Published:Updated:

`சண்ட செய்வோம்...' சென்னை சேப்பாக்கத்தில் இசையோடு முழங்கிய கலைஞர்கள் போராட்டம்!

பறையிசை விடுதலை இசையாய் ஒலிக்க, சேப்பாக்கம் அதிர, விருந்தினர் மாளிகையில் முழங்கியது முற்போக்காளர்கள் குரல்...

எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களப்பணியாளர்கள் இணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்தும் இசையைப் போராட்ட ஆயுதமாகக் கொண்டு நேற்று சென்னை சேப்பாக்கத்தில் தொடர் இசைமுழக்கப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் எம்.பி-க்கள் கனிமொழி, தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

போராட்டம்
போராட்டம்

சூழலியல் போராளிகள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் எனக் காலையிலேயே களைகட்டியது சேப்பாக்கம். பத்து பதினைந்து பஸ்களில் அணிவகுத்து வந்திருந்த போலீசஸார் கெடுபிடியிலேயே மொத்த போராட்டமும் நடந்தேறியது. முன்னதாக சாமியான போடுவதற்கும் அனுமதி மறுத்திருந்ததால் வெட்டவெளியில் மேடைகூட போடாமல் ஒரு பேனர் சகிதமாக சிவப்புக் கம்பளத்திலேயே மொத்தப் போராட்டமும் நடைபெற்றது.

இஸ்லாமியர்களை இந்தியா ஒருகாலத்திலும் பிரித்துப் பார்த்ததில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கும்போது அரசு சார்பில் சென்றவர்கள் மூவரும் இஸ்லாமியர்கள். எங்களோடு என்றும் ஒன்றிணைந்து இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். அதனால்தான் மாபெரும் மக்கள் போராட்டம் இந்த ஆதிக்கத்துக்கு எதிராக இந்தப் பாசிசத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெறுகிறது.
பண்ருட்டி வேல்முருகன்

சிறு கலைநிகழ்ச்சிக்குப் பிறகு முதலாவதாக, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியைப் பேச அழைத்தனர். அவர் பேசுகையில்,

``இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். போராட்டக்காரர்கள் அனைவரும் அமைதிவழியில் போராடுகிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தில்கூட வன்முறைகள் நடைபெற்றன. அது ஆங்கிலேயர்களின் மேலிருந்துந்த கோபம், இங்கு ஆட்சியாளர்களின் மீதுள்ள கோபத்தால் ஓரிரு சம்பவங்கள் நடைபெறலாம். ஆனால், பெரும்பாலான சம்பவங்கள் அங்கிருக்கக்கூடிய அரசு படைகள்தான் உருவாக்குகின்றன.

எதைக் கொண்டுவந்தாலும் மதிக்க வேண்டும் என்ற திமிரில் இருக்கின்றனர் ஆட்சியாளர்கள். அந்தத் திமிரின்மீது விழுந்த முதல் சவுக்கடி அஸ்ஸாம் கொடுத்தது. அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். எந்தத் தலைவரின் கட்டுப்பாட்டிலும் எந்தக் கட்சியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத மக்கள் போராட்டத்தை அதிகார வர்க்கத்தினரே எங்காவது குண்டை வைத்துவிட்டு முஸ்லிம்கள் வைத்தார்கள் என்று திசைதிருப்ப இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன" என்றார்.

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி
`என் குரலைப் பதிவு செய்யவே இந்த மேடை!' -பட்டமளிப்பு விழாவைப் போர்க்களமாக்கிய மாணவி #CAA

மதியம் 2 மணி வரைக்கும் அனுமதி வாங்கியிருந்த நிலையில், பகல் 11 மணிக்கே போலீஸார் போராட்டத்தை முடித்துக்கொள்ள வலியுறுத்த ஆனாலும், போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.

தொடர்ந்து பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ``ஒரு ஜனநாயக நாட்டில் தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எதற்கு இத்தனை கெடுபிடிகள், எதற்கு இத்தனை போலீஸ்களை இங்கு குவித்திருக்கிறார்கள்..? உங்கள் இந்து மதத்தில் இருக்கிற சாதித் தீண்டாமையை வெறுத்து இஸ்லாமியர்களாக மாறியவர்கள்தாம் இங்கிருக்கிறார்கள். இவர்கள் சவுதியிலிருந்தும் அரேபியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். மக்கள் தொகை வேறு, குடிமக்கள் வேறு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மக்கள்தொகை பதிவேட்டில் குடிமக்கள் பதிவுக்கான புதிய கேள்விகளையும் அதில் அவர்கள் இணைப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனுஸ்ம்ரிதியை அடிப்படையாகக் கொண்டு தகுதிப்படுத்துதலைச் செய்கிறார்கள். கல்விகற்கவும், மருத்துவம் படிக்கவும், வேலை செய்யவும், சொத்து வைத்துக்கொள்வதற்கும் தகுதி இருக்கிறதா என்று கேட்டவர்கள், இன்று இந்த நாட்டில் நீ குடியிருப்பதற்கு தகுதியிருக்கிறதா என்று கேட்கிறார்கள். நாங்கள் இந்த நிலத்தின் பூர்வகுடி மக்கள். நாங்கள் முடிவு செய்கிறோம் யார் இந்த நிலத்தில் வாழ வேண்டும் என்பதை. இந்தப் போராட்டத்தின் முடிவு இந்தச் சட்டத்தை திரும்பப் பெறு என்பது அல்ல, இந்துத்துவ அரசே வெளியேறு என்பதுதான்" என்று பேசி முடித்தார்.

உலகில் வேறெந்த நாடும் செய்யாத அளவுக்கு இணையத்தை முடக்கியிருக்கிறது இந்த அரசு. இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் 25 உயிர்களைக் கொன்று குவித்த கொலைகார ஆட்சியாக மோடியின் ஆட்சி இருக்கிறது. நீங்கள் எங்கள் மீது தொடுக்கும் போர் முனையைவிட இங்குள்ள எழுத்தாளர்கள் கையிலுள்ள பேனா முனை சிறந்தது என எடப்பாடி தெரிந்து கொள்ளாவிட்டாலும் மோடி தெரிந்துகொள்ள வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

அதன்பின் போலீஸார் கூட்டத்தை சீக்கிரம் முடிக்க வற்புறுத்தியதால், பேசுபவர்கள் குறைந்த நேரத்தில் பேசி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனிடையே இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டத்துக்கு வந்து அமர்ந்தார்.

தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ``அஸ்ஸாமில் பரீட்சார்த்த முயற்சியாகச் செய்யப்பட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என 19 லட்சம் பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில், 12 லட்சம் பேர் இந்துக்கள், 7 லட்சம் பேர் முஸ்லீம்கள், சட்டவிரோதமாகக் குடியேறிய இந்துக்கள் இந்தநாட்டில் இருக்கலாம் என்றும் சட்டவிரோதமாகக் குடியேறிய இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாதென்றும் இந்த அரசு கூறியிருக்கிறது.

சங்க் பரிவார இயக்கத்தின், ஆளும் பா.ஜ.க அரசின் திட்டமெல்லாம் இந்தத் தேசத்துக்கு `இந்துராஷ்டிரம்' என்று பெயர் சூட்ட வேண்டும், இந்தத் தேசத்தை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம். முதலில் அதைக் கிழித்தெறிய வேண்டும் என நினைக்கிறார்கள். அதை வெளிப்படையாகச் செய்ய முடியாது. அதனால், இதுபோன்ற சட்டங்கள் மூலம் அதை மதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதுமாதிரியான வேலைகளைச் செய்யத் துணிகிறார்கள்" என்றார்.

அவர்களின் முதல் நோக்கம் முஸ்லிம்கள் அல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். அதை செயலிழக்கச் செய்துவிட்டு மனுதர்மத்தை இந்தியாவின் சட்டமாக இயற்றுவதுதான் அவர்களின் திட்டம். அதற்கு முஸ்லிம் எதிர்ப்பு, முஸ்லிம் வெறுப்பு அரசியல் அவர்களுக்கு பயன்படும். அதற்கு எதிராக மக்கள் ஒன்றுதிரளுவது முஸ்லிம் மக்களைக் காக்க மட்டுமல்ல, இந்தத் தேசத்தைக் காக்கவும்தான். அதனால்தான் சென்ற ஆண்டு `தேசம் காப்போம்' மாநாடு வி.சி.க சார்பில் நடைபெற்றது. இதெல்லாம் நடக்கும் என்று அப்போதே கூறியிருந்தோம்.
தொல்.திருமாவளவன்.எம்.பி

அவருக்குப் பிறகு எழுத்தாளர் சல்மா மற்றும் முஸ்லிம் லீக்கின் முஹம்மது அபுபக்கர் தனது சிறு உரைகளை வழங்கினர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவரான நல்லகண்ணு வந்ததும் பேச்சை நிறுத்திவிட்டு, அவரது 95-வது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறி மரியாதை செய்துவிட்டு தொடர்ந்தனர். பின்னர், `காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்' எனும் கலைக்குழுவிலிருந்து வந்திருந்த ராப் மற்றும் கானா பாடகர் அறிவு தன் அடையாளப் பாடலான `ஆன்டி-இந்தியன்' பாடலைப் பாடியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கென உருவாக்கப்பட்ட `சண்ட செய்வோம்' என்ற பாடலைப் பாடி இசை வடிவிலான போராட்டத்துக்கு அர்த்தம் சேர்த்தார்.

அறிவு
அறிவு
`குறுஞ்செய்திகளுக்கு நன்றி!’ - #CAA போராட்டத்தால் வெளியேற்றப்பட்ட ஜெர்மன் மாணவர் நெகிழ்ச்சிப் பதிவு

தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது,

``11 மாநில முதல்வர்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள். எடப்பாடி அதைச் சொல்ல மாட்டார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். தேசிய குடியுரிமைப் பதிவேடு பற்றி 2014-லிருந்து விவாதிக்கவே இல்லை என்று கூறியிருக்கும் மோடி, பல நேரங்களில் நீங்கள் நாடாளுமன்றத்தில் இருந்திருக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், இயற்றுவோம் என்று மே மாதம் முதல் அமித் ஷா உங்களிடம் பேசாமலே சொன்னாரா... 2024-க்குள் இதை முடிப்போம் என்று சொன்னாரே உங்களிடம் விவாதிக்காமல் அதைச் சொன்னாரா... இல்லை 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று இருந்ததை நீங்கள் படிக்கவில்லையா..? ஆடையைப் பார்த்து அடையாளம் காணும் நீங்கள் எங்கள் மனங்களைப் பார்க்க மாட்டீர்களா... கம்யூனிஸ்டுகள் எப்போதும் போராட்டத்துக்கு பின்னால் இருக்க மாட்டோம், முன்னாள் இருப்போம்" என்று ஆக்ரோஷமாகப் பேசி முடித்தார்.

``எக்கச்சக்க பிரிவினைகள் நம் முன் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றைக் கடந்து ஒன்றாக இணைவது கடினமாகவே இருக்கும்போது, அந்தச் சிக்கலைத் தீர்க்கும் விதமாக நமக்கு எதிரில் இருப்பவர்கள் சில விஷயங்களைச் செய்து நம்மை ஒன்றிணைத்துவிடுகிறார்கள்''
பா.இரஞ்சித்
பொள்ளாட்சி பயங்கரம் முதல் சுபஶ்ரீ மரணம் வரை... 2019-ம் ஆண்டின் மறக்க முடியாத துயரங்கள்!

அதன்பின்னர் ஆர்.நல்லகண்ணுவை பேச அழைத்து, அவர் பேசுவதற்கு முன் ரெட் சல்யூட், செவ்வணக்கம் போன்ற முழக்கங்கள் தந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித் பேச வந்தார்.

``நம்மில் ஏற்படும் பயத்தின் மூலம் ஓர் ஒற்றுமை உருவாகிறது. இந்திய அளவில் கன்ஹையா குமாருடைய, சந்திரசேகர ஆசாத்துடைய பங்கு மிகப்பெரியது. சமீபத்தில் தி.மு.க நடத்திய பேரணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி அரசு தொடர்ந்து பி.ஜே.பி அரசின் திட்டங்களை எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரித்து வருகிறது. அரசுடைய ஆதரவும் மக்களுடைய மனநிலையும் ஒரு கோட்டில் இல்லை என்பதுதான் உண்மை'' என்றார்.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடக்க முக்கிய காரணமாக இருந்த மாணவர் ஒருவரும் எம்.பி கனிமொழியும் மற்றும் சில கலைஞர்களும் உரையாற்றியவுடன், பறை இசை தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் ஓங்கி ஒலித்தது. இந்தச் சத்தம் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை ஓயாது என்று அனைவரும் ஒன்றாக முழங்க போராட்டம் நிறைவு பெற்றது.

- ஜான் ஜே ஆகாஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு