நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகம் அருப்புக்கோட்டை - மதுரை சாலையில் உள்ளது.
இந்நிலையில் மதுரையில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் செய்யாத்துரை, அவரின் மகன்களான கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் வரி ஏய்ப்பு புகார், காரணமாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை குறித்து வருகிற ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட செய்யாதுரை உதவுவதாக சர்ச்சையும் எழுந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினரின் இந்த சோதனை பரபரப்பாக பேசப்படுகிறது.

அ.தி.மு.க. அரசின் முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆட்சி காலத்தில் டெண்டர் விடப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பணிகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவரின் மகன்களுடன் இணைந்து செய்யாத்துரை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே. நிறுவனத்தில் வரிஏய்ப்பு செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து நடைபெற்ற வருமான வரிச்சோதனையில் ரூ.200 கோடி ரொக்கம், கிலோ கணக்கிலான தங்கம், வெள்ளி, கம்ப்யூட்டர்கள், லேப்டாப், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.