Published:Updated:

தண்டோராவுக்குத் தடை: அறிவிப்பு பாராட்டுக்குரியது - ஆனால், பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி என்ன?

தண்டோராவுக்குத் தடை

தண்டோராவுக்கு தடை விதித்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்திருக்கும் உத்தரவு பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், தண்டோரா பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு வழி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்புகிறார்கள்.

தண்டோராவுக்குத் தடை: அறிவிப்பு பாராட்டுக்குரியது - ஆனால், பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி என்ன?

தண்டோராவுக்கு தடை விதித்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்திருக்கும் உத்தரவு பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், தண்டோரா பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு வழி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்புகிறார்கள்.

Published:Updated:
தண்டோராவுக்குத் தடை

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, இயற்கைச் சீற்றம் போன்ற நேரங்களில் மக்களால் அபாய எச்சரிக்கை விடுவிதற்காக தண்டோரா போடுவது நீண்டகால வழக்கமாக இருந்துவருகிறது. அரசின் சில அறிவிப்புகளும் தண்டோரா மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் தண்டோரா போடும் வழக்கம் தொடர வேண்டுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பிவந்தனர்.

கனியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் அறிவிப்பு
கனியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் அறிவிப்பு

சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப்படித்த மாணவி மரணமடைந்த சம்பவத்தையடுத்து பெரும் வன்முறை ஏற்பட்டது. அந்தப் பள்ளியிலிருந்து மின்விசிறிகள், ஏர் கூலர்கள், ஏ.சி., கம்ப்யூட்டர்கள், மேசைகள் போன்ற பொருள்களை சிலர் தூக்கிச்சென்றனர். அவ்வாறு எடுத்துச்செல்லப்பட்டவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று தண்டோரா போட்டு தெரிவிக்கப்பட்டது. அந்த செய்தி ஊடகங்களில் வெளியானபோது, தண்டோரா பழக்கத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், தண்டோரா போடுவதற்கு தடை விதித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் 'தண்டோரா' போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

இறையன்பு
இறையன்பு

அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் 'தண்டோரா' போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலைமுடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டுசேர்த்திட இயலும். எனவே, 'தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று வெ.இறையன்பு கூறியுள்ளார்.

தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவை பலரும் வரவேற்றிருக்கிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மிக முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

கி.வீரமணி
கி.வீரமணி

எத்தனையோ அறிவியல் முறைகள் வந்த பின்னும் தண்டோரா போடுவது அவசியமற்றது என்பதைவிட, சாதியைக் காக்கும் இந்த வழக்கத்தைத் தடைசெய்து தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் சாதிக்கும் சனாதனத்துக்கும் கொடுத்த சம்மட்டி அடியாகும்” என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் தண்டோரா வழக்கம் குறித்தும், தண்டோரா பணியாளர்களின் நிலை குறித்தும் மாற்று ஊடக மையத்தின் இயக்குநரும், நலிந்த நாட்டுப்புற கலைஞர்களின் நலன்களுக்காகச் செயல்பட்டுவருபவருமான பேராசிரியர் இரா.காளீஸ்வரனிடம் பேசினோம்.

“தண்டோரா மூலமாக மக்களுக்கு பல்வேறு தகவல்களைத் தெரிவிக்கும் வழக்கம் மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ‘கிடுகட்டி’ என்கிற இசைக்கருவியை ஒலித்து தண்டோரா போடுவார்கள். இந்தப் பணியைச் செய்பவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ‘ஊர் தோட்டிகள்’ என்று ஒரு சமூகத்தினர் குறிப்பிடப்படுவதைப்போல, ‘கருமகாரர்கள்’... ‘பறைசாட்டுபவர்கள்’, ‘ஊர்சாட்டிகள்’ என்று இவர்கள் குறிப்பிடப்பட்டார்கள். விளிம்புநிலை சமூகத்தினரான இவர்கள், சமூகத்தில் இழிவாக நடத்தப்படுபவர்களாகவே இன்றைக்கும் இருக்கிறார்கள்.

இரா.காளீஸ்வரன்
இரா.காளீஸ்வரன்

மன்னர்கள் காலத்தில் அரண்மனை தொடர்பான அறிவிப்புகளை தண்டோரா போட்ட இந்தப் பணியாளர்கள், பிற்காலத்தில் கிராமங்களில் ‘பெரிய வீட்டு’ விசேஷங்களை தண்டோரா போட்டு சொல்பவர்களாக தங்கள் ‘கடமை’யைத் தொடர்ந்தார்கள். பிறப்பு செய்திகள், இறப்பு செய்திகள், கோயில் திருவிழாக்கள் என எல்லா செய்திகளையும் கிடுகட்டியை ஒலித்து தண்டோரா போடுவார்கள். ‘டண்டனக்கு டண்டனக்கு’ என்று கிடுகட்டி ஒலித்தால், பஞ்சாயத்து கூடப்போகிறது என்று அர்த்தம். தண்டோரா போட்டுவிட்டு, கூலியாக கொஞ்சம் அரிசி கொடுப்பார்கள். அதை, காலில் கும்பிட்டு விழுந்து வாங்க வேண்டும்.

தண்டோரா போடுபவர்களுக்கு டீ வாங்கிக்கொடுத்து, ‘இந்தா வச்சுக்க..’ என்று பத்து ரூபாயைக் கையில் கொடுப்பார்கள். இப்படித்தான் இந்தப் பணியாளர்கள் இன்றுவரை இழிவாக நடத்தப்படுகிறார்கள். இந்த சமூக இழிவை தலைமைச் செயலாளர் இறையன்பு துடைத்தெறிந்திருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தண்டோரோ போடுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய வருமானம் கிடையாது. தண்டோரா போடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் நாளில், கூலியாக அவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 500 கிடைக்கலாம். தண்டோரா இன்றைக்கு ஒழிக்கப்பட்டிருப்பதால், இந்தப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை கவலையுடன் பார்க்கிறோம். தண்டோரா போடும் பணியில் ஈடுபட்டிருந்த அத்தனை பேரையும் அடையாளம் கண்டு, அங்கீகரித்து, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் கொடுக்க வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம்.

தலைமைச் செயலாளர் கடிதம்
தலைமைச் செயலாளர் கடிதம்

இனிமேல், ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை அரசுத் தரப்பில் செய்துகொடுக்க வேண்டும்” என்கிறார் இரா.காளீஸ்வரன்.