Published:Updated:

எப்படி இருக்கிறார் அருண் ஜெட்லி? - மருத்துவமனைக்கு விரைந்த தலைவர்கள்

சத்யா கோபாலன்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Arun Jaitley
Arun Jaitley

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி இந்த முறை எந்தப் பதவியிலும் இல்லாமல் தற்காலிகமாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததே அரசியல் ஓய்வுக்குக் காரணம் என அவரே தெரிவித்துள்ளார்.

Arun Jaitley
Arun Jaitley

தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர் அருண் ஜெட்லி. மத்திய அமைச்சராக இருந்ததிலிருந்தே அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில்தான் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெட்லி. அவரது உடல்நிலை பற்றி ஆகஸ்ட் 10-ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ``தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Arun Jaitley
Arun Jaitley

தொடர்ந்து அருண் ஜெட்லியைக் கண்காணிக்கச் சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 10-ம் தேதிக்குப் பிறகு ஜெட்லியின் உடல்நிலை குறித்த எந்த அறிக்கையும் மருத்துவமனை வெளியிடவில்லை.

Vikatan

இதற்கிடையில் நேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாதி தலைவர் மாயாவதி போன்றவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.

Arun Jaitley
Arun Jaitley

ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால்தான் நேற்று ஒரே நாளில் இத்தனை தலைவர்கள் நேரில் வந்து அவரை பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.