நிறைய குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தவர். பிறகு, அரசுப் பணியிலும் சேர்ந்தார். அவர் பற்றி இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், என் தனிப்பட்ட கொள்கைகள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். வலதுசாரி என்று மட்டுமல்ல, பி.ஜே.பி-காரன் என்றும் சங்கி என்றும் என்னை விமர்சிக்கிறார்கள். என் ஜாதி குறித்து விமர்சிக்கிறார்கள். என்னைப் பற்றி நான் எதையும் மறைக்கவில்லை. வேண்டுமென்றால் என்னிடம் ஆலோசனை கேளுங்கள். என்னை அழைக்கவில்லையென்றால், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை” என்றார் பத்ரி.

முன்னாள், இந்நாள் அரசுகளின் சிங்காரச் சென்னையும், பூர்வகுடி மக்களின் பிரச்னையும் -ஒரு விரிவான பார்வை

எழுத்தாளரும் மத்திய அரசு அலுவலருமான பூ.கோ.சரவணன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், அவர் இந்தக் குழுவில் இடம்பெற்றதை சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்தனர். அதனால், இந்தக் குழுவிலிருந்து விலகும் முடிவை பூ.கோ.சரவணன் எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழுவில் பட்டியலினத்தவருக்கு ஏன் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவிஞர் சுகிர்தராணி தன் முகநூல் பக்கத்தில், `தமிழ்நாடு அரசு நியமித்துள்ள அலுவல் சாரா கல்விக்குழு உறுப்பினர்கள் 14 பேரில் ஒருவர்கூட பட்டியலினத்தவர் இல்லை. பட்டியலின மாணவர்களின் கல்விப் பிரச்னைகளைப் பற்றிப் பேச பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் இல்லாதது வருத்தமளிக்கிறது.

பாலகுருசாமி
பாலகுருசாமி

பல ஆண்டுகளாக கல்விப் புலத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களாகப் பணிபுரிந்த அல்லது பணியிலிருக்கும் எழுத்தாளர் பாமா, பேராசிரியர் அரங்க மல்லிகா, எழுத்தாளர் அழகிய பெரியவன், பேராசிரியர் அரச முருகு பாண்டியன், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர்களில் ஒருவருக்காவது இந்தக் கல்விக்குழுவில் இடம் அளிக்கப்படாதது ஏன்... பட்டியலினத்தில் அறிவுஜீவிகளும் அறிஞர்களும் இல்லையென்று முடிவெடுத்துவிட்டார்களா?’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவல் சாரா கல்விக்குழு மாற்றியமைக்கப்படவிருப்பதாகவும், அதில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் தரப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு