Published:Updated:

``எம்.ஜி.ஆரின் அன்பு, வைகோவின் கல்லுாரி நட்பு” - தூக்கி எறிந்தாரா துரைமுருகன்?

உண்மையில் இது வைகோ மீதோ, எம்.ஜி.ஆர் மீதோ இருந்த கோபம் அல்ல. தனக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்த சொந்த கட்சியினருக்கு எதிரான துரைமுருகன் காட்டிய கோபமே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’’ என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவை இப்போது எதற்காக துரைமுருகன் விமர்சனம் செய்ய வேண்டும் என்று திமுக-வினரே வருத்தப்படுகிறார்கள். துரைமுருகன் இந்த கருத்தை எதார்த்த நோக்கத்தில் தான் சொல்லியிருந்தார். ஆனாலும் வைகோவுக்கும் துரைமுருகனுக்கும் உள்ள பனிப்போர் ஐம்பது ஆண்டுகளை கடந்தது என்கிறார்கள் திமுகவினர். வைகோவை பற்றி துரைமுருகன் பேசியதை பெரிதுப்படுத்துவதை விட, எம்.ஜி.ஆரை பற்றியும் துரைமுருகன் பேசியதை கவனிக்கவேண்டுமு் என்கிறார்கள்.

முரசொலி செல்வத்தின் நட்பினால் திமுக -விற்குள் வந்து பிறகு கருணாநிதியின் குடும்பத்தின் நட்பினையும் சேர்த்து பெற்றவர் துரைமுருகன். அதே துரைமுருகன் எம்.ஜி.ஆர் மீது தனிப்பட்ட மரியாதையும், பாசத்தையும் வைத்திருந்தார். திமுக-வில் எம்.ஜி.ஆர் இருந்தவரை அவரின் செல்லப்பிள்ளையாக துரைமுருகன் வலம்வந்த காலம் இருந்தது. அதே எம்.ஜி.ஆர் திமுக-வுக்கு எதிராக தனி இயக்கம் கண்டபோது தன்பின்னால் துரைமுருகன் வந்துவிடுவார் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், திமுக-வை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் துரைமுருகன்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்
கருணாநிதி, எம்.ஜி.ஆர்

இதைப்பற்றி துரைமுருகன் ஒருமுறை, “முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது தலைமை செயலகத்தில் என்னை பார்த்துவிட்டார். உடனே என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். நான் சென்றவுடன் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு, எப்படி இருக்க? என்று கேட்டுவிட்டு, சரி, உனக்கு என்ன இலாக்கா வேண்டும். அதை மட்டும் இப்போது சொல்லிவிட்டு போ” என்றார். நான் அவரிடம், ``எனக்கு நீங்கள் வாழ்வழித்தவர். அந்த பற்றும் பாசமும் உங்கள் மீது இருக்கும். ஆனால், எனக்கு தலைவர் கலைஞர் மட்டும்தானு” சொன்னேன். “கொஞ்சம் நேரம் என்னை உற்றுபார்த்துவிட்டு, என் முதுகில் தட்டிக்கொடுத்து என்னை அனுப்பிவைத்தார்” என்று கூறியிருந்தார்.

“துரைமுருகனின் மேற்படிப்பு செலவையே அன்று பார்த்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அவரையும் தான் துரோகி என்று துரைமுருகன் சீற்றம் காட்டியிருக்கிறார். கட்சியை முன்னிலைப்படுத்தி கட்சிக்கு துரோகம், செய்யும் நபர்களை சுட்டிக்காட்ட தன்னை வளர்த்தவரே துரோகம் செய்தாலும் அதை துணிச்சலாக சொல்லும் தைரியம் இப்போது திமுக-வில் துரைமுருகனை தவிற வேறு யாருக்கும் கிடையாது” என்று சிலாக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`எம்.ஜி.ஆர்., கோபால்சாமி போன்ற துரோகிகளையே பார்த்துவிட்டோம்!’ - துரைமுருகன்

வேலுாரில் நடந்த கூட்டத்தில் பொதுவான கருத்தாகவே சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ என்று வரிசைப்படுத்தினாரே ஒழிய இப்போது யார் மீதும் அவர் எந்த காழ்புணர்ச்சியும் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக வைகோவும், துரைமுருகனும் சென்னை கல்லுாரியில் ஒன்றாக படித்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்குமான போட்டி இருந்தது. அது திமுக வுக்குள்ளும் இருந்தது. ஒருகட்டத்தில் வைகோ, திமுக-வை விட்டு வெளியேற துரைமுருகனும் மறைமுக காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது. அதே வைகோ மீண்டும் திமுக-விற்குள் வந்தபோது வாஞ்சையோடு வைகோவை அழைத்து, திமுக முன்னணியினர் மத்தியிலேயே நக்கலாக வைகோவை பேசினார். துரைமுருகன் பேசியதை வைகோவும் பெரிதாக நினைக்கவில்லை. காரணம் கல்லுாரி காலத்திலிருந்தே ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக புரிந்துவைத்திருந்தனர்.

துரைமுருகன்- வைகோ
துரைமுருகன்- வைகோ

``இப்போது திமுக-விற்குள் கோஷ்டி பூசல்கள் அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் அசைக்கமுடியாத சக்தியாக துரைமுருகன் இருந்த நிலைமை இப்போது மாறிவருகிறது. அவருக்கு எதிராகே சிலர் உள்ளடி வேலை பார்க்க ஆரம்பித்தன், விளைவு தான் அவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே கடினம் என்கிற நிலையை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் ஒரு நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். உள்ளாட்சி தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி,மொத்தமாக கொட்டி தீர்த்துவிட்டார். உண்மையில் இது வைகோ மீதோ, எம்.ஜி.ஆர் மீதோ இருந்த கோவம் அல்ல. தனக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்த சொந்த கட்சியினருக்கு எதிரான கோபமே” என்கிறார்கள் துரைமுருகன் தரப்பினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு