Published:Updated:

`இந்தி தெரியாது; 10 மசோதா; மல்லுக்கட்டிய சு.வெங்கடேசன்..!' - நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஹைலைட்ஸ்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஹைலைட்ஸ்
News
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஹைலைட்ஸ்

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு, நாடாளுமன்றத்தில் அமளி, ஆளும் தரப்பினருடன் காரசார விவாதம், கலகலப்பான கமென்ட்ஸ்... என வழக்கம்போலவே இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தன... அதன் தொகுப்பு!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 22-ம் தேதி நிறைவடைந்தது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே கூட்டம் நிறுத்தப்பட்டது. மொத்தம் 12 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வேளாண் சட்டங்கள் ரத்து, தேர்தல் திருத்தச் சட்டம் உள்ளிட்ட 10 மசோதாக்கள் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மக்களவை செயல்படவேண்டிய 83.2 மணிநே ரத்தில் வெறும் 26.5 மணி நேரம் மட்டுமே விவாதம் நடைபெற்றிருக்கிறது. அதேபோல மாநிலங்களவை 45.4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டிருக்கிறது. இதில் 21.7 மணி நேரம் புதிய மசோதாக்கள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாமீது குறுகிய காலமும், செயற்கைக் கருத்தரிப்பு மசோதா மீது அதிக நேரமும் விவாதங்கள் நடைபெற்றன. இவை தவிர உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா மீதும், அணைப் பாதுகாப்பு மசோதா மீதும் நீண்ட நேரம் விவாதம் நடந்தது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு, நாடாளுமன்றத்தில் அமளி, ஆளும் தரப்பினருடன் காரசார விவாதம், கலகலப்பான கமென்ட்ஸ் என வழக்கம்போலவே இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

* கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாதபடி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கூட்டத்தின் தொடக்க நாளில் நடந்த இந்த சஸ்பெண்ட் விவகாரம் இறுதி நாள் வரை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. ஆனால், இறுதி வரை இந்த சஸ்பெண்ட் விவகாரத்தில் இரு அவைகளின் தலைவர்களும் ரத்து செய்ய முடியாது என உறுதியாக இருந்தனர்.

* கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் இந்தியா அளித்த நெட் ஜீரோ உள்ளிட்ட உறுதிமொழிகள் குறித்தும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்தும் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, ``ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” என்ற பெயரை உச்சரிக்க முடியாமல் தி.மு.க எம்.பி சிரமப்பட்டார். அப்போது அதைச் சரியாக உச்சரிக்கச் சபாநாயகரும் பிற மாநில உறுப்பினர்களும் உதவினர்.

* இதையடுத்து, ``இந்தியிலுள்ள திட்டப் பெயர்கள் புரியும்படி இல்லை” என கனிமொழி கூறினார். மேலும் ``மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை உச்சரிப்பதற்கே சிரமமாக இருக்கிறது. அனைத்துத் தரப்பினருக்கும் புரியும் வகையில் திட்டங்களுக்கான பெயர்களை ஆங்கிலத்திலோ அந்தந்த மாநில மொழிகளிலோ வைப்பதில் என்ன சிக்கல்” எனவும் கனிமொழி கேள்வி எழுப்பினார். அப்போது சிலர், ``உங்களுக்குப் புரியவில்லையென்றால் நாங்கள் என்ன செய்வது” எனக் கேட்க, ``அப்படியா, இனி நான் தமிழில் பேசுகிறேன்... உங்களுக்கு புரியுதா எனச் சொல்லுங்கள்” என பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

கனிமொழி - மாணிக்கம் தாகூர் - விஜய் வசந்த்
கனிமொழி - மாணிக்கம் தாகூர் - விஜய் வசந்த்

* நீட் தேர்வை எங்கள்மீது திணிக்க வேண்டாம் என்ற பதாகையைச் சபாநாயகர் முகத்துக்கு நேராக நீட்டி பெரும் சம்பவத்தை அரங்கேற்றினர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதற்கு ஒரு படி மேலே தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாகூரும், விஜய் வசந்தும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்த மற்றும் வராத நாள்களைக் குறிப்பிட்டு அந்தப் பதாகையைக் கையில் ஏந்தி நாடாளுமன்றத்துக்கு வந்தது இணையத்தில் வைரலானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* `தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு சர்வதேச விமான நிலையம் அதுவும் மதுரையில் வேண்டும்’ என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வைத்த கோரிக்கையை நிராகரித்த விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் புள்ளிவிவரங்களோடு மதுரைக்கு ஏன் சர்வதேச விமான நிலையம் வேண்டும் எனக் கேட்டும், அதிக ஜி.எஸ்.டி கொடுக்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறும் அனைத்து உரிமைகளும் இருக்கிறது என வாயடைக்கவைத்தார் வெங்கடேசன். மேலும், ``மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக அறிவியுங்கள். வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அதுவரை எங்கள் கோரிக்கைகள் தொடரும். நாங்கள் உண்மைக்கு மாறாகப் பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில், தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன” எனவும் பேசினார்.

சு.வெங்கடேசன் - கார்த்தி சிதம்பரம்
சு.வெங்கடேசன் - கார்த்தி சிதம்பரம்

* மக்களவையில் செயற்கை கருத்தரிப்பு மசோதா குறித்து நடந்த விவாதத்தில் மத்திய அரசையும், அந்த மசோதாவையும் கடுமையாக விமர்சித்து கார்த்தி சிதம்பரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சில பா.ஜ.க எம்.பி-கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகக் கூச்சலிட்டனர். அப்போது சட்டென தன்னுடைய பேச்சை நிறுத்திய கார்த்தி சிதம்பரம், ``எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி இந்தி தெரியாது” எனத் தமிழில் கூறவே அனைவரும் அமைதியாகினர்.

* பனாமா பேப்பர்ஸ் வழக்கு குறித்து அமலாக்கத்துறை நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மாமியார் ஜெயா பச்சன், ``பா.ஜ.க-வுக்கு கெட்ட நாள்கள் விரைவில் தொடங்கும் என உங்களுக்குச் சாபமிடுகிறேன். எங்கள் கழுத்தை நீங்கள் நெரிக்கிறீர்கள். யாரை முன்னிறுத்தி விளையாடுகிறீர்கள்?” என ஆவேசமாகப் பேசியதோடு சாபமும்விட்டது யாரும் எதிர்பார்க்காத சம்பவம்...

ஜான் பிரித்தாஸ் - ஜெயா பச்சன்
ஜான் பிரித்தாஸ் - ஜெயா பச்சன்

* கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி ஜான் பிரிட்டாஸ், ``இந்தியாவில் இதுவரை 47 பேர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருக்கின்றனர். இவர்களில் 14 பேர் பிராமணர்கள்” எனத்தொடங்கி, நீதிபதிகள் நியமனம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துப் பேசியது பெறும் வரவேற்பைப் பெற்றது. ``கேரளா எம்.பி ஜான் பிரிட்டாஸின் பேச்சு மிக அற்புதமானது. நான் மிகவும் உன்னிப்பாக ரசித்துக் கேட்டேன். ஆனால் அவரின் இந்த பேச்சு ஒருவரி கூட மறுநாள் ஊடகங்களில் வெளிவராதது அதிருப்தி தருகிறது” என வெங்கைய நாயுடுவே வெகுவாகப் பாராட்டிக் குறிப்பிட்டிருந்தார்.

இவை தவிர இன்னும் பல முக்கிய சம்பங்கள் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அரங்கேறின!