Published:Updated:

`EIA 2020 வரைவுக்கு ஒத்த அரசாணை'... கொதிக்கும் சூழலியலாளர்கள் - தமிழ்நாடு அரசின் பதில் என்ன?!

``கடந்த ஆண்டு வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அந்த அறிக்கையை ஒத்தவொரு உத்தரவுதான் தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு'' - சூழலியலாளர்கள்.

சமீபத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், தொழிற்சாலைகளின் இசைவாணையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இந்த அரசாணைக்கு எதிராக கடும் விமர்சனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, ``கடந்த ஆண்டு வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அந்த அறிக்கையை ஒத்தவொரு உத்தரவுதான் தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு'' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறது.

பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளப் `பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜனைத் தொடர்புகொண்டோம், ``தொழிற்சாலைகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் சிவப்பு வகையின்கீழ் வரும். சிமெண்ட், அனல்மின் நிலையங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இதைவிட குறைவான அளவு மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் ஆரஞ்சு வகையின்கீழ் வரும். ஆரஞ்சு வகைத் தொழிற்சாலைகளைவிட குறைவான அளவு மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் பச்சை வகையில் அடங்கும். சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லாத தொழிற்சாலைகள், வெள்ளை வகையின்கீழ் வரும்.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை இசைவாணையை புதுப்பித்தல் (Renewal of Consent) என்று ஒரு விஷயம் இருக்கிறது. அப்படிப் புதுப்பித்தால் மட்டுமே அந்தத் தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட முடியும். தற்போதைய நடைமுறையில் சிவப்பு வகை தொழிற்சாலைகள் ஆண்டுக்கு ஒரு முறையும், பச்சை, ஆரஞ்ச் வகை தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும் இசைவாணையைப் புதுப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் அரசாணையின் படி, `சிவப்பு வகை தொழிற்சாலைகள் ஆண்டுக்கு ஒருமுறையும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்று மாசுக் கட்டுப்பாடு நெறிமுறைகளை வாரியத்துக்குத் திருப்தி தரும் வகையில் செயல்படுத்தும் காலம் வரை ஆண்டுக்கு ஒருமுறையும், பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பிக்க வேண்டும். பச்சை வகை தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், தொழிற்சாலைகள் ஒப்புதலுக்கான மொத்த கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தும் பட்சத்தில், சிவப்பு/ஆரஞ்சு/பச்சை தொழிற்சாலைகள் 5/10/14 ஆண்டுகள் வரை புதுப்பிக்கத் தேவையில்லை' என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய ஆபத்து'' என்றவரிடம், ``எப்படி இது ஆபத்தானதாகும்'' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை
மீண்டும் ஒரு ஸ்டெர்லைட்! - காப்பர் ஆலை அமைக்க இடம் கேட்கும் வேதாந்தா நிறுவனம்

அதற்கு, ``சிவப்பு வகை தொழிற்சாலைகளில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார்கள். அப்படி ஆய்வு மேற்கொள்ளும்போது பொறியாளர்கள், விதிமீறல் இருக்கும் விஷயங்களைச் மாற்றச் சொல்வார்கள். ஆனால், தொழிற்சாலை நிறுவனங்கள் பொறியாளர்கள் சொன்னதைச் செய்யாமல் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கும். அப்படியான நிறுவனங்களிடம், சொன்னதைச் செய்தால்தான் இசைவாணையை புதுப்பிப்போம் என்று அழுத்தம் கொடுக்கும்போது, தொழிற்சாலைகள் அதைச் செய்துதான் ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துக்குத் தள்ளப்படும். உதாரணத்துக்கு, ஒரு தொழிற்சாலையில் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, அதிகம் மாசுபாடு ஏற்படுவதால், இரண்டு ஏர் ஃபில்டர்கள் பொறுத்த வேண்டும் என்று தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் சொல்கிறார்கள். ஆனால், அதை அந்தத் தொழிற்சாலை நிறுவனம் செய்யாமலே தட்டிக்கழித்து வந்தது. அந்தத் தொழிற்சாலை, இசைவாணையின் கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி வாரியத்தை அணுகியபோது, இரண்டு ஏர் ஃபில்டர்கள் வைத்தால் மட்டுமே புதுப்பிப்போம் என்று வாரியப் பொறியாளர்கள் கிடுக்குப்பிடி போட்டார்கள். இதையடுத்து, ஒரு ஏர் ஃபில்டரை மட்டும் பொறுத்திவிட்டு, இன்னொரு ஏர் ஃபில்டருக்கு பதிலாகப் பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து சரிக்கட்டியது அந்த நிறுவனம். இந்தச் சம்பவத்தில், புதுப்பித்தலின் காரணமாக இரண்டு ஏர் ஃபில்டர்கள் வரவேண்டிய இடத்தில் ஒன்றாவது வருகிறதல்லவா, அதற்காகத்தான் புதுப்பித்தலின் கால அவகாசத்தை நீட்டிக்கக்கூடாது என்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையானது இசைவாணையை புதுப்பிக்கக்கோரி 2018-ல் வாரியத்தை அணுகியது. அப்போதுதான் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு விதிமீறல்களைச் சுட்டிக்காட்டி இசைவாணை வழங்க மறுப்பு தெரிவித்தது மாசுக் கட்டுப்பாடு வாரியம். ஒருவேளை இப்படியாக விதிகளை மீறி மாசு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் மறுசீரமைப்பு செய்ய முடியாத அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்றார்.

மேலும், ``சுற்றுச்சூழல் துறையின் அரசாணையில், `தொழில் செய்வதற்கு எளிதாக' இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சுற்றுச்சூழல் துறையின் வேலையானது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதுதான். தொழில் மேம்பாடு என்பது தொழில் துறையின் வேலை. அந்த வேலையைச் சுற்றுச்சூழல் துறை ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது'' என்றார் சுந்தர்ராஜன்.

சுற்றுச்சூழல்,  கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன்
சுற்றுச்சூழல், கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன்
டாப் 10 பிரச்னைகள் - மாசு சூழ் உலகு

இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் பேசினோம், ``ஒன்றிய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி இந்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இசைவாணையைப் புதுப்பித்தலின் மூலம்தான் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றில்லை. குற்றச்சாட்டுகள் வரும்போதோ, அல்லது உயர்மட்டக் குழு ஆய்வுகள் மேற்கொள்ளும்போதோ, தொழிற்சாலைகள் விதிமீறலில் ஈடுபட்டிருந்தால், உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதற்கான முழு அதிகாரம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இருக்கிறது.

ஓராண்டுக்கு ஒரு முறை இசைவாணையை புதுப்பிக்க வேண்டும் என்கிற நடைமுறையில் சிக்கல்கள் இருக்கின்றன. ஓராண்டுக்கு ஒரு முறை தொழிற்சாலையைப் புதுப்பிக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனம் 11 மாதங்கள் கழித்துப் புதுப்பிப்பதற்கான வேலைகளில் இறங்கும். அந்தச் சமயத்தில் புதுப்பித்தலில் தாமதம் ஏற்பட்டால் 10 நாள்களோ, ஒரு மாதமோ அந்த நிறுவனம் செயல்படாமல் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படியான சூழலில் தொழிற்சாலைக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். புதுப்பித்தலின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் தொழிற்சாலைகளால் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இயங்க முடியும். அதேசமயத்தில், இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துகளையும் பரிசீலனையில் எடுத்துக்கொண்டு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன'' என்று முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு