Published:Updated:

ஒவைசி, அரவிந்த் கெஜ்ரிவால் - வட இந்தியத் தேர்தல் முடிவை மாற்றும் சக்தியாக முன்னணியிலிருப்பது யார்?

அசாதுதீன் ஒவைசி - அரவிந்த் கெஜ்ரிவால்

ஒவ்வொரு மாநிலத் தேர்தலின்போதும் தாங்கள்தான் மாற்று எனச் சொல்லி இந்த இரண்டு கட்சிகளும் களமிறங்கினாலும், பா.ஜ.க-வின் 'பி' டீம் என்கிற முத்திரை இரண்டு கட்சிகளின் மீதும் சுமத்தப்படுவதுண்டு.

ஒவைசி, அரவிந்த் கெஜ்ரிவால் - வட இந்தியத் தேர்தல் முடிவை மாற்றும் சக்தியாக முன்னணியிலிருப்பது யார்?

ஒவ்வொரு மாநிலத் தேர்தலின்போதும் தாங்கள்தான் மாற்று எனச் சொல்லி இந்த இரண்டு கட்சிகளும் களமிறங்கினாலும், பா.ஜ.க-வின் 'பி' டீம் என்கிற முத்திரை இரண்டு கட்சிகளின் மீதும் சுமத்தப்படுவதுண்டு.

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி - அரவிந்த் கெஜ்ரிவால்

அகில இந்திய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தலைவராக உருவெடுக்கும் ஆசை பலருக்கு இருந்தாலும், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருப்பது இருவர்தான். ஒருவர், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். மற்றொருவர் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி. இன்னும் சொல்லப்போனால், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிராக, எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இடத்துக்குப் போட்டியிடுபவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் பெரும்பாலான மாநில சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உச்சரிக்கப்படும் பெயர்களாகவும் இருவரின் பெயர்களும் மாறியிருக்கின்றன.

ஒவைசி
ஒவைசி

இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி/மார்ச் மாதத்தில், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும், நவம்பரில் குஜராத்துக்கும், டிசம்பரில் இமாச்சலப்பிரதேசத்துக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், மணிப்பூர் தவிர மற்ற ஆறு மாநிலங்களில் ஆம் ஆத்மியும், உத்தரப்பிரதேசம், குஜராத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் போட்டியிடவிருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. தவிர, கோவா, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல மாநில உள்ளாட்சி அமைப்புகளில் கணிசமான வெற்றியை அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. ஏ.ஐ.எம்.ஐ.எம்-முக்கு, தன் சொந்த மாநிலமான தெலங்கானாவில் ஏழு எம்.எல்.ஏ-க்களும், இரண்டு எம்.எல்.சி-க்களும், ஒரு எம்.பி-யும் இருக்கிறார்கள். ஹைதராபாத் மாநகராட்சியில், 44 மாமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தவிர, பீகாரில் ஏழு எம்.எல்.ஏ-க்கள், மகாராஷ்டிராவில் ஒரு எம்.பி., உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் இரண்டு கட்சிகளும் ஒருசில இடங்களில் போட்டியிடவிருக்கின்றன.

ராதாகிருஷ்ணன்  - மூத்த பத்திரிகையாளர்
ராதாகிருஷ்ணன் - மூத்த பத்திரிகையாளர்

ஒவ்வொரு மாநிலத் தேர்தலின்போதும் மாற்று எனச் சொல்லிக்கொண்டு இந்த இரண்டு கட்சிகளும் களம் இறங்கினாலும், `பா.ஜ.க-வின் பி டீம்’ என்கிற முத்திரை இரண்டு கட்சிகளின் மீதும் சுமத்தப்படுவதுண்டு. இது குறித்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர், ராதாகிருஷ்ணன்,

``பா.ஜ.க எதை விரும்புகிறதோ அதைத்தான் இருவருமே செய்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே தலைவராக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவைசியின் ஆசை. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே அவர் மிக கவனமாக இருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் அவரின் முயற்சி பலிக்கவில்லை. பீகாரில் வெற்றிபெற்றார். தமிழகத்திலும்கூட முயன்றுவருகிறார். ஆனால், அரசியல் பார்வையுள்ள இஸ்லாமியர்களிடம் அவரின் அரசியல் எடுபடாது. பொதுவாக, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இந்துக்களின் வாக்குகளைத் திரட்டுவதற்கு அவரின் பேச்சுகள், செயல்பாடுகள் உதவியாக இருக்கின்றன.

அதேவேளையில், இஸ்லாமியர்கள் அதிகமாக இல்லாத பகுதிகளில் ஊழல் ஒழிப்பு என்கிற அஜென்டாவோடு ஆம் ஆத்மி கட்சி களமிறங்குகிறது. பா.ஜ.க `ஜெய் ஶ்ரீராம்' என்றால், அரவிந்த் கெஜ்ரிவால் `ஜெய் ஹனுமான்' என்கிறார், சங்பரிவாரைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்றுதான். ஆக மொத்தத்தில், அரவிந்த் கெஜ்ரிவால், ஒவைசி இருவருமே ஆர்.எஸ்.எஸ் விரும்புவதைத்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு பி.டீமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வெளியை பா.ஜ.கவே உருவாக்கிக் கொடுக்கிறது. தவிர, இவர்களுக்குக் கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் இல்லை. மக்களைக் குழப்புவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்'' என்கிறார் கடுமையாக.

ஒவைசி
ஒவைசி

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தமிழகத் தலைவர் வக்கீல் அகமதுவிடம் பேசினோம்.

``காங்கிரஸ் கட்சியே உத்தரப்பிரதேசத்தில் தனியாகத்தான் தேர்தலில் நிற்கப்போகிறது. அப்படியென்றால் அவர்கள் யாருக்கு பி டீம் எனச் சொல்ல வேண்டும். உத்தரப்பிரதேசத்தில், ஷிவ்பால் யாதவைச் சந்தித்து எங்கள் தலைவர் பேசியிருக்கிறார். அகிலேஷ் யாதவுடன்கூட கூட்டணிவைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதேவேளையில், அவர்கள் முன்வரவில்லையென்றால் நாங்கள் என்ன செய்வது... ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில்கூட, காங்கிரஸ் கட்சி எங்களைச் சரியாக நடத்தாததால்தான் நாங்கள் தனியாகப் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. நாங்கள் யாருடைய வாக்குகளையும் பிரிக்க வரவில்லை. எங்களுடைய உரிமைக்காகப் போட்டியிடுகிறோம். அவ்வளவுதான்'' என்கிறார் அவர்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரனிடம் பேசினோம்.

``அகில இந்திய அளவில், பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட காங்கிரஸ் கட்சியிடம் நாங்களாகச் சென்று பேசினோம். அவர்கள்தான் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் வளர்வதை அவர்கள் விரும்பவில்லை. எங்களுடன் சேர்ந்திருந்தால், டெல்லியில் ஏழு இடங்களில் பா.ஜ.க-வின் வெற்றியைத் தடுத்திருக்கலாம். நாட்டு மக்களைவிட கட்சிதான் முக்கியம் என முடிவெடுத்தார்கள். ஆனால், டெல்லியில் காங்கிரஸ் காணாமலேயே போய்விட்டது. அப்படியென்றால் ஸ்பாய்லர் நாங்களா இல்லை காங்கிரஸா?

வசீகரன்
வசீகரன்

மக்கள் எங்களை மாற்றாகத் தேர்தெடுக்கிறார்கள். பஞ்சாப்பில் எதிர்க்கட்சியாக வளர்ந்திருக்கிறோம். கோவாவில் ஆறு சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறோம். சூரத் மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எங்களுடைய அடுத்த இலக்கு குஜராத் சட்டமன்றத் தேர்தல்தான். அங்கே காங்கிரஸ் கட்சியிலிருந்தும், பா.ஜ.க-விலிருந்தும் பலர் எங்கள் கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். உ.பி-யிலும் உத்தரகாண்டிலும் முழுவீச்சில் இறங்க முடிவு செய்திருக்கிறோம். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சி சரியான திட்டமிடுதலுடன் எந்த வேலையும் செய்யவில்லை. அவர்களுக்கு நாங்கள் ஸ்பாய்லர் அல்ல, அவர்கள் தாங்களாகத்தான் ஸ்பாயில் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக யார் வந்தாலும் இப்படித்தான் முத்திரை குத்துவார்கள். அதில் எள்ளவும் உண்மையில்லை. எங்கள் தலைமையில்கூட எதிர்காலத்தில் கூட்டணி அமையலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.

காங்கிரஸ் மீதான விமர்சனங்கள் குறித்து, அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம்.

``ஒவைசியின் அரசியல் சித்தாந்தம் நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியது. பெரும்பான்மை இந்து மதத்தின் மீது தொடர்ந்து துவேஷக் கருத்துகளைப் பேசிவருகிறார். இந்து - முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். இஸ்லாமியர்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு கூடுகிறது. அதனால், பாதிக்கப்படுவது மதச்சார்பற்ற சக்திகள்தான். இவர்களால் தனியாக பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கும்போது பா.ஜ.க-வுக்கு எதிரான சக்திகளுடன் ஒருங்கிணைய வேண்டும். காங்கிரஸைத் தோற்கடிக்கத்தான் அவர் பயன்படுகிறார். பா.ஜ.க-வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுகிறார். அவர்களின், பி டீமாகச் செயல்படுகிறார்.

கோபண்ணா
கோபண்ணா

கெஜ்ரிவால் பா.ஜ.க எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறார், அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், காங்கிரஸுடன் சேர்ந்தால் நம்முடைய முக்கியத்துவம் குறைந்துவிடும் என அவர் நினைக்கிறார். பஞ்சாப்பில்கூட அவர்கள் தனியாக நிற்பது காங்கிரஸைத்தான் பலவீனப்படுத்தும். இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையும் இதைத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பா.ஜ.க-வுக்கு ஒரே மாற்றாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தீவிரமான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒவைசியைப் பொறுத்தவரை, அவரின் வெறுப்புப் பேச்சுகள் அவருடன் இணைவதைத் தடுக்கின்றன. பிரச்னைகளை மதத்தின் அடிப்படையில் அணுகுவது தவறு. அதேவேளையில், கெஜ்ரிவால் எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால் எங்கள் தலைவர் ராகுல் வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்'' என்கிறார்.