Published:Updated:

ராணிப்பேட்டை: நேரடி அரசியல்; அமைச்சர் காந்தியின் மகனுக்கு மாநிலப் பதவி! - பின்னணி என்ன?

``தன் மகனுக்குப் பதவியில்லாத நிலையிலும், அமைச்சர் காந்தியின் மகனுக்குப் பதவி கொடுக்கக்கூடிய கையொப்பத்தை எதிர்ப்பு தெரிவிக்காமல் துரைமுருகன் போட்டிருப்பது, பொதுச்செயலாளருக்கான கண்ணியத்தைக் காட்டுகிறது’’ என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தியின் மூத்த மகன் வினோத், தி.மு.க-வின் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் ‘முரசொலி’யில் வெளியானது. அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்துவந்த வினோத் நேரடி அரசியலுக்குள் இதுவரை வரவில்லை. அப்படியிருக்க, வினோத்தை திடீரென அறிவாலயம் தூக்கிப் பிடிப்பதற்குப் பின்னால் தந்தை காந்தியின் தந்திரம் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, நான்காவது முறை சட்டமன்றத்துக்குத் தேர்வாகியிருக்கும் காந்திக்கு வினோத், சந்தோஷ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சர்வதேச தரத்திலான `ஜி.கே‘ பள்ளி இயக்குநர்களான இருவரும் நேரடி அரசியலில் தலைகாட்டாமல் இருந்தனர். ஆனாலும், தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி மகன்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-வில் அதிகாரம் செலுத்திவருகிறார்கள்.

காந்தி, மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், கட்சிப் பணிகளில் அவரின் மகன்கள் தலையீடு அதிகம் இருக்கிறது. பல்வேறு சமயங்களில் தந்தைக்கு பதிலாக அவருடைய மகன்கள்தான் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குகிறார்கள். தந்தைக்குக் கிடைக்கும் அதே மரியாதை, வரவேற்புகள் இரு மகன்களுக்கும் கொடுக்கப்படுகின்றனவாம்.

காந்தியின் மகன் வினோத்
காந்தியின் மகன் வினோத்

இதனால், தி.மு.க-வினர் மட்டுமன்றி, அரசு அலுவலர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. ராணிப்பேட்டை தி.மு.க-வின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும் காந்தியின் மகன்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கட்சிப் பொறுப்பில் இல்லாதவர்கள் குறித்து தி.மு.க-வின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவிடுவது, தி.மு.க மூத்த நிர்வாகிகளையும் கடுப்படையச் செய்திருக்கிறது. `அமைச்சர் காந்தியின் குடும்பச் சொத்தா ராணிப்பேட்டை தி.மு.க?’ என மூத்த நிர்வாகிகள் பலர் கடுகடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் நேரடி அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் காந்தியின் மூத்த மகன் வினோத். அதேசமயம் கட்சி, ஆட்சி இரண்டிலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்த அதிகாரத்திலிருக்கும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு இதுவரை கட்சிப் பொறுப்பு வழங்கப்படவில்லை. வேலூர் எம்.பி-யாக இருந்தாலும், தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே கடைநிலைத் தொண்டனுக்கு நிகராக வைக்கப்பட்டிருக்கிறார்.

தந்தை துரைமுருகனுடன் கதிர் ஆனந்த்
தந்தை துரைமுருகனுடன் கதிர் ஆனந்த்

இப்படியான சூழலில், அருகிலிருக்கும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அமைச்சர் காந்தியின் மகனுக்கு, மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, கதிர் ஆனந்துக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தலாம். தன் மகனுக்குப் பதவியில்லாத நிலையிலும், காந்தியின் மகனுக்குப் பதவி கொடுக்கக்கூடிய கையொப்பத்தை எதிர்ப்பு தெரிவிக்காமல் துரைமுருகன் போட்டிருப்பதும், பொதுச்செயலாளருக்கான கண்ணியத்தைக் காட்டுகிறது. என்றாலும், தி.மு.க-வுக்குள் வாரிசு அரசியல் வளர்க்கப்படுவதும் வேதனையளிக்கிறது’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு