Published:Updated:

தேமுதிக-வைக் கைகழுவும் தொண்டர்கள்... விஜயகாந்த் கொந்தளிப்பின் பின்னணி என்ன?

இந்த அறிக்கை வெளியிட விஜயகாந்த்தைத் தூண்டியது எது, அதன் பின்னணி என்ன என்பது குறித்த ஓர் அலசல்.

``தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கழகம் தே.மு.தி.க என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். மக்கள் நலன் கருதி ரசிகர் மன்றமாக இருந்து பின்னாளில் கழகமாக உயர்வதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் நீங்கள்தான். உங்கள் அத்தனை பேரின் விருப்பத்தையும் வேண்டுதலையும் ஏற்று, கடந்த 2000-ம் ஆண்டில் ரசிகர் மன்றத்துக்கான கொடியை அறிமுகப்படுத்தி, 2005-ம் ஆண்டு கழகமாகவும் அரசியல் கட்சியாகவும் உங்கள் விருப்பத்துக்கிணங்க மாற்றுவது என முடிவு செய்தோம். அதன்படி, உலகம் வியக்கும் அளவுக்கு பிரமாண்ட மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி தே.மு.தி.க-வை உருவாக்கினோம். இன்றைக்கு மூளைச்சலவை செய்பவர்களின் பேச்சை நம்பியும், ஆசைவார்த்தைகளைக் கூறுபவர்களை நம்பியும் கழகத்தைவிட்டு நீங்கள் செல்வது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கழகத்துக்கும் செய்யும் துரோகமாகக் கருதுகிறேன். மாற்று அணியினர் கூறும் ஆசைவார்த்தைகளுக்கு இணங்கி, அவர்களுடன் நீங்கள் செல்லும்போது அது உங்களை பலவீனமானவர்களாகக் காட்டும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும். எனது உடல்நிலையில் சற்றுத் தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தே.மு.தி.க-வுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்தான். 100 ஆண்டுகள் ஆனாலும் தே.மு.தி.க-வை யாராலும் அழிக்க முடியாது. இனிவரும் காலங்களில் வளர்ச்சிப் பாதையை நோக்கி இணைந்து செல்வோம்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் அறிக்கை
விஜயகாந்த் அறிக்கை

இந்த அறிக்கை வெளியிட விஜயகாந்த்தைத் தூண்டியது எது?

களத்துக்கு வந்த புரட்சி நாயகன்... நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த கதை!

``கடந்த சில ஆண்டுகளாகவே தே.மு.தி.க-வின் பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் உடல்நிலை மிக மோசமடைந்திருக்கிறது. அதையொட்டி அவர் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால், விஜயகாந்த்தால் கட்சிப் பணிகளைக் கவனிக்க முடியாமல் போகவே, கட்சியின் நேரடி அரசியல் நடவடிக்கைகளை அவரின் மனைவி பிரேமலதாவும், பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ், விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரே கவனித்துவருகின்றனர். என்னதான் இவர்கள் கட்சியை கவனித்து வந்தாலும் விஜயகாந்த் செயல்பட முடியாமல் போனதிலிருந்தே கட்சியும் தொடர்ந்து பல்வேறு வீழ்ச்சிகளைச் சந்தித்துக்கொண்டேவருகிறது. விஜயகாந்த்துடன் தொடக்கத்தில் உடனிருந்த பல முக்கிய நிர்வாகிகள் இன்று மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். ஒருகாலத்தில் தே.மு.தி.க-வைத் தங்களது கூட்டணியில் இணைத்துக்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க-வே காத்துக்கொண்டிருந்த நிலை மாறி, தற்போது அனைத்துக் கட்சிகளும் கூட்டணிக் கதவை இழுத்து மூடும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்
சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்

சட்டப்பேரவைத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, 80 தொகுதிகளில் போட்டியிட்டு, ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் தவித்த தே.மு.தி.க., தற்போது நடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தது” எனக் கட்சியிலிருக்கும் பிரச்னைகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் விளக்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானதுதான் என்றாலும், தலைவர்கள் தரும் ஊக்கம்தான் அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த தேர்தலைச் சந்திக்கும் உற்சாகத்தைத் தொண்டர்களுக்குக் கொடுக்கும். ஆனால், தே.மு.தி.க-வில் அப்படியான தலைவர்கள் யாரும் இல்லை. விஜய பிரபாகரன் மட்டுமே தான் பங்கேற்கும் கூட்டங்களிலெல்லாம் தே.மு.தி.க ஆட்சியைப் பிடித்துவிடும் எனப் பேசிவருகிறார். ஆனால், அரசியலில் அவருக்கு இருக்கும் அனுபவமின்மையால் அவரது பேச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. சட்டசபைத் தேர்தலில் மட்டுமல்ல, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் விருப்ப மனு தாக்கலுக்குக்கூட வேட்பாளர்கள் இல்லாத நிலைக்கு தே.மு.தி.க தள்ளப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்குக் கட்டமைப்பு மோசமாகிவிட்டது. மிகக் குறைந்த வாக்குவங்கியை வைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளையும் மதிக்காமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தே.மு.தி.க தலைவர்கள் செயல்பட்டுவருகிறார்கள் என்ற புகார் ஒவ்வொரு தேர்தலிலும் எழுந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பிரச்னைகளுக்குப் பெரிய அளவில் குரல் கொடுக்காததும் தே.மு.தி.க மீது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இழக்கச் செய்திருக்கிறது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

தேர்தலில் சந்திக்கும் தொடர் தோல்விகள், விஜயகாந்த்தின் உடல்நிலை, தற்போது இருக்கும் தே.மு.தி.க தலைமையின் மீதான அதிருப்தி போன்றவற்றால் பலரும் கட்சியிலிருந்து வெளியேறுவது தொடர்கதையாகியிருக்கிறது. இந்தச் சூழல் தொடர்ந்தால் தே.மு.தி.க என்ற கட்சி இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் என்பதாலேயே விஜயகாந்த் பெயரில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு