Published:Updated:

`அமைச்சர் வீட்டு விசேஷத்துக்கு வராததுனால குடிநீர் ரத்து’ - திமுக நிர்வாகியின் செயலால் கொதித்த மக்கள்

'பீஸ்' இல்லாத மின்சாரப்பெட்டி

விருதுநகரில் அமைச்சர் வீட்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் கிடையாது எனக் கூறி மின்சார அறையிலுள்ள 'ஃபியூஸ்' கட்டைகளை திமுக நிர்வாகி ஒருவர் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`அமைச்சர் வீட்டு விசேஷத்துக்கு வராததுனால குடிநீர் ரத்து’ - திமுக நிர்வாகியின் செயலால் கொதித்த மக்கள்

விருதுநகரில் அமைச்சர் வீட்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் கிடையாது எனக் கூறி மின்சார அறையிலுள்ள 'ஃபியூஸ்' கட்டைகளை திமுக நிர்வாகி ஒருவர் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
'பீஸ்' இல்லாத மின்சாரப்பெட்டி

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனின் பேத்தியின் திருமண வரவேற்புவிழா, விருதுநகர்‌ நகராட்சிக்குட்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில், தி.மு.க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதிக்கும்படி நாளிதழ், மற்றும் தபால் மூலமாக அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் பகுதி பலத்தைக் காட்ட வாடகை வேனில் ஆட்களை ஏற்றிவந்திருந்தனர். இந்நிலையில், தி.மு.க. மாவட்ட மீனவரணி நிர்வாகியாக உள்ள சொக்கலிங்கம் என்பவர், அமைச்சரின்‌ வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ள மறுத்த கலைஞர் நகர் பகுதிப் பொதுமக்களை பழிவாங்கும் நோக்கில் குடிநீர்த் தொட்டியின் மின்சார அறையில் 'ஃபியூஸ்' கட்டைகளை உருவிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலைமறியல்
சாலைமறியல்

இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். "பாலையம்பட்டி பகுதியில் கலைஞர் நகர் இருக்கிறது. இந்தப் பகுதியைக் கொத்தனார் காலனினும் சொல்லுவாங்க. இங்கே 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிச்சுக்கிட்டு வர்றாங்க.

விருதுநகர்ல அமைச்சர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துச்சு. இதுல கட்டாயம் கலந்துக்கணும்னு தி.மு.க மாவட்ட மீனவரணி நிர்வாகி சொக்கலிங்கம் எங்க எல்லாத்தையும் நிர்பந்தப்படுத்திச் சொல்லிட்டுப் போயிட்டார். எங்களுக்கு விசேஷ வீட்டுக்குப் போறதுக்கு விருப்பம் இல்லை. அதனால, அவர் சொன்னதைப் பெருசா எடுத்துக்காம அவங்கவங்க வீட்டுல எங்க வேலையைப் பார்த்துட்டுருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில மறுபடியும் எங்க பகுதிக்கு வந்த சொக்கலிங்கம், `அமைச்சர் வீட்டு விசேஷத்கு வராத மக்களுக்கு குடிநீர் விநியோகம் கிடையாது’ன சொல்லி குடிநீர் டேங்கின் மின்சார மோட்டார் ஃபியூஸ் கட்டைகளை உருவிட்டுப் போயிட்டார். வாரத்துல ஏழு நாளும் எங்களுக்கு வேலைப்பாடுதான். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் பிள்ளைங்க ஸ்கூல் லீவுனு வீட்ல இருப்பாங்க. அந்தச் சமயத்துலதான் வேலையும் ஜாஸ்தியா இருக்கும். மத்த நாள்ல செலவழிக்கிற தண்ணியைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் அதிகமாகவே செலவு பிடிக்கும். இதைச் சரிக்கட்டுறதுக்கு பக்கத்துல இருக்குற குடிநீர்த் தொட்டிலதான் நாங்க தண்ணீர் பிடிப்போம்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல, எல்லாரும் அவங்கவங்க வீட்டுல பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்தோம். இந்த சமயத்துல சொக்கலிங்கம் வந்து எங்களைக் கட்டாயப்படுத்தி அமைச்சர் வீட்டு வரவேற்புவிழாவுக்குக் கூப்பிட்டது எங்களுக்குப் புடிக்கலை. ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம்னு ஒண்ணு இருக்கும். அதுல தலையிட்டு கட்டாயப்படுத்த முடியாது. அவரோட நடவடிக்கையை ஏத்துக்க முடியாது. அதனால சொக்கலிங்கத்தோட செயலைக் கண்டிச்சு சாலை மறியல் செஞ்சோம்.

அங்க வந்த அதிகாரிகங்க, `கட்டாயம் ஃபியூஸ் கட்டைகளை வாங்கி மறுபடியும் மாட்டிவிடுவோம்னு’ உறுதியா சொன்னதுக்கு அப்புறம்தான் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆளுங்கட்சியா இருந்தா என்ன வேணாலும் பண்ணலாங்கிற நினைப்புல சிலர் இந்த மாதிரி நடந்துக்கிறாங்க. இது ஒட்டுமொத்தமா தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குத்தான் கெட்ட பேரு. இந்த மாதிரி ஆளுக மேல கட்டாயம் நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.