Published:Updated:

`மகனுக்குப் பதவி' - வைகோவுக்காக இறந்தவர்களின் ஆன்மாவுக்கு பதிலென்ன?

மதிமுக உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில், வைகோவின் மகன் துரை வையாபுரி தலைமை நிலையச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்திலேயே, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, `` எனக்கே தெரியாமல் துரை வையாபுரி, கடந்த சில வருடங்களாக மதிமுக கட்சிக்காரர்கள் சுப, துக்க நிகழ்வுகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டிருக்கிறார். கட்சிக்காரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்துவிடாமல் தடுக்க என்னால் முடிந்த மட்டும் முயன்றேன். தற்போது அதையெல்லாம் மீறிச் செயல்கள் நடைபெறுகின்றன" என்றார்.

வைகோ
வைகோ

மேலும், ``எங்களுக்கு நல்ல வழிகாட்டி வேண்டும் என்றும், அந்த அனைத்துத் தகுதிகளும் துரை வையாபுரிக்கு இருக்கிறது என்றும் தொண்டர்கள் கூறுகின்றனர். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அதுவே ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும். கடந்த 56 வருடங்களாக அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். என் மகன் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. அரசியல் என்னோடு போகட்டும். ஆனாலும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று (அக்.20) சென்னை எழும்பூரிலுள்ள ம.தி.மு.க-வின் தலைமைக் கழகமான தாயகத்தில் கட்சி உயர்நிலை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று பலரும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டது. மேலும், வைகோவின் மகன் துரை வையாபுரிக்குப் பதவி கொடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கோவை ஈஸ்வரன் போன்ற சில முக்கிய உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகப் பங்கேற்கவில்லை.

துரை வைகோ
துரை வைகோ

ரகசிய வாக்கெடுப்பு:

இந்தக் கூட்டத்தில் பேசிய வைகோ, ``கடந்த பொதுக்கூட்டம் வரையிலும் துரை கட்சிக்குள் வரக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருந்தேன். ஆனால், கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் இறுதி. காரணம், இது ஜனநாயக இயக்கம்" என்று பேசினார். வாக்கெடுப்பு நடத்துவது குறித்து உயர்மட்ட உறுப்பினர்களுக்கே எந்த முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென்று ரகசிய வாக்கெடுப்பு நடத்த வாக்குப்பெட்டியும், வாக்குச்சீட்டும் கொடுக்கப்பட்டன. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமில்லாத ஆர்.ஆர்.மோகன்குமார் போன்ற சில முக்கிய உறுப்பினர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் எனவும் தகவல்கள் வெளியாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரகசிய வாக்கெடுப்பு அமைப்புச் செயலாளர் கண்காணிப்பில் நடந்து முடிந்தது. இதில், துரைக்கு மொத்தம் 106 வாக்குகள் பதிவாகியிருந்தன. அவர்களில், மொத்தம் 104 பேர் அவருக்கு ஆதரவாகவும். 2 பேர் எதிராகவும் வாக்கு தெரிவித்திருந்தனர். இந்த வாக்கெடுப்பு முடிவைத் தொடர்ந்து துரை வையாபுரி தலைமைக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், இனிவரும் காலங்களில் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து பணியை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. தலைமைக் கழகச் செயலாளர் பதவி என்பது மதிமுக-வில் அதிகாரம் மிக்க பதவி. பொதுச்செயலாளரின் பெயரில் அறிக்கை வெளியிடுவது முதல் கட்சியின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிடுவது வரை பல்வேறு பணிகள் அடங்கும்.

வைகோ
வைகோ

மதிமுக-வில் நடக்கும் அரசியல் நிகழ்வு தொடர்பாக, அந்தக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். சில அரசியல் சூழல் காரணமாக, தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கையோடு நம்மிடம் பேசினார். ``ஒரு கட்சியின் முடிவுகளை, கொள்கைரீதியான முடிவுகள், அரசியல் சந்தர்ப்பம் காரணமான முடிவுகள் என்று பிரித்துப் பார்க்கலாம். தற்போது துரை வையாபுரி கட்சிக்குள் வந்திருப்பது அரசியல்ரீதியான ஒன்று. இத்தனை வருடங்களாக அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்த ஒரு விஷயம் அவர் மகன் அரசியலுக்கு வர மாட்டார் என்பதுதான். ஆனால், அது இப்போது பொய்யாகிப்போனது" என்றார்.

மேலும், ``இத்தனை ஆண்டுக்கால கட்சியில், கடந்த சில மாதங்களாகக் கட்சிப் பணி செய்த துரை மட்டும்தான் அந்தப் பதவிக்குத் தகுதியான நபரா... பல வருடங்களாகக் கட்சி பணி செய்து, எவ்வளவோ உழைத்த தகுதியான ஒரு கட்சி உறுப்பினர்கூடவா இல்லை? கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களும், நிர்வாகிகளும் துரை கட்சிக்குள் வருவதை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பம்தான் எல்லாம் என்று இப்போது அவர் சொல்கிறாரே... இதேதானே திமுக-வில் அவர் இருந்தபோது, ஸ்டாலினுக்குப் பதவி கொடுக்கும்போது நடந்தது?" என்று கூறினார்.

வைகோ
வைகோ

தொடர்ந்து பேசியவர், ``ஸ்டாலின் பதவிக்கு வரும்போது, அனைத்துமே முறைப்படி நடந்து பெரும்பான்மையானவர்கள் விருப்பப்படிதானே அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது... வாரிசு அரசியல் என்று எதை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியே வந்து புதிய கட்சித் தொடங்கினாரோ... இப்போது அதையேதானே வைகோவும் செய்துகொண்டிருக்கிறார்? துரைக்குப் பதவி வழங்கப்பட்டது குறித்து அவர் என்ன காரணம் சொன்னாலும் அது ஏற்புடையது கிடையாது என்பதுதான் உண்மை" என்றார்.

வைகோ வாழ்க்கை வரலாறு:  தொண்டரணி முதல் தனிக்கட்சி வரை..! - முழுமையான தொகுப்பு

மேலும், ``வைகோவை திமுக-விலிருந்து நீக்கப் பார்க்கிறார்கள் என்று, 1993-ம் ஆண்டு வைகோவுக்கு ஆதரவாக அடுத்தடுத்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் இந்த ஐவரும் தீக்குளித்து உயிரிழந்தனர். அன்று திமுக-வில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவுக்கு ஆதரவாகவும், வைகோவை திமுக-விலிருந்து விலக்கிவிடக் கூடாது என்பதற்காகவும் தங்களின் உயிரை நீத்தவர்கள் இவர்கள். இப்போது அதையேதான் வைகோ செய்கிறார்... அவருக்காக இறந்தவர்களின் ஆன்மாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் வைகோ?" என்றார்.

வைகோ
வைகோ

தொடர்ந்து பேசியவர், ``இறந்தவர்களின் ஆன்மா எப்படி மன்னிக்கும் இவரை? இதைத் தாண்டி, கடந்த 56 ஆண்டுகளாகத் தமிழகத்துக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டே, உழைத்துக்கொண்டே இருந்த தலைவர் வைகோ மட்டும்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தற்போது துரைக்கும் கட்சியில் பதவி கொடுத்திருப்பதால் கட்சி உறுப்பினர்கள் பலரும் கொள்கைரீதியில் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு