Published:Updated:

டாஸ்மாக்: ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5, ரூ.10 விலை - என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?

``தமிழகத்திலுள்ள டாஸ்மாக்கில் நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கூடுதல் லாபம் எடுத்தால் மட்டுமே கடையை நடத்த முடியும்’’ என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் ராமும், துளசிதாஸும் விற்பனையாளர்களாகப் பணியாற்றிவந்தனர். சில தினங்களுக்கு முன்பு இரவு கடையைப் பூட்டிவிட்டு பைக்கில் சென்ற இவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானர். இதேபோல திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே டாஸ்மாக் பணம் ரூ.3 லட்சத்தை எடுத்துச் சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் பாலமுருகனிடம் வழிப்பறி நடந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கரூர்: டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்சம், பரிசுப்பொருள்?! - அதிரடிகாட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை
டாஸ்மாக்
டாஸ்மாக்

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதிலுமுள்ள டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அதில் டாஸ்மாக் ஊழியரைக் கொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், குடும்பத்துக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. டாஸ்மாக் ஊழியர்களுக்கு என்னதான் பிரச்னை என விசாரணையில் இறங்கினோம். `பெயர் வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கையுடன் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் தங்களின் ஆதங்கங்களைக் கொடித்தீர்த்தார்கள்.

`` `கடைக்கு முன் விலைப் பட்டியல் வைக்க வேண்டும்; ரசீது கொடுக்க வேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது’ எனக் கூறி பலரும் பிரச்னையில் ஈடுபடுகின்றனர். காஞ்சிபுரத்தில் எங்கள் ஊழியர் கொலைக்கு, கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்றதுதான் காரணம் எனக் கூறுகிறார்கள். ஒரு பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். அந்தத் தொகை அனைத்தையும் விற்பனையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு குடிமகன்கள் பிரச்னை செய்கின்றனர். கடை கட்டடத்துக்கு வாடகை, கரன்ட் பில், வெள்ளையடிப்பது உள்ளிட்ட கட்டடப் பராமரிப்புச் செலவு, ஃபிரிட்ஜ்களில் பழுது உள்ளிட்ட மின்சாதனங்களுக்கான செலவு, லாரிகளிலிருந்து சரக்கு இறக்கும் கூலி ஆகியவற்றை நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக லாரிகளிலிருந்து ஒரு முறை சரக்கு இறக்கவே ரூ.1,000 செலவாகும். இதுமட்டுமா... மாவட்ட மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், போலீஸாருக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. கட்டிங் முறையாகக் கொடுக்கவில்லை என்றால் கடையை நடத்தவிட மாட்டார்கள். மேலும் அவர்கள் பணம் வாங்குவதோடு எங்களை விடுவதில்லை. ஓசியில் மதுபாட்டில்களையும் வாங்கிச் செல்கிறார்கள்.

டாஸ்மாக் பார்
டாஸ்மாக் பார்

இதற்காகவே குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.5, பீர் பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை விலை வைத்து விற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்தும்கூட கடைநிலை ஊழியர்களான எங்கள்மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, அவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். டாஸ்மாக் அதிகாரிகளைப் பகைத்துக்கொண்டாலும் எங்களுக்குச் சிக்கல்தான். உரிய நேரத்தில் சரக்கு வராது. கேட்கும் சரக்குகளைத் தர மாட்டார்கள். அது மட்டுமின்றி வேறு கடைகளுக்கு எங்களைப் பணியிட மாறுதல் செய்துவிடுவார்கள். நஷ்டம் எங்களுக்குத்தான். நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கூடுதல் லாபம் எடுத்தால் மட்டுமே டாஸ்மாக் கடையை நடத்த முடியும். லோக்கல் விஐபி முதல் ரெளடிகள் வரை அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கிறது. இவ்வளவு ரிஸ்க் எடுத்துப் பணியாற்றும் நாங்கள் மதுபாட்டில்களைக் கூடுதலாக விற்கும் தொகையிலிருந்து சொற்பான தொகையைக்கூட எடுத்துச் செல்ல முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக்கை ஒட்டியுள்ள பார்களுக்கு தற்போது வரை அனுமதியில்லை. இதனால் டாஸ்மாக் கடைகளின் அருகே நின்றுகொண்டும், அமர்ந்தும் குடிமகன்கள் மது அருந்துகின்றனர். இரவு 8 மணிக்குக் கடை மூடப்பட்ட பிறகும் கடை வாசல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது அருந்துகின்றனர். அவர்கள் அனைவரும் எங்களை எதிரிகள்போலப் பார்க்கின்றனர். இரவு 8 மணிக்குக் கடை மூடப்பட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் கடைக்குள் அமர்ந்து கணக்கு வழக்குகளை முடித்த பின்னரே விற்பனையாளர்கள் வீடு திரும்பும் நிலை இருக்கிறது. தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டுப்பயிருக்கிறது.

கடை
கடை

இதைத் தொடர்ந்து போலீஸார், கடைகளில் பணத்தை வைத்துவிட்டுச் செல்லக் கூடாது. விற்பனையாளர்கள் வீடுகளுக்குக் கொண்டு செல்லுங்கள் எனக் கட்டாயப்படுத்துகின்றனர். இவ்வாறான நிலையில், பணத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதென்பது பெரும் சவாலான காரியம். இதற்காகத்தான் டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்’’ என்றனர். ``பிரச்னையின் வேர் எதுவென்று பார்த்து சரிசெய்வதை விட்டுவிட்டு, ரிஸ்க் எடுத்துப் பணியாற்றும் எங்களை பலிகடாவாக்குகின்றனர்’’ என்கிற டாஸ்மாக் ஊழியர்களின் குரலுக்குத் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

இது குறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். `பெயர் வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கையுடன் பேசினார்.

`` டாஸ்மாக் கடைகள் முன் விலைப் பட்டியல் வைக்கப்பட்டிருக்கிறது. ஊழியர்களும் வேறு வழியில்லாமல்தான் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். தமிழக அரசு தலையிட்டுத்தான் இதற்கு தீர்வுகாண வேண்டும். கடை வாடகை, மின் கட்டணம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை ஏற்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். அதிகாரிகள் சரக்குகளைக் குறைந்து அனுப்புவதாகக் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. டாஸ்மாக் கடைகளுக்குள் மிகவும் கனமான பாதுகாப்பான இரும்பு பெட்டகம் வைக்கப்பட்டுள்ளது. அதில் கலெக்‌ஷன் பணத்தை வைத்துச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறோம். தற்போது பெரும்பாலான இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பது குறைந்திருக்கிறது. எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்துவருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு