Published:Updated:

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி உருவான வரலாறு' - சிறப்புப் பகிர்வு!

`இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகா மாநிலத்தைப்போல, தமிழ்நாடு மாநிலத்துக்கும் தனிக்கொடி ஒன்றை அறிவிக்க வேண்டும்.’

``தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்" என்ற கோரிக்கை தீவிரமாக வலுப்பெற்றுவருகிறது. `இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகாவைப்போல, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி ஒன்றை அறிவிக்க வேண்டும்' எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர். இந்த நேரத்தில், தமிழ்நாட்டுக்கொடி பல்வேறு காலகட்டங்களில், பல்வேறுவிதமாகப் பரிணமித்துவந்த வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்!

மூவேந்தர்களின் கொடி
மூவேந்தர்களின் கொடி
Social Media

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடிகள் உருவான காலமும், அவை கடந்து வந்த வரலாற்றுப் பாதையும்...

* அகண்ட தமிழ்நாடானது மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று நாடுகளாக ஆட்சி செய்யப்பட்டுவந்தது. அவற்றுள் சேரநாட்டின் கொடியாக வில் அம்பும், சோழநாட்டின் கொடியாகப் பாயும் புலியும், பாண்டிய நாட்டின் கொடியாக இரட்டை மீன்களும் தனித்தனியே தமிழர் கொடிகளாகப் பறந்தன. அதன் பின்னர், களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், வெள்ளையர்கள் உள்ளிட்ட அந்நிய நாட்டு மன்னர்களின் ஆட்சிகளால், தமிழ் மன்னர்களான மூவேந்தர்களின் கொடிகள் பல நூற்றாண்டுகளாகத் தங்களது இடைக்கால வரலாற்றை இழந்தன. ஆனால், மீண்டும் 20-ம் நூற்றாண்டில் தனது வரலாற்றை எழுதத் தொடங்கின.

* 1938-ம் ஆண்டு, சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் இந்திமொழியைக் கட்டாயமாக்கினார். அதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிரமான இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர். அந்தப் போராட்டத்தில், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களின் கொடிச் சின்னங்களான வில், புலி, மீன் கொடிகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட, ஒற்றைக்கொடியே `தமிழ்க்கொடி'யாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1938,  மொழிப்போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி
1938, மொழிப்போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி
Twitter

குறிப்பாக, 1939-ம் ஆண்டிலும் தொடர்ந்த அந்தப் போராட்டத்தில், 14 வயது சிறுவனாகக் கலந்துகொண்ட கருணாநிதி, இந்தத் தமிழ்க்கொடியைத்தான் கையில் ஏந்திச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.பா. ஆதித்தனார்
சி.பா. ஆதித்தனார்

* 1942-ம் ஆண்டில் `தமிழ் ராச்சியக் கட்சி'யைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனார் `தமிழப்பேரரசு' என்ற நூலை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு இலச்சினையாக மூவேந்தர்களின் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார். பின்னர் 1957-ம் ஆண்டு தனது கட்சியை `நாம் தமிழர்' இயக்கமாகப் பெயர் மாற்றி, 1958-ல் `சுதந்தரத் தமிழ்நாடு' மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டிலும் மூவேந்தர்கள் கொடி பயன்படுத்தப்பட்டதாக மூத்த அரசியல் ஆர்வலர்கள் பலராலும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* 1946-ம் ஆண்டில் `தமிழரசுக் கழகம்' என்ற இயக்கத்தை ம.பொ.சி தொடங்கினார். தனது இயக்கத்தின் கொடியாக ஒன்றிணைந்த மூவேந்தர்களின் கொடியையே பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள் என்றிருந்த சென்னை மாநகராட்சிக் கொடியை மாற்றியமைத்து, மூவேந்தர்களின் 'வில், புலி, மீன்' சின்னங்கள் அடங்கிய கொடியை, சென்னை மாநகராட்சியின் புதிய கொடியாக ம.பொ.சி பறக்கவிட்டார்.

ம.பொ.சி. வடிவமைத்த சென்னை மாநகராட்சிக் கொடி
ம.பொ.சி. வடிவமைத்த சென்னை மாநகராட்சிக் கொடி

* 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், கோவை விவசாயக் கல்லூரி மாணவர் ராமசாமி தலைமையில் அதிக அளவில் மாணவர்கள் அணிதிரண்டனர். பேரணியாகக் கோவை வ.உ.சி மைதானத்துக்குச் சென்ற அவர்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த, தமிழ்நாடு வரைபடம் அடங்கிய ஒரு கொடியை, `தமிழ்நாட்டுக்கொடியாக' மைதானத்தில் ஏற்றினார்கள். பின்னர், `தமிழ்நாடு வாழ்க' என கோஷமிட்டு தங்களின் தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

1970-களில் கருணாநிதி அறிமுகப்படுத்தியக் கொடி
1970-களில் கருணாநிதி அறிமுகப்படுத்தியக் கொடி
விக்கிபீடியா

* 1970-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, `மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி வேண்டும் எனப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து கோரிக்கை முன்வைத்தார். அப்போது, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தான் வடிவமைத்து வைத்திருந்த தமிழ்நாட்டின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

``ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்; விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்
கொடியுடன் கருணாநிதி
கொடியுடன் கருணாநிதி
சமூக வளைதளம்

அந்தக் கொடியின் வலது மேற்புறத்தில் இந்திய தேசியக்கொடியும், இடது கீழ்ப்பகுதியில் தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும் இடம்பெற்றிருந்தன. பின்னர், இந்தக் கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

* 1980-களில் `சாதி ஒழிப்பே... தமிழ்நாடு விடுதலை' எனக் கூறி ஆயுத வழியில் போராடிய தமிழரசனின் `தமிழ்நாடு விடுதலைப் படை' அமைப்பு சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் ஐந்து நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு கொடியைத் தமிழ்நாட்டுக்கொடியாகப் பறக்கவிட்டது.

தமிழ்நாடு விடுதலைப்படை கொடி
தமிழ்நாடு விடுதலைப்படை கொடி
விக்கிபீடியா

* 1990-களின் பிற்பகுதியில், தமிழ்நாடு விடுதலைப் படை பயன்படுத்திவந்த தமிழ்நாட்டுக் கொடியில், ஏறுதழுவுதல் இலச்சினையையும் சேர்த்து, தமிழ்நாட்டுக்கொடியாக வீரப்பனால் காட்டுக்குள் பறக்கவிடப்பட்டது.

கொடியுடன் வீரப்பன்
கொடியுடன் வீரப்பன்
ட்விட்டர்

* 2010-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் `தமிழர் இறையாண்மை மாநாட்டை' நடத்தினார். அந்த மாநாட்டில் சிவப்பும், மஞ்சளும், நீலமும், நட்சத்திரமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' அறிவித்து, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் கைகளால் வெளியிட்டார்.

தொல்.திருமாவளவனால் `தமிழர் இறையாண்மை மாநாட்டில்’ அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி
தொல்.திருமாவளவனால் `தமிழர் இறையாண்மை மாநாட்டில்’ அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி
முகநூல்

* 2016-ம் ஆண்டு, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உருவாக்கிய `நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவு' ஏட்டில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் அடங்கிய கொடி தமிழ்நாட்டின் கொடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீலநிறம்கொண்ட அந்தக் கொடியில் `வெல்க தமிழ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர், ஜல்லிக்கட்டுப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட போராட்டங்களில் இந்தக் கொடி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

* 2018-ம் ஆண்டு `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்ற அமைப்பின் சார்பில், சிவப்புநிறக் கொடியின் நடுவே மஞ்சள் நிறப் பின்புலத்தில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த கொடி `தமிழ்நாட்டுக்கொடியாக' வெளியிடப்பட்டது.

சீமானின் நாம் தமிழர் கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டுக்கொடி
சீமானின் நாம் தமிழர் கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டுக்கொடி
ட்விட்டர்

* 2019-ம் ஆண்டு, தமிழ் உணர்வாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, நவம்பர் 1-ம் தேதியை `தமிழ்நாடு' நாளாக அறிவித்தது. மேலும், அந்த நாளை அரசு விழாவாகவும் அறிவித்து அரசாணையும் வெளியிட்டது.

தமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்
தமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்

* அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' சார்பில் `வெள்ளைக்கொடியில் சிவப்பு தமிழ்நாடு வரைபடம்' அடங்கிய கொடி ஒன்று தமிழ்நாட்டுக்கொடியாக வடிவமைக்கப்பட்டது. அதை, பொழிலன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். பின்னர், நவம்பர் 1-ம் நாள் அந்தக் கொடி ஏற்றப்பட்டு தமிழ்நாடு நாளும் கொண்டாடப்பட்டது. அதேபோல், நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகள் மூவேந்தர் கொடியைத் தமிழ்நாட்டுக்கொடியாக அந்த நாளில் ஏற்றிக் கொண்டாடினர்.

தமிழ்நாடு நாள் விழா - நாம் தமிழர் கட்சி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு நாள் விழா - நாம் தமிழர் கட்சி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், அரசுகள் தங்களுக்கென தனித்தனியே கொடிகளை அடையாளப்படுத்தி, ஏற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. அதேபோல, ``தமிழ்நாட்டுக்கும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியை அரசே வடிவமைத்து, வெளியிட வேண்டும்" என பெரியாரிய உணர்வாளர்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு