Published:Updated:

அடுத்தடுத்த நிர்வாகிகள் நியமனம்... அண்ணாமலையின் அடுத்த ஸ்கெட்ச்!

அண்ணாமலை

தமிழக பாஜக-வில் சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் நிர்வாகிகள் நியமனம் கட்சி சீனியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த நிர்வாகிகள் நியமனம்... அண்ணாமலையின் அடுத்த ஸ்கெட்ச்!

தமிழக பாஜக-வில் சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் நிர்வாகிகள் நியமனம் கட்சி சீனியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
அண்ணாமலை

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் கட்சி உறுப்பினர்கள் மாற்றம் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகத்தைக் கலைத்த அண்ணாமலை, சமீபத்தில் கட்சி அமைப்புரீதியாக உள்ள 59 மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்களை நியமித்தார். தற்போது மாநில நிர்வாகிகள் நியமனத்தில் அவரின் ஆதரவாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டிருப்பது கட்சி சீனியர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியிருக்கிறதாம்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பாஜக-வில் என்ன நடக்கிறது என்று சில சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம். ``அண்ணாமலை மாவட்டத் தலைவர்களில் பட்டியலை ஒப்புதலுக்காகக் கட்சி மேலிடத்துக்கு அனுப்பியிருந்தார். மொத்தமுள்ள 59 இடங்களில் 50-க்கும் அதிகமானோர் அண்ணாமலையின் ஆதரவாளர்களாகத்தான் இருந்தார்கள். இந்தத் தகவலை, கட்சியின் மற்ற சீனியர்கள் உறுப்பினர்கள் டெல்லி தலைமையிடம் கூறினார்கள். இதையடுத்து, மற்றொரு பட்டியல் தயாரிக்க வலியுறுத்தப்பட்டது. அந்தப் பட்டியலிலும் 29 பேர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்தான். டெல்லி தலைமையிடம் பேசிய அண்ணாமலை, `கட்சியில் சீனியர்கள் பலரும் சரியாக ஒத்துழைப்பது கிடையாது. நான் கட்சியின் வளர்ச்சிக்காக ஏதாவது ஒரு செயலை முன்னெடுத்தாலும் அதை சீனியர்கள் பலரும் சீரியஸாக எடுத்துக்கொள்வது கிடையாது' என்று பல காரணங்களைச் சொல்லி அந்தப் பட்டியலை ஓகே செய்யவைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெல்லியில் முகாமிட்டிருந்த மற்ற உறுப்பினர்கள், அண்ணாமலை கட்சியின் சீனியர்களை மதிப்பது கிடையாது. எங்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்று பெரிய குற்றப் பத்திரிகையை வாசித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், சமீபத்தில் அமித் ஷா புதுச்சேரிக்கு வந்திருந்தார். அப்போது, அமித் ஷா அண்ணாமலையை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். `கட்சியில் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். சீனியர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். கட்சியின் பூத் கமிட்டியை வளர்க்கச் சொன்னால், உட்கட்சிப்பூசலை வளர்கிறீர்களா... அரசியல்ரீதியாகத்தான் நாம் வளர வேண்டும். அராஜக அரசியல் செய்ய நாம் மற்ற கட்சி கிடையாது' என்று மிகவும் அழுத்தமாகவும் பேசியிருந்தார்.

மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியான நிலையில், சமீபத்தில் அண்ணாமலை இலங்கை சென்றிருந்தார். இதனால், மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வெளியாகியுள்ள மாநில நிர்வாகிகள் பட்டியல் கட்சி சீனியர்கள் பலரையும் அதிருப்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது. கலை, கலாசார பிரிவு மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக, எல்.முருகனின் ஆதரவாளரான பெப்சி சிவக்குமார் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கெனவே நீக்கப்பட்டிருந்த பெப்சி சிவக்குமார் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது காயத்திரி ரகுராம் தரப்பினரிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, மாநிலத் துணைத் தலைவராக இருந்த எம்.என்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினராக மாற்றப்பட்டிருப்பது, அவரின் ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு ரங்கநாயகலு என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாஜக தமிழ்நாடு இளைஞரணித் தலைவராக இருந்துவந்த வினோஜ் பி.செல்வத்துக்கு மாநிலச் செயலாளர் என்ற டம்மி பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்துக்கு ரமேஷ் சிவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, எஸ்.ஜி.சூர்யா, அஸ்வத்தாமன் போன்றவர்களுக்கும் மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் சேகர் பாபுவை எதிர்த்துப் போட்டியிட்ட வினோஜ் பி.செல்வத்தை மாற்றிவிட்டு, சமூக வலைதளங்களில் அரசியல் செய்துகொண்டிருந்த இருவருக்கு அண்ணாமலை பதவி வழங்கியிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கெனவே மாவட்டத் தலைவர்கள் பதவியில் தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கை பாதிக்குப் பாதியளவு குறைந்ததால், மாநில நிர்வாகிகள் பட்டியலில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தன் ஆதரவாளர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று டெல்லி மேலிடத்தில் அடம்பிடித்து இந்தப் பட்டியலை ஓகே செய்திருக்கிறார் அண்ணாமலை.

இவை அனைத்துக்கும் மேலாக, தற்போது பாஜக தமிழக சமூக ஊடகப் பிரிவின் தலைவராக சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதவிவகிக்கிறார். இவர் அதிகாரபூர்வ பாஜக சமூக வலைதளங்களில் அண்ணாமலையை புரொமோட் செய்வது போன்று எந்த ஒரு செய்தியையும் அனுமதிப்பது கிடையாது. கட்சி சார்ந்த அல்லது பிரதமர் மோடி சார்ந்த செய்திகளை மட்டுமே அதிக அளவில் பகிர்ந்துவந்தார். இந்த நிலையில், தமிழக சமூக ஊடகப் பிரிவு இரண்டாக உடைக்கப்பட்டு, அதில் தனது ஆதரவாளரை நியமிக்க அண்ணாமலை போட்டிருக்கும் திட்டம் நிர்மல் குமார் தரப்பைச் சூடேற்றியுள்ளது" என்றார்கள் சீனியர் உறுப்பினர்கள். இதே சலசலப்பு நீடித்தால், விரைவில் பல பூகம்பங்கள் வெடிக்கும் என்கிறது விவரமறிந்த தமிழக பாஜக வட்டாரம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism