Published:Updated:

முன்னாள், இந்நாள் அரசுகளின் சிங்காரச் சென்னையும், பூர்வகுடி மக்களின் பிரச்னையும் -ஒரு விரிவான பார்வை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சத்தியவாணி முத்து நகரிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்
சத்தியவாணி முத்து நகரிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்

சமீபத்தில் அரும்பாக்கம் பகுதியில் மக்களை வெளியேற்றியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் இன்றைய காலம்வரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்குகிறது. இவ்வளவு பெரிய சென்னை மாநகரைக் கட்டியெழுப்பியதில், `பூர்வகுடிகள்’ என்று குறிப்பிடப்படும் உழைப்பாளி மக்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அன்றாடங்காய்ச்சிகளான அந்த மக்கள், பல தலைமுறைகளாக சென்னை நகரின் ஆற்றங்கரைகளில் வசித்துவருகிறார்கள்.

அரும்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பம்
அரும்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றங்களையும் சென்னை மாநகரம் கண்டது. அந்த `வளர்ச்சி’யின் ஒரு பகுதியாக சென்னையை `அழகு’படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் தொடர்ந்து பல திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள். கூவம், அடையாறு ஆற்றங்கரையோரம் இருக்கும் குடிசைகளையும், அங்கு வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுகிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த விஷயத்தில் ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். ``தேர்தல் பிரசாரம், கட்சிப் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்குக் கூட்டம் சேர்க்க வேண்டுமென்றால், இந்த இரண்டு கட்சிகளும் நம்பியிருப்பது இந்தக் குடிசைவாசிகளைத்தான். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு நகரை அழகுபடுத்துவது சரியா?" என்ற கேள்வியை சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின்போது, தீவுத்திடல் பகுதியில் கூவம் நதியோரம் சத்தியவாணி முத்து நகரிலிருந்து நீண்டகாலமாக வசித்துவந்த பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில், அரும்பாக்கம் பகுதியில் ராதாகிருஷ்ணன் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை குறித்து எழுத்தாளர் கரன் கார்க்கியிடம் பேசினோம்.

``சென்னை நதிக்கரைகளில் வசித்துவரும் மக்களை வெளியேற்றுவது மிகப்பெரிய அநீதி. அண்ணாசாலை அருகே கெயிட்டி திரையரங்கத்தையொட்டி லாங்ஸ் கார்டன் என்ற இடம் உள்ளது. கூவம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள அந்தப் பகுதி, சிந்தாதிரிப்பேட்டை எப்போது தோன்றியதோ அப்போதே தோன்றிவிட்டது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேல் அந்தப் பகுதி இருக்கிறது. அந்த மக்களை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்துவிட்டார்கள்.

சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது வலுக்காட்டாய வெளியேற்றமா? - பரவும் தகவல்களும் விளக்கங்களும்!
கரன் கார்க்கி
கரன் கார்க்கி

அண்ணாசாலையை ஒட்டிய கிரீம்ஸ் சாலை அருகில் கூவம் ஆற்றங்கரையோரம் திடீர் நகரிலிருந்து குடிசைவாசிகளை வெளியேற்றிவிட்டார்கள். அங்கு, ஆற்றுக்கும் சாலைக்கும் இடையே 100 அடி தூரம்தான் இடைவெளி. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி, அந்த மக்களை அங்கேயே வசிக்கவைக்கலாம். ஆனால், சில கார்ப்பரேட், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அந்த மக்களை வெளியேற்றிவிட்டார்கள். நகரத்தை அழகுபடுத்த வேண்டுமென்றால் குடிசைகளை அகற்றிவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் கொள்கை. ஆக்கிரமிப்பு என்ற ஒரு வார்த்தையைச் சொல்லி, குடிசைகளை அகற்றிவிடுகிறார்கள். அதுவே, அந்த இடம் பணக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பிரமாண்டமான கட்டடங்கள் அங்கு இருந்தால் ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கூவம் நதிக்கரையிலும், அடையாறு நதிக்கரையிலும் ஆக்கிரமிப்பு செய்து எத்தனையோ பிரமாண்ட கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றின் மீது ஆட்சியாளர்கள் கைவைப்பதில்லை. அதிகாரத்தில் உயர் வகுப்பினர் இருப்பதால், எளிய மனிதர்களையும் அன்றாடங்காய்ச்சிகளையும் எளிதாக அகற்றிவிடுகிறார்கள். ஒட்டுமொத்தச் சிக்கலுமே அதிகாரத்துக்கும் அதிகாரமற்றவர்களுக்குமான பிரச்னைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துறைமுகம், ஜார்ஜ் டவுன், பாரிமுனை, சூளையில் இருந்த மிகப்பெரிய வணிக நிறுவனம், கொத்தவால் சாவடி, சால்ட் கொட்டார்ஸ் என அனைத்தும் இந்த குடிசைப்பகுதி மக்களின் உழைப்பில் உருவானவை. இன்றைக்கு அவர்கள் ஒன்றுமில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். இந்த மாநகரை உருவாக்கியவர்கள் அவர்கள்தான் என்பதற்கான ஆவணங்கள் இல்லை. முனியன் இருந்தான்... முனியன் வாழ்ந்தான்... முனியன் செத்துப்போய்விட்டான் என்பதுபோல ஆகிவிட்டது. ஒருவேளை முனியன் உயிரோடு இருந்தால், கூவம் கரையில் முனியன் இருந்தான்... அவனை தூக்கிப்போய் நகருக்கு வெளியே போட்டுவிட்டார்கள் என்பதாக இருக்கிறது. ‘நீ கொசுக்கடியில் இருக்கிறாய். எனவே, நகருக்கு வெளியே உனக்குக் கட்டடம் தருகிறோம்' என்று சொல்கிறார்கள். கட்டடம் மட்டும்தான் வீடா? என்ற கேள்வி இருக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார் கரன் கார்க்கி.

