Published:Updated:

`PM - CARES அரசு நிதி அல்ல’ எழுந்த கேள்விகள்; வராத பதில்கள்!

`PM - CARES, அரசு நிதி அல்ல’ என்று நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பது, பிரதமரை கௌரவத் தலைவராகக்கொண்ட ஓர் அறக்கட்டளை வசூலிக்கும் நிதியை அரசு நிதி இல்லை என்று சொல்லியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, கொரோனா நிவாரணத்துக்காக, `பிரதமர் - அவசரகால நிலைமைகளுக்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி’ (Prime Minister Citizens Assistance and Relief Emergency Situations Fund -PM CARES) என்ற அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு, மார்ச் 28-ம் தேதி மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறக்கட்டளையின் கௌரவத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி, அறங்காவலர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இருக்கின்றனர்.

மோடி
மோடி

`PM - CARES-க்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்குங்கள்!' என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தாராளமாக நிதி வழங்கினர். இது தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் மட்டும் ரூ.6,500 கோடி வசூலானதாகச் செய்திகள் வந்தன.

அதேநேரத்தில், இந்த நிதி தொடர்பாகப் பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்தன. இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக `பிரதமர் தேசிய நிவாரண நிதி’ நீண்டகாலமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, `PM - CARES என்று புதிய அமைப்பு ஏன்?’ என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், `பிரதமர் தேசிய நிவாரண நிதி’ மிகவும் வெளிப்படைத்தன்மைகொண்டது. அதன் கணக்கு வழக்குகளை சி.ஏ.ஜி-யால் தணிக்கை செய்ய முடியும். அப்படியிருக்கும்போது, நிதி தொடர்பான ஓர் அமைப்பை வெளிப்படைத் தன்மையற்றதாக ஏன் அரசே தொடங்க வேண்டும் என்று அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது.

மோடி
மோடி

இந்தநிலையில், பெங்களூரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான ஹர்ஷா கண்டுகுரி என்பவர், PM - CARES குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார். PM - CARES உருவாக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள், அதன் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள், அரசாணைகள், உத்தரவுகள், சுற்றறிக்கைககள், அறிவிப்பாணைகள் போன்ற விவரங்களை வழங்குமாறு அவர் கோரியிருந்தார். அதற்கு, `தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM - CARES வராது’ என்று பிரதமர் அலுவலகம் பதிலளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், `PM - CARES ஒரு பொது அமைப்பு அல்ல. மத்திய அரசின் தணிக்கை அமைப்பான சி.ஏ.ஜி-யின் வரம்புக்குள் இது வராது. இந்த நிதி செலவழிக்கப்படும்விதம் குறித்து அரசின் தணிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப முடியாது‘ என்று கூறப்பட்டது. மேலும், `PM - CARES ஒரு தொண்டு அமைப்பு. இது, தனிநபர்களிடமிருந்து வரும் நன்கொடைகளை அடிப்படையாகக்கொண்டது’ என்று சி.ஏ.ஜி கூறியது.

PM - CARES நிதிக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகளிடமிருந்து PM - CARES-க்கு பெருமளவில் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

PM CARES
PM CARES

இந்தநிலையில், PM - CARES குறித்து சம்யக் அகர்வால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

``PM - CARES அரசின் அமைப்பு அல்ல என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசின் பெயர், பிரதமரின் புகைப்படம், அரசின் இலச்சினை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த நிதியத்தின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கை செய்து, நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். PM - CARES நிதி அரசுக்கு உரியதில்லையென்றால், PM - CARES நிதியில் பிரதமர் பெயரை, இணையதளம் உள்ளிட்டவற்றில் வெளியிடுவதைத் தடுக்க வேண்டும்” என்று தனது மனுவில் சம்யக் அகர்வால் கூறியிருந்தார்.

``PM - CARES நிதியத்தை அரசாங்க அமைப்பாக அறிவிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட விவரங்களை வழங்க மத்திய பொதுத் தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். எனவே, அரசு அமைப்பாக PM - CARES -ஐ அறிவிக்க வேண்டும்” என்று வேறொருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்துவருகிறது. டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல், நீதிபதி அமித் பன்சால் ஆகியோர் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

அப்போது, PM - CARES நிதி குறித்து பிரதமர் அலுவல இணைச் செயலர் பிரமாணப் பத்திரம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், `PM - CARES அறக்கட்டளையில் பிரதமர் அலுவலகம் கௌரவ அடிப்படையில்தான் செயல்படுகிறது. அறக்கட்டளையின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக உள்ளன. மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத்துறையின் அறிவுரையின்படி தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்படுகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய, PM - CARES அறக்கட்டளை இணையதளத்தில் தணிக்கை அறிக்கையும், நிதி பெறப்பட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM CARES
PM CARES

மேலும், `PM - CARES நிதி அறக்கட்டளை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. எந்தச் சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை. PM - CARES நிதி அரசின் நிதியும் அல்ல. தாமாக முன்வந்து அளிக்கும் தனிநபர், நிறுவனங்களின் நன்கொடையை மட்டுமே PM - CARES நிதி பெறுகிறது. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகத்தால் இதைத் தணிக்கை செய்ய முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற PM - CARES பொது அமைப்பு அல்ல. எனவே, தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அறக்கட்டளையின் செயல்பாடுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மத்திய அரசோ, மாநில அரசோ கட்டுப்படுத்தாது. நன்கொடைகள் அனைத்தும் ஆன்லைன், காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே பெறப்படுகின்றன. தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையும், செலவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன’ என்றும் பிரதமர் அலுவலக இணைச்செயலரின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு - நடைமுறை குழப்பத்தால் ஆண்களுக்கு பாதிப்பா?

அந்த பிரமாணப் பத்திரத்தில் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்பத்திலிருந்து எழுப்பப்பட்டுவரும் அடிப்படையான கேள்விகள் எதற்கும் பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் அளிக்கப்படவில்லை. இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக `பிரதமர் தேசிய நிவாரண நிதி’ நீண்ட காலமாக இருந்துவரும்போது, கொரோனா நிவாரணத்துக்காக இதைப் பயன்படுத்தாமல், எதற்காக புதிதாக `PM - CARES நிதி’ தொடங்க வேண்டும்... மத்திய அரசுக்கும் PM - CARES நிதிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால், எதற்காக பிரதமரின் புகைப்படமும் பிரதமர் என்ற பெயரும் இடம்பெற வேண்டும்?

மோடி
மோடி

அறக்கட்டளையின் செயல்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்தாது என்றால், அதன் அதிகாரபூர்வ தொடர்பு அதிகாரியாக பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் ஏன் நியமிக்கப்பட வேண்டும்? PM - CARES, அரசின் நிதி அல்ல என்றால் நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளிடம் ஒரு நாள் ஊதியத்தை PM - CARES நிதிக்கு அளிக்குமாறு சுற்றறிக்கையே வெளியிடப்பட்டது ஏன்... என்று அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கின்றன. PM - CARES என்ற பெயரில் பெரும் சூறையாடல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பிரதமர் அலுவலகம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறது. பொதுவெளியில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய கடமை பிரதமருக்கு இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு