Published:Updated:

`உத்தரப்பிரதேச விவசாயிகள் உயிரிழப்பு சம்பவம்' எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறதா யோகி அரசு?

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் எட்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்தார். இந்தத் தகவலை அறிந்த விவசாயிகள் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டனர். துணை முதல்வரை வரவேற்க மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

அப்போது அவரது காரை வழிமறித்து விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டி, கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த வாகனம் மிக வேகமாகக் கிளம்பிச் சென்றிருக்கிறது. வாகனம் கிளம்பிச் செல்லும்போது விவசாயிகளின் மீது இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த காரில் இருந்தவர்களைத் தாக்கியதோடு அந்தக் காரையும் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியதால் அசாதாரண சூழல் நிலவியது.

உத்தரப்பிரதேசம்: கார் தீவைத்து எரிப்பு
உத்தரப்பிரதேசம்: கார் தீவைத்து எரிப்பு

இதனால் லக்கிம்பூர் மாவட்டத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. அந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தியபோது அங்கு வன்முறை வெடித்திருக்கிறது. இந்தக் கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள். இதுவரை விவசாயிகள், பாஜக-வைச் சேர்ந்தவர்கள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 14 பேர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அஜய் மிஸ்ரா, ``என் மகன் சம்பவ இடத்திலேயே இல்லை. அந்தச் சம்பவம் நடந்தபோது அவர் வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது" என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கண்டிப்பாக உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார். மேலும், விவசாயிகளை இடித்த வாகனத்தில் ஆஷிஷ் இருந்தார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

`இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 45 லட்சம் ரூபாய் நிதி உதவி. இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. காயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும்' - உத்தரப்பிரதேச அரசு

கலவரம் நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் இணைய சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க டெல்லியிலிருந்து புறப்பட்டு லக்கிம்பூர் பகுதிக்கு பிரியங்கா காந்தி சென்றிருக்கிறார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அங்கு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று அருகிலுள்ள சீதாபூர் அரசு விருந்தினர் மாளிகையில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க, தனது வீட்டிலிருந்து புறப்படும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த இடத்திலேயே அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை காவல்துறையினர் கைதுசெய்து, வீட்டுச் சிறையில் வைத்தனர். அப்போது பேசிய அவர், ``இந்த அரசு, விவசாயிகளுக்குச் செய்யும் கொடுமைகளைப்போல பிரிட்டிஷ்காரர்கள்கூடச் செய்திருக்க மாட்டார்கள். அரசியல் தலைவர்கள் யாரும் லக்கிம்பூருக்குச் செல்வதை இந்த அரசு விரும்பவில்லை. எதை மறைக்கப் பார்க்கிறது இந்த அரசு" என்று கேள்வி எழுப்பினார்.

பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் இருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுகிந்தர் ரன்தவா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாதல் போன்றவர்கள் லக்னோ விமான நிலையம் வருவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்திருக்கிறது. இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்துக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள்.

உத்தரப்பிரதேசம்: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்; யோகி அரசுக்கு எதிராகத் திரும்பிய விவசாயிகள்?!

இன்னும் சில மாதங்களில் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே கொரோனா பேரிடரில் யோகி தலைமையிலான பாஜக அரசு சரியாகச் செயல்படவில்லை; முறையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே மருத்துவமனையில் இடம் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதுமட்டுமின்றி, அங்கு பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில், சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், வரவிருக்கும் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு செய்தார்கள். இந்த நிலையில், தற்போது நடந்திருக்கும் இந்தச் சம்பவம் யோகி தலைமையிலான பாஜக அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. அதோடு, இந்த நிகழ்வின் தாக்கம், வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு