Published:Updated:

கேல் ரத்னாவில் துண்டிக்கப்பட்ட ராஜீவ் காந்தி... காங்கிரஸ் சுவடுகளை அழிக்க நினைக்கிறதா மோடி அரசு?

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

``கேல் ரத்னா விருதில் ராஜீவ் காந்தி பெயரை நீக்கிவிட்டு, தயான்சந்த்தின் பெயரைவைத்ததுபோல், குஜராத் மைதானத்துக்கு நரேந்திர மோடி பெயரை நீக்கிவிட்டு கபில்தேவின் பெயரை வையுங்கள்!'' - நெட்டிசன்கள் | காங்கிரஸின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறதா மோடி அரசு?!

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, 1991-92 காலகட்டத்திலிருந்து மத்திய அரசால் `ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது' வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியன்று இந்த விருதின் பெயரை `தயான்சந்த் கேல் ரத்னா விருது' என்று மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தார் பிரதமர் மோடி.

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``கேல் ரத்னா விருதை, `மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது’ என்று பெயர் மாற்றம் செய்யுமாறு பலரிடமிருந்து எனக்கு வேண்டுகோள் வந்தது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், `மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது’ என்று இந்த விருது அழைக்கப்படும்'' என்று பதிவிட்டிருந்தார்.

மோடி
மோடி

இதையடுத்து பா.ஜ.க-வினர் பலரும், ``இது சிறந்த முடிவு. விளையாட்டுத்துறையின் உயரிய விருதுக்கு அரசியல் தலைவர்களின் பெயரைவிட விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை வைப்பதே பொருத்தமானது. அப்படி ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முன்னோடியாக விளங்கிய மேஜர் தயான்சந்த்தின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு வைத்திருப்பது மிகவும் அருமையான விஷயம்'' என்று மோடியைப் புகழ்ந்து தள்ளினர்.

 `சிவா பீச், சிவா ஏர்போர்ட்' = `மோடி ஸ்டேடியம்', `ரிலையன்ஸ் END', `அதானி END' - நெட்டிசன்கள் கலாய்!
தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், ``விளையாட்டுத்துறை விருதுக்கு விளையாட்டு வீரரின் பெயர்வைத்தது சரியே! அதேபோல விளையாட்டு மைதானங்களுக்கும் விளையாட்டு வீரர்களின் பெயரைத்தான் வைக்க வேண்டும். எனவே, குஜராத் நரேந்திர மோடி மைதானத்துக்கு கபில்தேவ் அல்லது சச்சினின் பெயரை வையுங்கள்! டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் பெயரையும் மாற்றுங்கள்'' என்று பதிவிடத் தொடங்கினர்.

இதற்கு பதிலளித்த பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர், ``விருதுக்கும் மைதானத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு துறையின் உயரிய விருதுக்கு அந்தத் துறையில் உயரம் தொட்ட ஒருவரின் பெயரை வைப்பது, விருது பெறுபவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். ஆனால், மைதானங்களுக்கு அப்படிப் பெயர்வைக்க வேண்டிய அவசியமில்லை'' என்றார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும், ``முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நவீன இந்தியாவை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்காற்றியவர். இந்த நாட்டுக்காக உயிர்த் தியாகத்தைச் செய்தவர். அவ்வளவு பெருமைக்குரியவர் என்பதால்தான், இந்த உயரிய விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

மொரார்ஜி தேசாய் அரசு, வி.பி.சிங் அரசு, வாஜ்பாய் அரசு ஆகிய அரசுகள் பல்வேறு திட்டங்களுக்கும் விருதுகளுக்கும் பல பெயர்களைச் சூட்டியுள்ளன. அந்தப் பெயர்கள் எதுவுமே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாற்றப்படவில்லை. பா.ஜ.க அரசு பெயரை மாற்றும் வேலையில் ஈடுபடுவது என்பது வரலாற்றை மாற்றும் செயல், வரலாற்றை மறைக்கும் செயல். இதுதான் பாசிசம்'' என்று பா.ஜ.கமீது கடும் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.

தயான் சந்த்
தயான் சந்த்
`இந்திய ஹாக்கி அணி' வெற்றிபெறும்போதெல்லாம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கொண்டாடப்படுவது ஏன்?!

மேலும், ``விருதின் பெயரை மாற்றினாலும், ராஜீவ் காந்தியின் புகழையும், நாட்டுக்காக காங்கிரஸ் செய்த சேவைகளையும் அழித்துவிட முடியாது'' என்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள் சிலர், ``விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு, அரசியல் தலைவரின் பெயரைக் காட்டிலும் விளையாட்டுத்துறையில் சாதித்தவரின் பெயரை வைப்பதுதான் சிறந்தது. அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இருந்தும், பல காலங்களாக ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டுவந்த விருதுக்கு தற்போது பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. கொரோனா, விலைவாசி உயர்வு என இக்கட்டான சூழலில் நாடு இருக்கும் வேளையில், இது போன்ற நடவடிக்கைகள் தேவையற்ற அரசியல் விவாதங்களை மட்டுமே ஏற்படுத்தும்.

இதற்கு முந்தைய வாஜ்பாய் அரசுகூட இந்தப் பெயரை மாற்ற நினைக்கவில்லை. கடந்த எழு ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் மோடி அரசு, இவ்வளவு நாள்களாக இந்த விருதின் பெயரை மாற்றவில்லை. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக, இந்தியாவில் கடந்த சில நாள்களாக ஹாக்கி விளையாட்டு கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில், ஹாக்கியில் சாதித்த தயான்சந்த்தின் பெயரை மாற்றியிருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டு, தருணம் பார்த்துத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகவே தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அரசால் தயான்சந்த் பெயரில் வழங்கப்பட்டுவருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. அப்படியிருக்கையில் மற்றொரு விருதுக்கும் அவர் பெயர் சூட்டப்பட்டிருப்பது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

பலரிடமிருந்து கோரிக்கை வந்ததால்தான் விருதின் பெயரை மாற்றியதாக பிரதமர் கூறினாலும், இது காங்கிரஸின் அடையாளங்களை வரலாற்றிலிருந்து நீக்குவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதைப்போலவே தோன்றுகிறது.

அதானி எண்ட், ரிலையன்ஸ் எண்ட்
அதானி எண்ட், ரிலையன்ஸ் எண்ட்
Twitter
Vikatan

கட்சி சார்பு எதுவுமில்லாத பொதுமக்களிடம் பா.ஜ.க அரசின் இந்தச் செயல் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை `தன் ஆட்சிக் காலத்திலேயே தனது பெயரை கிரிக்கெட் மைதானத்துக்கு வைத்துக்கொண்ட தலைவர்' என்று மோடியைப் பொதுமக்கள் விமர்சிக்கவும் செய்கிறார்கள். கூடவே ரிலையன்ஸ், அதானி நிறுவனங்களின் பெயர்களை நரேந்திர மோடி மைதானத்திலிருக்கும் பெளலிங் எண்டுகளுக்கு வைத்திருப்பதையும் விமர்சிக்கிறார்கள். எனவே, இது பா.ஜ.க-வுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கிறது'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு