Election bannerElection banner
Published:Updated:

சாதிக் கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டுகள் சதி: குற்றச்சாட்டும் எதிர்வினைகளும்

இரட்டைக் கொலை - சாதிக் கலவரம்
இரட்டைக் கொலை - சாதிக் கலவரம்

``அரக்கோணம் இரட்டைக் கொலைச் சம்பவத்தை மையமாகவைத்து, அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திமுக., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டுவருகின்றன” என எல்.முருகன் விமர்சனம்.

``கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் பாஜக-வில் இணைந்துவருகின்றனர். இதனால், தனக்கு அரசியல் செய்ய இடமில்லை என்பதை உணர்ந்துகொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன் சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் அரக்கோணம் இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கையாண்டுவருகிறார். அரக்கோணம் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றாலும், அதை மையமாகவைத்து அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திமுக., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டுவருகின்றன. அது மட்டுமல்லாமல் அம்பேத்கர் பிறந்தநாளில் மதுரையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்த முற்பட்ட பா.ஜ.க-வினர் மீதான தாக்குதலையும் வி.சி.க தலைவர் திருமாவளவன்தான் தூண்டிவிட்டுள்ளார். வி.சி.க செய்யும் இத்தகைய வெறுப்பு அரசியலை முளையிலேயே கிள்ளி அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்” எனத் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தொடர்ந்து பல இடங்களில் பேசிவருகிறார்.

கட்சி நிர்வாகிகளுடன் எல்.முருகன்
கட்சி நிர்வாகிகளுடன் எல்.முருகன்

அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் மீது எல்.முருகன் வைத்துள்ள விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை: `வடமாவட்டங்களில் வி.சி.க-வினர் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டனர்!’ -  எல்.முருகன்

தி.மு.க செய்தித் தொடர்பாளர், கவிஞர் மனுஷ்யபுத்திரனின் எதிர்வினை

``தமிழ்நாட்டில் எந்தக் கட்சி சாதி மோதல்களைத் தூண்டுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதனுடன்தான் பா.ஜ.க கூட்டணிவைத்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் சாதி, மதரீதியிலான மோதல்களை உருவாக்கி, அதன் மூலம் தங்களுக்கான வாக்குவங்கியை உருவாக்குவது தவிர பா.ஜ.க-வுக்கு வேறு எந்த அரசியல் கொள்கையும் இல்லை. சாதியவாதம், மதவாதம் ஆகிய இரண்டையும் கொள்கைகளாகக்கொண்டு அரசியல் செய்யும் பா.ஜ.க., அதை மற்றவர்கள் மீது சுமத்தும் அரசியலைச் செய்கிறார்கள். சாதியவாதத்தைப் பேசுவதற்கு முன் எல்.முருகன் கண்ணாடி முன் நின்று ஒருமுறை பார்த்துக்கொள்ள வேண்டும். பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்யும் சாதி அரசியலை மறைக்கப் பிற கட்சிகள் மீது பழி சாட்டுகிறார்கள். தமிழகத்தில் சாதியவாதத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருக்கும் பா.ஜ.க-வை மக்கள் துடைத்தெறிந்துவிட்டார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கும்.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகள் ஆகிய மூன்று கட்சிகளும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக, வேற்றுமைகளுக்கு எதிராகக் களத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று கட்சிகளும் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க-வால் வேரூன்ற முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தன்முன் மைக் நீட்டப்பட்டதும் அபத்தமாகப் பேசும் எல்.முருகனின் மேலும் ஓர் அரசியல் நகைச்சுவை என்று கடந்து போய்விடுவதுதான் நல்லது” என்றார்.

இடதுசாரிகள் மீதான விமர்சனங்கள் குறித்து பேராசிரியர் அருணன்...

``இந்துக்களுக்காகவே இருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் பா.ஜ.க தலைவர்கள் ‘இரண்டு இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் விட மாட்டோம்’ என்றுதானே அவர்கள் முதலில் பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறார்கள் என்றால் இவர்களின் அரசியல் நிலைப்பாடுதான் என்ன? அதனால்தான், பா.ஜ.க இந்துக்களுக்கான கட்சி அல்ல. இந்து விரோத, மநுவாதிகளின் கட்சி என்பதை நான் தொடர்ந்து பேசிவருகிறேன். அதற்குப் பல உதாரணங்களை நான் பேசிவருகிறேன். அரசியல் பழிவாங்கும் உணர்வோடும், சாதி வெறியோடும் தாக்குதல் நடத்தப்பட்டு நிகழ்ந்த இந்தக் கொலை நடந்ததன் காரணத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமா? இது, தனிமனித, வாய்க்கால், வரப்பு தகராற்றில் நடந்தது இல்லை. அரசியல் களத்தில் பட்டியலினத்தவர் மீது நடத்தப்பட்ட கொலைகள் என்பதில் இருக்கும் நுண் அரசியலைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் எல்.முருகன், அதைப் பற்றிப் பேசவே இல்லை. அதுமட்டுமல்ல, கொலைக்கான காரணத்தையும், அதன் பின் இருக்கும் சாதி வன்மத்தையும் கண்டுகொள்ளவே இல்லை என்றால் இவர்கள் எந்த அளவுக்கு தலித் விரோதிகளாக இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது இல்லையா?

பேராசிரியர் அருணன்
பேராசிரியர் அருணன்

கைதுசெய்யப்பட்டவர்களில் அ.தி.மு.க., பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளா, இல்லையா என்று சட்டம் சொல்லட்டும். இடதுசாரிகளைப் பொறுத்தவரை சாதியை எதிர்த்து, தீண்டாமையை எதிர்த்துப் போராடிவருகிறோம். அதேநேரத்தில் மக்களின் ஒற்றுமைக்காகவும் களப்பணி செய்கிறோம். இப்படியிருக்கும்போது விஷயத்தைத் திசைதிருப்ப தி.மு.க., வி.சி.க., இடதுசாரி அமைப்புகள் மீது பழி சுமத்துவது மலிவான அரசியல்” என பதிலளித்தார்.

ராமதாஸ் புதிய இயக்கம்: விஸ்வரூபம் எடுக்கிறதா அரக்கோணம் இரட்டைக் கொலை?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனின் எதிர்வினை...

``அரக்கோணத்தில் நடந்துள்ள படுகொலை சாதிய பின்புலத்துடன் நடந்தது. அது, ஒரு கட்சியின் தூண்டுதலின் பேரில் நடந்ததா என்றால் அது விவாதத்துக்குரியது. ஆனால், சமூகத்தில் இருக்கும் வெறுப்புணர்வைக் கூர்மைப்படுத்தி, சாதிய, மத இடைவெளிகளால் உண்டான வெறுப்பைத் தவறான முறையில் வழிநடத்தி பா.ஜ.க., பா.ம.க-வினர் அரசியல் செய்துவருகிறார்கள். ஓர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த அசம்பாவிதம் குடி போதையில் நடந்துவிட்டது என பாதிப்புக்கு உள்ளானவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டுவருகிறார்கள். பிரச்னை நடந்துவிடுகிறது. அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட இளைஞர்களை அழைத்து பஞ்சாயத்துப் பேச முயன்றிருக்கிறார்கள். பஞ்சாயத்தும் சாதிய மேலாதிக்கத்துடனேயே நடந்திருக்கிறது. இந்த விஷயங்களை மலினப்படுத்துவது மிகவும் அருவருப்பானது. எல்.முருகன் எப்படி தாழ்த்தப்பட்ட தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார் என்பது பெரிய வியப்பாக இருக்கிறது. எந்த அளவுக்கும் இவர்கள் இறங்கிச் சென்று தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவார்கள் என்பதற்கு உதாரணம்தான் தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகள் மீது எல்.முருகன் வைத்துள்ள விமர்சனம்.

சிந்தனைச் செல்வன்
சிந்தனைச் செல்வன்
வி.சி.க

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிச் சாதிக் கலவரத்தைத் தூண்டுவதாக இருக்கும்? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கொலையுண்ட மக்களுக்காகத் தொடர்ந்து சட்டரீதியிலான ஆதரவை வி.சி.க அளித்துவருகிறது. சட்டத்தின் ஆட்சிதான் தலித் மக்களுக்கான பாதுகாப்பு என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒருபோதும் தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகள் அமைப்பு பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில்தான் நிற்கும். அதற்காக எந்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எல்.முருகனின் இந்தக் கருத்தை மத, சாதி வெறுப்பைவைத்து அரசியல் செய்யும் இயக்கங்களின் குரலாகத்தான் பார்க்கிறேன்” என விளக்கம் அளித்தார்.

தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதி பதில்...

``சாதியப் படுகொலை என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத அரக்கோணம் இரட்டைக் கொலையை, சாதியப் படுகொலை என்றும், அதற்கு முன் நடந்த உடுமலைப் படுகொலையை எந்த அடைமொழி கொடுத்தும் திருமாவளவன் பேசியது ஏன்? இது வேண்டுமென்றே சாதிய அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது... அதுமட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாக தி.மு.க., வி.சி.க., இடதுசாரி அமைப்புகள்தான் இந்து மதம் குறித்தும், இந்துப் பெண்கள் குறித்தும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்துவருகின்றன. இது அனைவருக்கும் தெரியும். தி.மு.க-வைச் சேர்ந்த கறுப்பர் கூட்டமாகட்டும், திருமாவளவனின் மநுநூல் குறித்த கருத்துகளாகட்டும்... அனைத்தும் இந்து மக்களிடையே கடும் அதிர்வுகளை ஏற்படுத்திவந்தன. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட சில சாதியினரை மிகக் கடுமையாகப் பேசியது அத்தனையும் தமிழகத்தில் சாதிரீதியிலான, மதரீதியிலான அரசியலை அவர்கள் முன்னெடுத்ததற்கு உதாரணங்கள்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்து மக்களை விமர்சிப்பதன் மூலம் இஸ்லாமிய, கிறித்துவ மதத்தினரின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற சிந்தனையோடு தி.மு.க., வி.சி.க., இடதுசாரி அமைப்புகள் செயல்பட்டுவந்தன என்பதைத் தொடர்ந்து நாம் சொல்லிவருகிறோம். மதவாத சிந்தனை உடையவர்கள் தி.மு.க., வி.சி.க., இடதுசாரியினர்தான் என்பதில் எந்த மாற்றக் கருத்தும் இல்லை. பா.ஜ.க பிற மதம் குறித்து எந்தத் தவறான கருத்தையும் இதுவரை பேசியதில்லை” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு