Published:Updated:

` நடிகர் சூர்யா Vs பாஜக'; தொடரும் கருத்து மோதல்; மைலேஜ் யாருக்கு?

நடிகர் சூர்யா Vs பாஜக
நடிகர் சூர்யா Vs பாஜக

`அகரம்' அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றிவரும் நடிகர் சூர்யா, அதே ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் நீட் தேர்வை நீண்டநாள்களாக எதிர்த்துவருகிறார்!

முன்னணி நடிகர்கள் தங்களது திரைப்படங்களிலும், பொது மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளுக்கு எப்போதுமே பெரிய ரீச் இருக்கும். அந்த வகையில் சமீபகாலங்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிடும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

புதியக் கல்விக் கொள்கை, நீட் தொடங்கி சமீபத்திய ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா வரை பல்வேறு விஷயங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. அவர் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவிக்கும் அதேநேரத்தில், சூர்யாவுக்கான ஆதரவுக் குரல்களும் எழுப்பப்பட்டுவருகின்றன.

சூர்யா - ரஜினி
சூர்யா - ரஜினி
தஞ்சை: `மோடி பிறந்தநாளில் பேசும் அளவுக்கு நடிகர் சூர்யா பெரிய ஆள் இல்லை!’- ஜீவஜோதி

எதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் சூர்யா?

2019-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையையும், அதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்த சூர்யா, அது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அந்தச் சமயத்தில் பா.ஜ.க-வினர் பலரும், `சூர்யாவுக்கு ஏன் இந்த வேலை' என்பது போன்ற எதிர்க்கருத்துகளைப் பதிவுசெய்தனர். பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி ஶ்ரீனிவாசன் சூர்யா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி நிகழ்ந்த சூர்யாவின் `காப்பான்' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி...

புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்றார்கள் சிலர். ஆனால், சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நானும் சூர்யாவின் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.
நடிகர் ரஜினிகாந்த்

சூர்யாவின் கருத்தை ரஜினி ஆதரிப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சூர்யா முன்வைத்த கருத்துகள் இந்திய அளவில் கவனம்பெற்றன.

2020-ம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ``நீட் போன்ற மனுநீதித் தேர்வுகள், எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமன்றி உயிர்களையும் பறிக்கின்றன'' என்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சூர்யா.

`அகரம்' அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றிவரும் நடிகர் சூர்யா, அதே ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் நீட் தேர்வை வெகு நாள்களாக வலுவாக எதிர்த்துவருகிறார்!
அகரம் - சூர்யா
அகரம் - சூர்யா

சமீபத்தில் நீட் தேர்வின் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது தமிழ்நாடு அரசு. இதையடுத்து நீட் தொடர்பாக மீண்டுமோர் அறிக்கையை வெளியிட்டார் சூர்யா. அதில், ``ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூகநீதிக்கு எதிரானது. தங்கள் எதிர்காலத்துக்காக 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி படித்த பிறகும் நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களைப் பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி'' என்று குறிப்பிட்டதோடு, ஏ.கே.ராஜன் குழுவுக்கு நீட் தேர்வு பாதிப்புகளை மின்னஞ்சல் மூலம் அனைவரும் அனுப்பிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் சூர்யா. மேலும் அந்த அறிக்கையில்...

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாசார வேற்றுமைகளைக்கொண்ட நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே நிரந்தரத் தீர்வு. கல்வி மாநில உரிமை என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நடிகர் சூர்யா

மேற்கண்ட அறிக்கை வெளியான பின்பு பேசிய பா.ஜ.க-வின் அண்ணாமலை, ``நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை வரம்பைத் தாண்டும் வகையிலிருந்தது. நீட் தேர்வு முடிவுகள் வந்த பின்னர், நடிகர் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்'' என்றார்.

கல்வி மட்டுமல்ல..!

கல்வி சார்ந்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களுக்குத் தவறாமல் கருத்து தெரிவித்துவந்த சூர்யா, கல்வியைத் தாண்டி சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களுக்கும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது தம்பியும் நடிகருமான கார்த்தியின் `உழவன்' அமைப்பின் சார்பில், மத்திய அரசு கொண்டுவந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, புதிய வேளாண் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் சூர்யா. இந்த வரிசையில், தற்போது ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் திருத்த மசோதாவுக்கு, ``சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக... குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல'' என்று ட்விட்டரில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார் சூர்யா.

கார்த்தி - சூர்யா
கார்த்தி - சூர்யா

சூர்யா Vs பா.ஜ.க!

தொடர்ந்து மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்துவரும் நடிகர் சூர்யாவுக்கு எதிராகக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (4.7.2021) அன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க இளைஞரணி. பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ்.பி.செல்வம், ``மாணவர்களைக் குழப்பும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக, உண்மைக்கு மாறான தகவலைப் பரப்பிவருகிறார் நடிகர் சூர்யா. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காகத் தொடர்ந்து எதிர்க்கிறார். நடிகர் சூர்யா இதை இத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லையென்றால், பா.ஜ.க. இளைஞரணி சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்போம்'' என்றார்.

திரைக் கலைஞர் சூர்யாவை மிரட்டும் நோக்கத்துடன் பா.ஜ.க-வினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு.
கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இது குறித்து பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும், ``கடந்த சில ஆண்டுகளாக வெளியான சூர்யாவின் எந்தப் படமும் ஓடவில்லை. அதனால் விளம்பரம் தேடிக்கொள்ள நினைத்து இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார். படத்தை ஓடிடி-யில் ரீலிஸ் செய்ததால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் ஆதரவையும் இழந்துவிட்டார் சூர்யா. இதனால் திரையுலகில் நம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற அச்சத்தில், மத்திய அரசுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார்'' என்கின்றனர்.

சூர்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் அவரது ரசிகர்கள், ``அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்குக் கல்வி அளித்துவரும் சூர்யா, மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கல்வி சார்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது எந்த வகையிலும் தவறாகாது. தான் சார்ந்திருக்கும் திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படும்போது, சூர்யா சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியானது. இந்தக் கருத்துகளுக்கு பா.ஜ.க-வினர் விளக்கம் தரலாமே தவிர, அவரை வசைபாடுவது சரியாகாது'' என்கின்றனர். ​

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா
சினிமாவின் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 சொல்வது என்ன?

யாருக்கு மைலேஜ்?

பா.ஜ.க-வினர், சூர்யாவுக்கு எதிராகப் பேசிவருவதும், தீர்மானம் நிறைவேற்றியதும் யாருக்கு மைலேஜை அதிகப்படுத்தும் என்பது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள் சிலர், `` `மெர்சல்’ படத்தில் விஜய் ஜி.எஸ்.டி-க்கு எதிராகப் பேசியபோது, பா.ஜ.க-வினர் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். இதன் விளைவாக இந்தியா முழுவதும் `மெர்சல்’ படத்துக்கு ஆதரவு பெருகியது. `மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகளால் விஜய் அழைத்து வரப்பட்டபோதும், விஜய்க்கான மைலேஜ்தான் அதிகரித்தது. மக்கள் ஆதரவு பெற்ற தனிமனிதருக்கு எதிராகக் கட்சிகள் நிற்கும் பட்சத்தில், அது அந்த தனிமனிதருக்கான ஆதரவைத்தான் பெருக்கும். அதேபோல சூர்யாவுக்கு எதிராக பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கியிருப்பது சூர்யாவுக்கான மைலேஜைத்தான் அதிகரிக்கும்'' என்கிறார்கள் தெளிவாக!

அடுத்த கட்டுரைக்கு