Published:Updated:

``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி?

திருமா Vs சீமான்
News
திருமா Vs சீமான்

`மரச்செக்கு எண்ணெய்க்கும், கருப்பட்டிக்கும் திரும்பியதுபோல, தமிழர்கள் மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்’ என்று சீமான் பேசியிருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சீமான் பேசியது என்ன?

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பனைச்சந்தைத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``நாங்கள் தமிழர்கள், எங்களின் வழிபாட்டு முறை வேறு, எங்களின் சமயம் வேறு, எங்களின் தெய்வங்கள் வேறு. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். சட்டப்படி இன்று இந்து என்கிறீர்கள். முன்பு சிவசமயம் என்றுதான் எழுதியிருக்கிறது. சிவனை வழிபடுவதால் எங்கள் சமயம் சிவசமயம். முருகனை வழிபடுவதால் சைவம். கண்ணனை வழிபடுவதால் வைணவம். வைணவம் என்பதைத் தமிழில் `மாலியம்’ என்கிறோம்.

பனைச்சந்தைத் திருவிழாவில் சீமான்
பனைச்சந்தைத் திருவிழாவில் சீமான்

வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தால் சீக்கியன், பார்சி, பௌத்தன், சைவன் என்று எல்லோரும் இந்துக்களாகக் கருதப்படுகிறோம். இதை நாங்கள் ஏற்கவில்லை. எதிர்க்கிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்துக்களே கிடையாது. ஆங்கிலேயர்கள் போட்ட சட்டப்படி நாங்கள் இந்து. தமிழர்கள் தங்களின் சமயங்களின் மீது இந்து பூசப்பட்ட அடையாளத்தை விட்டுவிட்டு, சைவம், மாலியம் என்று மீண்டு வர வேண்டும்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், `கிறிஸ்தவ, இஸ்லாமியச் சமயங்களைப் பற்றி நீங்கள் பேசுவதில்லையே' என்று கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, ``கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர்களின் சமயமே இல்லை. அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள். ஒன்று ஐரோப்பியச் சமயம். மற்றொன்று அரேபியச் சமயம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம் சிவசமயம்' என்றவர். ``மரச்செக்கு எண்ணெய்க்கும், கருப்பட்டிக்கும் திரும்பியதுபோல, தமிழர்கள் மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்" என்று பேசியிருந்தார்.

மதுரையில் தொல். திருமாவளவன்
மதுரையில் தொல். திருமாவளவன்

திருமாவளவன் என்ன பேசினார்?

மதுரையில் இயற்கை மருத்துவச் சிகிச்சை மையம் திறப்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ``இந்திய அரசு இயற்கை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதற்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரிகள் அதிகரிக்கின்றன. நான் ஏற்கெனவே சீமானுக்கு, சமூகநீதி அரசியல் பேசும் மண்ணில் சனாதன சக்திகளுக்குத் துணை போகும் வகையிலான அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதம் வேறு, ஆன்மிகம் வேறு. மதம் நிறுவனம், ஆன்மிகம் உணர்வு. நாம் தமிழர் கட்சி எதிர்பாராத வகையில், அரசியல் சனாதனவாதிகளுக்குத் துணை போகிறது. கிறிஸ்தவமும், இஸ்லாமியமும் உலகளாவிய மதங்களாக உருவாகியுள்ளன. இந்து மதம் உலக மதமாக ஏன் மாறவில்லை? சாதியின் பெயரால் பிரிவுகளைக்கொண்ட மதமாக இந்து மதம் இருப்பதால் உலக நாடுகள் ஏற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் எங்களுக்கானவர் என்று கூறுவதுபோல் சீமானின் செயல்பாடு மாறிவிட்டது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது ஜனநாயகம் மற்றும் நாட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. 2024-ல் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று பேசினார்.

மதுரையில் தொல். திருமாவளவன்
மதுரையில் தொல். திருமாவளவன்

கடந்த 16-ம் தேதி `கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்’ என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதுதான், ட்விட்டர் ஸ்பேசஸ் தொடங்கி பல்வேறு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பல்வேறு தரப்பினரும் பாஜக-வின், பி டீமாக சீமான் செயல்படுகிறார் என்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். சீமான் கூறிய கருத்துக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனம் எழுந்திருப்பது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம். ``தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்பதுதான் நாம் தமிழரின் கருத்து. இந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வரலாற்றின்படி, நாங்கள் இந்துக்கள் இல்லை. வில்லியம் ஜோன்ஸ் என்ற வெள்ளைக்காரர் போட்ட கையெழுத்தின் அடிப்படையில்தான் நாங்கள் இந்துக்கள் ஆக்கப்பட்டோம். கர்நாடகத்தில் லிங்காயத்துகள் அறிவித்ததுபோல, நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக இந்துக்கள் இல்லை என்றும், தமிழர்கள் சைவம், மாலியம் போன்ற தங்களின் சமயத்துக்குத் திரும்ப வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பரப்புரை செய்துவருகிறது. செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குக் கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் தமிழர்களின் சமயங்கள் இல்லை. ஒன்று அரேபியச் சமயம், இன்னொன்று ஐரோப்பியச் சமயம் என்று கூறி தன் உரையைத் தொடர்ந்தார். சீமான் கூறியது தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது. திராவிடத்தைச் சேர்ந்த பெரியாரும் அண்ணாவும், நாங்கள் இந்துக்கள் இல்லை என்று கூறினார்கள். ஆனால் இப்போது திமுக-வினரோ 90-சதவிகிதம் இந்துக்கள் என்று கூறுகின்றனர்.

இடும்பாவனம் கார்த்திக்
இடும்பாவனம் கார்த்திக்

நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு, கோட்பாடு தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்பதுதான். தமிழர்களின் பழைமையான மதமான சைவம், மாலியத்துக்குத் திரும்ப வேண்டும். `தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் `வெள்ளைக்காரன் சட்டம் போட்டு நம்மை எல்லாம் இந்துக்களாக அறிவித்ததால் நாம் தப்பித்தோம்' என்று காஞ்சிப் பெரியவர் சங்கராச்சார்யார் கூறியிருக்கிறார். ஆரியத்தின் அடிவேரான இந்து என்பதை வேரறுக்க வேண்டும். ஆரியச் சாதியை ஆட்டம்காண வைக்க வேண்டும். திராவிடக் கூடாரம் எங்களை இந்துத்துவத்தின் கைக்கூலிகள் என்று திசை திருப்பும் வேலைகளைச் செய்துவருகிறது. எங்களின் மீது வன்மம் கொண்டு, காழ்ப்புணர்ச்சி கொண்டு நடத்தப்படும் தாக்குதல். சைவம், மாலியத்துக்குத் திரும்புவது இந்து மதத்தில் உள்ளவர்களுக்குப் பொருந்துமே தவிர அது, இஸ்லாம், கிறிஸ்தவத்துக்குப் பொருந்தாது. இது திரித்துக் கூறப்பட்டுவருகிறது. இந்தியாவில் நடைபெற்ற முதல் மத மாற்றமே இந்துவாக மதம் மாற்றியதுதான்" என்றுகூறினார்.