Published:Updated:

தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி! - உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் தகவல்

கலிலுல்லா.ச

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார்.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி

பா.ஜ.க அரசு 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அருண் ஜெட்லி. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர். இதனிடையே அண்மைக்காலமாக ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். கடந்தாண்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார் அருண் ஜெட்லி.

முன்னாள் நிதித்துறை அமைச்சர்
முன்னாள் நிதித்துறை அமைச்சர்

அப்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஜெட்லியின் பொறுப்பு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலிலும் ஜெட்லி போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டார். உடல்நிலை சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார்.

Vikatan

இந்நிலையில், நேற்று திடீரென அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றபட்டுள்ளார். அவரது உடல்நிலைத்தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``ஜெட்லி இன்று (நேற்று) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை
எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராக உள்ளது” என்று குறிபிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.