``சென்னையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம்1990-களில் தொடங்கிவிட்டது” என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா. அவரிடம் பேசினோம்.

``2010-ம் ஆண்டு 16,000 பேர் சென்னையிலிருந்து விரட்டப்பட்டார்கள். 2015 சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, நதிக்கரைகளில் ஆக்கிரமிப்பு இருப்பதால்தான் இந்தப் பிரச்னை என்ற பொதுக்கருத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. நீதிமன்றங்களும் இத்தகைய கருத்துகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் அடிப்படையில், அடையாறு மற்றும் கூவம் கரையோரங்களில் வசிப்பவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டது.

ஆற்றில் மக்கள்
ஆற்றில் மக்கள்

இப்போது ‘சென்னை நதிநீர் மறுசீரமைப்பு அறக்கட்டளை’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் திட்டமிடலின் அடிப்படையில், நதிக்கரைகளிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். ஆக்கிரமிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் மரணமடையும் ஆபத்து இருக்கிறது என்ற நிலை உண்மையிலேயே இருக்குமானால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகள் மட்டும்தான் வெளியேற்றப்படும் பட்டியலில் வருகின்றன. அந்தப் பட்டியலை அதிகாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். உதாரணமாக, சென்னை எம்.ஜி.ஆர் நகரிலுள்ள சூளைப்பள்ளம் பகுதி, செங்கற்சூளைகள் செயல்பட்டதன் காரணமாக உருவானது. அங்கு வசிக்கும் 300 குடும்பங்களை, அடையாறு நதியை விரிவுபடுத்தப்போகிறோம் என்று சொல்லி அகற்றுவதற்கு அதிகாரிகள் வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் சென்று கேள்வி கேட்டவுடன், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. உடனே, வரைபடத்தை மாற்றிவிட்டனர்.

அதேபோல, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே அமைந்துள்ள சூர்யாநகரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு அதிகாரிகள் வந்தனர். அதையும் தடுத்து நிறுத்தினோம். அந்த இடத்தில், பணக்காரர்கள் விளையாடக்கூடிய கோல்ஃப் மைதானம் உட்பட பல பெரிய கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மீதான நடவடிக்கை குறித்துக் கேள்வி எழுப்பினால், அதிகாரிகளிடம் பதிலே இல்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

மதுரவாயல் பகுதியில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் கூவம் ஆற்றங்கரை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது. அது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், `சரி, கல்லூரியைக் கட்டிவிட்டார்கள். எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதற்கு உண்டான பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் வாங்கிக்கொண்டு, அந்த இடத்தை அவரிடம் கொடுத்துவிடுங்கள்’ என்று கூறுகிறது. அப்படியென்றால், வசதிபடைத்த கல்வி வியாபாரிக்கு ஒரு நீதி, எளியவர்களுக்கு வேறு நீதியா?

செல்வா
செல்வா

நகர வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. சென்னை மாஸ்டர் பிளான் அடுத்து வரப்போகிறது. நதிக்கரைகளில் வசிக்கும் மக்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றுவதற்கான எல்லா யோசனைகளும் அந்த மாஸ்டர் பிளானில் உள்ளன. இதில், ஆளும் கட்சியினரோ, அதிகாரிகளோ தாங்களே அனைத்து முடிவுகளையும் எடுப்பது ஜனநாயக விரோதப் போக்கு. இதில், ஜனநாயகத்தன்மையைக் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம்.

சென்னை நகரின் விரிவாக்கம், வளர்ச்சி தொடர்பாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அரசுத் துறைகள் உருவாக்கும் ஆவணங்கள் அனைத்தையும் பொதுவெளியில் வைக்க வேண்டும். பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டும். ஜனநாயக முறைப்படி இந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டும். மக்களை வெளியேற்றுவதற்கான பகுதி என்று முடிவுசெய்துவிட்டால், அது எந்தப் பகுதி என்பதை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். என்ன திட்டம் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஓர் இடத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களை நகருக்கு உள்ளேயே மறுகுடியர்வு செய்ய வேண்டும். இதற்காக குடிசை மாற்று குடியிருப்புகளை அரசு கட்ட வேண்டும். ஒருபோதும் நகரத்துக்கு வெளியே மக்களைக் குடியமர்த்தக் கூடாது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அரும்பாக்கத்தில் வெளியேற்றப்பட்ட 103 குடும்பங்களுக்கு கே.பி.பார்க்கில் வசிப்பிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், காந்தி நகரில் வெளியேற்றப்பட்ட 191 குடும்பங்களுக்கு இன்னும் வசிப்படம் கொடுக்கப்படவில்லை. மழையிலும் வெயிலிலும் அவர்கள் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொள்கைரீதியாக மாற்றம் என்பது முக்கியம். எனவே, கொள்கைரீதியான மாற்றத்தை புதிதாக உருவாக்கக்கூடிய சென்னை மாஸ்டர் பிளானில் தி.மு.க அரசு கொண்டுவர வேண்டும்” என்றார் செல்வா.

சென்னையை உருவாக்கியவர்கள், சென்னை நகரின் இயக்கத்துக்கு முதுகெலும்பாகச் செயல்படுபவர்கள் இந்த உழைப்பாளி மக்கள்தான். இவர்களை செம்மஞ்சேரியிலும் கண்ணகிநகரிலும் தூக்கிக்கொண்டுபோய் போடுவோம் என்று சொன்னால், சிங்காரச் சென்னை என்று சொல்வதில் என்ன அர்த்தம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு