Published:Updated:

மின் துறையில் 'கமிஷன்' - அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி மோதல்! - இதுக்கு எப்ப சார் வரும் ஒரு எண்டு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதே 'அமைதியா இருக்கணும்னு அரசியலுக்கு வந்திருக்கேன். இந்த செந்தில் பாலாஜியையெல்லாம்...' என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் அண்ணாமலை.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான ட்விட்டர் போர் உக்கிரமடைந்துவருகிறது!

தமிழக மின்சார வாரியத்துறையில், கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது, ஒப்பந்ததாரர்களின் பில் தொகையை பாஸ் செய்வதற்கு நான்கு சதவிகித கமிஷன் பெறப்படுகிறது, தி.மு.க-வினருக்குச் சாதகமாக மின்சாரத்துறை ஒப்பந்தங்கள் நடைபெறுகின்றன' என மின்வாரியத்துறை அமைச்சர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகிறார் அண்ணாமலை. இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துவந்த செந்தில் பாலாஜி கூடவே, 'குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட வேண்டும். இல்லையென்றால், அவர்களது வழக்கம்போல் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று காரசாரமாக பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

இதையடுத்து, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசுகிற பொதுக்கூட்ட வீடியோ ஒன்றை வெளியிட்ட அண்ணாமலை, மின்வாரியத்துறை சம்பந்தப்பட்ட ஆவணம் ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டார். ஆனால், 'குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கேட்டால், மின்வாரியத்துறை சம்பந்தப்பட்ட எக்ஸெல் ஷீட் பக்கம் ஒன்றை, பொதுவெளியில் முறைகேடாக வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. அந்த ஆவணத்திலுள்ள தகவலையும்கூட சரிவரக் குறிப்பிடாமல், தப்பும் தவறுமாகக் குறிப்பிட்டிருக்கிறார்' என்று திருப்பித் தாக்கினார் செந்தில் பாலாஜி.

தொடர்ந்துவரும் இந்த மோதலில் இப்போது, 'கோபாலபுரம் - பிஜிஆர் எனர்ஜி - மின்சார அமைச்சகம் - செந்தில் பாலாஜி' என்றொரு புதிய ட்வீட்டைப் பகிர்ந்திருக்கிறார் அண்ணாமலை.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதே 'அமைதியா இருக்கணும்னு அரசியலுக்கு வந்திருக்கேன். இந்த செந்தில் பாலாஜியையெல்லாம் ...' என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் அண்ணாமலை.

தேர்தல் முடிந்து தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட, அண்ணாமலை - செந்தில் பாலாஜி இடையிலான இந்த மோதல் எந்தவிதத் தடையுமின்றி தொட்டுத் தொடர்வதையே தற்போதைய நிலை காட்டுகிறது. தமிழக அரசியலையே தடதடக்க வைத்துவரும் இந்த மோதல் போக்கின் பின்னணி குறித்துப் பேசுகிற தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

``தமிழக அரசியல் அமைப்பு என்பது இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அமைப்பாக இருந்துவருகிறது. இதில், இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது ஆட்சி செய்துகொண்டிருக்கிற அரசையோ நாம் நேரடியாக அடையாளப்படுத்திவிட முடியாது. இங்கேயிருக்கக்கூடிய அரசு மற்றும் அரசியல் அமைப்பு என்பவையே லஞ்சம் - ஊழலைச் சார்ந்தே இருக்கின்றன. இதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதனால்தான், கடந்த 2018-ம் ஆண்டு தமிழகம் வந்திருந்த அமித் ஷாவும்கூட, 'லஞ்சம் ஊழலில் இந்தியாவின் முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாடு இருந்துவருகிறது' என்று சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட அரசியல் கட்சியின்மீது மட்டும் பொருத்திப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்திலுள்ள லஞ்சம் - ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்று அக்கறை காட்ட வேண்டும். இதைத்தான் தமிழக பா.ஜ.க-வும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

``பெண் போலீஸாருடன் செல்ஃபி எடுத்தது குற்றம் எனில் என்னையும் தண்டியுங்கள்!” - பிரியங்கா காந்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது, தமிழக அரசியல் அமைப்பில் முதலில் மின்சார வாரியத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்துப் பட்டியலிட ஆரம்பித்திருக்கிறார் அண்ணாமலை. இந்தக் குற்றச்சாட்டுகளும்கூட 'மின் துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதன் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டுவருகின்றன.

`மின்மிகை மாநிலம் என்று சொல்லிக்கொள்கிற தமிழ்நாட்டில், அதிக விலை கொடுத்து யூனிட் மின்சாரம் வாங்கப்படுவது ஏன்’ என்றுதான் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்துப் பேசுகிற அமைச்சர் செந்தில் பாலாஜி, அதற்கான மறுப்பை நேரடியாகத் தெரிவிக்காமல், 'குஜராத்தில் வாங்கவில்லையா...' என்று உதாரணம் காட்டுகிறார். அண்ணாமலையின் கேள்விக்கான பதில் இது இல்லையே! எனவே, இது முடியும்வரை தொடரும்!'' என்கிறார் கவிதையாக.

அண்ணாமலை ட்வீட்
அண்ணாமலை ட்வீட்

தமிழக பா.ஜ.க-வின் கருத்துகளுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சிவ ஜெயராஜிடம் பேசியபோது, ``தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று நாங்கள் யாரும் சொல்லிக்கொள்ளவில்லை. ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியினர்தான் அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு, வழக்கமான விலையிலிருந்து கூடுதலான விலைக்குக் காற்றாலை மின்சாரத்தை வாங்கினார்கள். அதிக விலை கொடுத்து தரமற்ற நிலக்கரியை வாங்கினார்கள். இவைதான் தமிழ்நாடு மின்சாரத்துறை மீதான ஊழல். இந்த நிலையில், புதிதாக நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்னும் ஆறு மாதங்கள்கூட நிறைவடையவில்லை. ஆனாலும்கூட மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், இலவச மின்சாரம் வேண்டிக் காத்திருந்தவர்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கியும் ஆக்கபூர்வமாக செயல்பட்டுவருகிறது தி.மு.க அரசு.

மின்கம்பத்திலிருந்து முறையற்ற மின் கனெக்‌ஷன்;  இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் மாவட்ட கவுன்சிலராகக்கூட வர முடியாத தமிழக பா.ஜ.க-வினர் எங்கள்மீது சுமத்துகிற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, மிகுந்த பெருந்தன்மையுடன் பொறுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடிதான் கடந்த காலத்தில் குஜராத் முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்தார். இப்போதுவரையிலும்கூட குஜராத்தில் பா.ஜ.க-தான் ஆண்டுகொண்டிருக்கிறது. அங்கேயே மின்சாரம் என்ன விலை கொடுத்து வாங்கப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அமைச்சர் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். இதற்கு பதில் சொல்லாமல் வெறுமனே பொய்க் குற்றச்சாட்டுகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

'சரி... இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் கொடுங்கள்' என்று கேட்டால், துறை சம்பந்தமான எக்ஸெல் ஷீட் பக்கம் ஒன்றை ட்விட்டரில் பதிவிடுகிறார். இதுவா ஆதாரம்? ஆக, ஆதாரம் எதுவும் இல்லாததால், எதையாவது சொல்லி தி.மு.க மீது சேற்றை வாரியிறைத்துவிட வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்கள்.

இன்றைக்குப் புதிதாக, 'அமைச்சர் - கோபாலபுரம் - புள்ளி' என ஏதேதோ சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. ஆதாரத்தைக் காட்டாமல், புள்ளி வையுங்கள், கோலம் போடுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், இவர் பா.ஜ.க தலைவரா அல்லது புள்ளி ராஜாவா? பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரே இப்படியிருந்தால், எப்படி அந்தக் கட்சி இங்கே வளரும்?

`கட்சிப் பாகுபாடின்றி தமிழ்நாடு அரசியல் அமைப்பே ஊழலாகத்தான் இருக்கிறது’ என்று பா.ஜ.க-வினர் சொன்னால், இப்போது தமிழக பா.ஜ.க சார்பில் புதிதாக நான்கு எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருக்கிறார்களே.... அவர்களும் ஊழல்வாதிகள்தானா?'' என்கிறார் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு