Published:Updated:

எம்.ஜி.ஆர்., ஜெ., பாணியைப் பின்பற்றும் இரட்டைத் தலைமை! - விதிகளை வளைத்து தேர்தலை நடத்துகிறதா அதிமுக?

அ.தி.மு.க
News
அ.தி.மு.க

செயற்குழு முடிந்த கையோடு, அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் உடனடியாக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், உட்கட்சித் தேர்தலையும் அ.தி.மு.க தலைமை அறிவித்திருக்கிறது.

தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போதிலும், அரசியல் அரங்கில் லைம்லைட்டிலேயே இருப்பது எதிர்க்கட்சியான அ.தி.மு.க-தான். நவம்பர் 24-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வார்த்தைப் போர் நடந்து முடிய, டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டமோ எந்தச் சச்சரவும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. சூட்டோடு சூடாக உட்கட்சித் தேர்தலையும் அறிவித்திருக்கிறது அந்தக் கட்சியின் தலைமை. பொதுவாக உட்கட்சித் தேர்தல் எப்படி நடக்கும், தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் முறையாகத் தான் நடக்கப் போகிறதா என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் மீது வருத்தத்திலிருக்கும் அந்தக் கட்சியின் சீனியர் ஒருவரிடம் பேசினோம்.

``தேர்தலுக்குள் செல்வதற்கு முன்பாக இன்னொரு விஷயத்தைச் சொல்லிட வேண்டும். அதாவது, கட்சி மூன்று தேர்தல்களாகத் தோல்வியைச் சந்தித்துவருகிறது. ஆளுமைமிக்க தலைமை இல்லாதபோதும், இருக்கும் இரட்டைத் தலைமையாவது ஒழுங்காக, ஒற்றுமையாக வழிநடத்த வேண்டும், அதிகாரம் ஒரே இடத்தில் குவியக் கூடாது என்பதற்காக வழிகாட்டுதல் குழுவை விரிவாக்கி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என அன்வர் ராஜா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பேசினார்கள். ஆனால், அன்வர் ராஜாவை நீக்கிவிட்டனர். செங்கோட்டையன் பேச்சை மதிக்கவில்லை. மறுபடியும் மறுபடியும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அதிகாரம் தங்கள் இருவருக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதால் புதிதாக விதிகளையும் திருத்திவிட்டனர். இனி பொதுச்செயலாளருக்கு நிகரான, தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இருவரும் இருப்பார்கள்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
’எம்.ஜி.ஆர் மாளிகை’
அ.தி.மு.க தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

ஜனநாயக முறை என்று சொல்லப்பட்டாலும் ஆரம்பம் முதலே அ.தி.மு.க-வில், தலைமைக்கான தேர்தலில் அப்படியான ஜனநாயகம் இருந்ததேயில்லை, இப்போதும் இல்லை. எம்.ஜி.ஆர் கட்சித் தொடங்கும்போது தலைவர் பதவியைக் காலியாக வைத்துவிட்டு, பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்தார். அந்தப் பதவி அப்போது பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுவதாக விதி இருந்தது. பின்னர் அதை, தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று மாற்றினார். அப்போதும் எம்.ஜி.ஆருக்கு எதிராக யாரும் போட்டியிடாததால் போட்டியின்றித் தேர்வானார். அதேபாணிதான் ஜெயலலிதா இருந்த வரையிலும் தொடர்ந்தது. ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்வார், அவருக்காக ஆயிரக்கணக்கானோர் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். எதிர்த்து போட்டியிட ஆள் இல்லாததால், போட்டியின்றித் தேர்வாவார். தற்போதும் அதை நோக்கியே ஒருங்கிணைப்பாளர்கள் செல்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்களை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்பதாலும், அதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடாது என்பதற்காகவுமே செயற்குழு முடிந்த கையோடு தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இருந்தபோதும், சென்னையைச் சேர்ந்த மூத்த கட்சித் தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங் என்பவர் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளுக்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் முறையான ஆவணங்கள் இல்லை என தரக்குறைவாகப் பேசி விரட்டிவிட்டனர்.

அ.தி.மு.க செயற்குழு
அ.தி.மு.க செயற்குழு

தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதியை மாற்றிவிட்டு, ஒரு தொண்டரையே விரட்டினால் என்ன நியாயம்? ஜெயலலிதாபோல எதிர்க்க யாருமின்றி, அன்னபோஸ்டாக தேர்வாக நினைக்கின்றனர். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மாஸ் லீடர்கள் என்பதால் எதிர்க்க ஆளில்லை. இவர்கள் அப்படியில்லையே! சாதாரணத் தொண்டர் என்பதால் அடித்து விரட்டினர். மூத்த நிர்வாகிகள் இருவர் சேர்ந்துகொண்டு போட்டிபோட்டால் என்ன செய்வார்கள்? இதில் மட்டும் ஜெயலலிதா பாணியைப் பின்பற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உட்கட்சித் தேர்தலில் கோட்டைவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7-ம் தேதி முடிந்து, வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி என்கிறார்கள். எதிர்க்கவே ஆளில்லாதபோது எப்படித் தேர்தல் நடக்கும்? அது முடிந்து மூன்று நாள்கள் இடைவெளியில் 12 - 13 மற்றும் 22 - 23 ஆகிய தேதிகளில் உட்கட்சித் தேர்தல் நடக்கும் என அறிவித்திருக்கின்றனர். கிளைக் கழகம், ஒன்றியக் கழகம், பேரூர் கழகம் என மாவட்டக் கழகம் வரையில் இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் எந்தப் பொறுப்புக்கும் போட்டியிடலாம். வாக்களிப்பவர் ஐந்து ஆண்டுகள் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் போதும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், வாக்களிக்கும் தொண்டர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த சரியான, தெளிவான பட்டியல் இல்லை. ஜெயலலிதா இருக்கும்போது இருந்த பக்குவம் இப்போது இல்லை. அவசரகோலத்தில் அறிவித்ததால்தான், இதை எதிர்த்து கே.சி.பழனிசாமி நீதிமன்றம் சென்றிருக்கிறார். தேர்தல் நடக்கிறதா என்று பார்ப்போம்” என்று முடித்தார்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

இது பற்றி கே.சி.பழனிசாமியிடம் கேட்டபோது, ``பொதுவாக உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது என்றால், 21 நாள்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதாவது, அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது விதி. அதேபோல, கட்சியில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதற்கான வாக்காளர் பட்டியலையும் வெளியிட வேண்டும். வெறுமனே வாய் வார்த்தையில் ஒன்றரைக் கோடித் தொண்டர்கள் என்று சொன்னால் போதாது. இது போன்ற விதிமுறைகளையெல்லாம் மறந்துவிட்டும், மறைத்துவிட்டும் உட்கட்சித் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். நான் மட்டுமல்ல, இன்னும் 27,000 பேர் உட்கட்சித் தேர்தலை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யவிருக்கிறார்கள்" என்கிறார் அதிரடியாக..!