Published:Updated:

தீக்குளிப்பு... தொடர் போராட்டங்கள்! - சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் நடப்பதென்ன?

சாதிச் சான்றிதழ் கோரி கடலூரில் போராட்டம்

பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் தமிழகம் முழுக்க பல்வேறு பிரச்னைகள் தொடர்வதாகக் கூறுகிறார்கள் அந்தச் சமூக மக்கள்.

தீக்குளிப்பு... தொடர் போராட்டங்கள்! - சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் நடப்பதென்ன?

பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் தமிழகம் முழுக்க பல்வேறு பிரச்னைகள் தொடர்வதாகக் கூறுகிறார்கள் அந்தச் சமூக மக்கள்.

Published:Updated:
சாதிச் சான்றிதழ் கோரி கடலூரில் போராட்டம்

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட, ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ் பெறுவதற்கு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்குச் சான்றாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 11-ம் தேதி மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து, உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை சிறுமாத்தூர் பகுதியைச் சேர்ந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் தன்னுடைய 3 பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு ஶ்ரீபெரும்பதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குப் பலமுறை சென்றும் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

தீ
தீ

ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தும் அவரால்  சான்றிதழ் பெறமுடியவில்லை. இதனால், மனமுடைந்த வேல்முருகன், கடந்த 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்ட உதவி மையம் அருகே தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அங்கே அருகில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், உடனடியாக தீயை அணைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வேல்முருகனைக் கொண்டு சென்றனர். 50 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் 12-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரி வழங்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கும் கடலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 12-ம் தேதி கடலூரில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள்.

ஆதிமூலம்
ஆதிமூலம்

பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் தமிழகம் முழுக்க பல்வேறு பிரச்னைகள் தொடர்வதாகக் கூறுகிறார் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆதிமூலம். "எஸ்.டி பிரிவில் உள்ள இருளர், நரிக்குறவர், மலைக்குறவர் உள்ளிட்ட பல சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆதார் கார்டோ, ரேஷன் கார்டோ கிடையாது. முன்பெல்லாம் சாதிச் சான்றிதழ் கோரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பம் போடுவோம். விண்ணப்பித்து 10 நாள்கள் கழித்து நேரடியாக வந்து உண்மைத்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து சாதிச் சான்றிதழ் வழங்குவார்கள். ஆனால், இப்போது ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்கிறார்கள். எங்களின் மூதாதையர்களுக்குப் பட்டாவோ, பத்திரமோ, ரேஷன் கார்டோ இல்லை. அப்படி இருக்கும்போது எந்த ஆவணத்தை இணைத்துச் சாதிச் சான்றிதழ் பெற முடியும்.  

கடலூர் போராட்டம்
கடலூர் போராட்டம்

இதனால், எங்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு முழுமையாகப் பாதிக்கப்படுகிறது. கல்லூரியில் சேர சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. இதனால், பலரும் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கூலி வேலைக்குச் செல்கிறார்கள். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இப்பிரச்னை அதிகளவில் இருக்கிறது. இந்த 4 மாவட்டங்களில் மட்டும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு எந்த அடையாள சான்றிதழும் கிடையாது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் மேல்மாம்பட்டு, கோண்டூர், வடலூர், காரணிக்குப்பம், ஏரிப்பாளையத்தில் ஒருவருக்குகூட சாதிச் சான்றிதழ் கிடையாது. இதனால், பழங்குடியினர் நலவாரியத்தில் எங்களால் இணைய முடியவில்லை. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்ய முடியவில்லை" என்றார் ஆதங்கத்துடன். 

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

பண்ருட்டி காடாம் புலியூர், காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த கெளசல்யா, "ரத்த சொந்தங்கள் யாராவது சாதிச் சான்றிதழ் வைத்திருந்தால் அதை வைத்து மட்டுமே எங்களால் சாதிச் சான்றிதழ் பெறமுடியும். ரத்த சொந்தம் இல்லாத ஒருவர் புதிதாக விண்ணப்பித்தால் சான்றிதழ் பெறுவதில் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. பண்ருட்டி காடாம் புலியூர் அருகே ராஜகணபதி நகரில் இருளர், மழைக்குறவர், காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த ஏராளாமானோர் வசிக்கிறார்கள். இவர்களில் யாருக்குமே சாதிச் சான்றிதழ் கிடையாது. 12-ம் வகுப்பு முடித்த பலரும் கல்வியைத் தொடர முடியாமல் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

வழக்கறிஞர் நல்லதுரை
வழக்கறிஞர் நல்லதுரை

வழக்கறிஞர் நல்லதுரையிடம் பேசினோம், "அரசு மற்றும் தனியார் துறைகளில் சாதிச் சான்றிதழ்தான் கேட்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது ஒருவரை எந்த சாதி என்று வகைப்படுத்தாமல் இருப்பது அரசின் தவறு. பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போன சமூகத்தவர்களின் விவரங்களை எடுத்து அவர்களை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, பட்டியலிலிருந்து சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் இருப்பவர்களைக் கண்டறிந்து சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி அவர்களுக்குத் தடையில்லாமல் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதை முழுமையாக கவனத்தில் எடுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.