Published:Updated:

``என்னால எதையுமே மாத்தமுடியல..!" - மனஉறுத்தலால் அரசு வேலையை ராஜினாமாசெய்த வி.ஏ.ஓ உருக்கம்!

பிரிதிவிராஜ்

அரசாங்க வேலையில் தன்னால் முழு மனதுடன் திருப்தியாகச் செயல்பட முடியவில்லை, ஆக்கபூர்வமாக எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியவில்லை என்ற மனஉறுத்தலால், வி.ஏ.ஓ பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.

Published:Updated:

``என்னால எதையுமே மாத்தமுடியல..!" - மனஉறுத்தலால் அரசு வேலையை ராஜினாமாசெய்த வி.ஏ.ஓ உருக்கம்!

அரசாங்க வேலையில் தன்னால் முழு மனதுடன் திருப்தியாகச் செயல்பட முடியவில்லை, ஆக்கபூர்வமாக எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியவில்லை என்ற மனஉறுத்தலால், வி.ஏ.ஓ பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பிரிதிவிராஜ்

அரசாங்க வேலை கிடைத்துவிடாதா என்று லட்சக்கணக்கானோர் ஏக்கத்துடன் காத்துக்கிடக்கும் சூழலில், கிடைத்த அரசாங்க வேலையில் தன்னால் முழு மனதுடன் திருப்தியாகச் செயல்பட முடியவில்லை, ஆக்கபூர்வமாக எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியவில்லை என்ற மனஉறுத்தலால் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, கள்ளக்காரி வி.ஏ.ஓ-வாக பணியாற்றிவந்த பிரதிவிராஜ் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

தகவல் கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம். ``ஆம் உண்மைதான்" என உறுதிப்படுத்திக்கொண்ட அவர், தனது ராஜினாமாவுக்கான காரணத்தையும் முகநூலில் பதிவிட்டிருப்பதாகத் தெரிவித்தார். அவருடைய முகநூல் பதிவில், "அனைவருக்கும் வணக்கம், நான் துரை பிரிதிவிராஜ் சாஸ்தா, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஒரு கிராம நிர்வாக அலுவலராக வாழ்ந்து வந்தேன். உசுர கொடுத்தாச்சும் உன்ன ஆளாக்குவேன் என்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொல்வது இயல்பு. உண்மையிலேயே தன் உயிரைக் கொடுத்துதான் என்னை ஆளாக்கினார் என் தந்தை.

பணி
பணி

ஏனென்றால் அரசு ஊழியராக இருந்த அவரின் இறப்புக்குப் பிறகு, கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணியை அரசாங்கம் எனக்கு வழங்கியது. கருணையில் வந்தவன் என்ற நினைவு ஒவ்வொரு நாளும் எனக்குள் நிறைந்திருப்பதால், கருணை நிறைந்தவன் என்று மக்கள் ஒவ்வொருவரும் சொல்லும்படியாகவே என் பணியை நான் அமைத்துக் கொண்டேன். தந்தையை இழந்தேன்‌. உடன்பிறந்த தனயனை விபத்தில் பறிகொடுத்தேன். 2011-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்த நான், அன்று முதல் இன்றுவரை ஒரு பைசாகூட லஞ்சமாகவோ அன்பளிப்பாகவோ பெற்றதில்லை என்பதை கர்வத்தோடு கூறிக்கொள்கிறேன்.

ஒரு நேர்மையான அரசுப் பணியில் இருப்பது என்பது இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும். சட்டவிரோதச் செயல்களுக்கு துணை போகமாட்டேன் என்றும் மக்களுக்காக உழைப்பேன் என்றும் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும், ஒரு காலகட்டத்தில் புற அழுத்தம் காரணமாக தங்கள் கொள்கைகளைத் தாங்களே கரைத்துக்கொண்டு பணமே குறி என்று மாறிவிடுகிறார்கள். அரசியல் அழுத்தம் அதிகாரிகளின் அழுத்தம் அதைவிட ஏன் இந்த சமூகத்தில் கொலை, கொள்ளை செய்பவர்களின் அழுத்தத்துக்குகூட அடிபணிந்து தங்களின் தடம் மாறிப் போகும் அரசு ஊழியர்களுக்கிடையே, எதுவாகினும் உயிர்போகினும் நேர்மை கைவிடேன் என்ற நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மையாளர்கள் என்ற சிறுபான்மைக் கூட்டத்தில் நானும் ஒருவனாய் இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

பணியில்
பணியில்

எத்தனையோ அச்சுறுத்தல்கள் எத்தனையோ மிரட்டல்கள் எத்தனையோ அழுத்தங்கள் வந்தபோதிலும், மக்களின் வரிப்பணத்தில் தின்பவன் மக்களுக்காகவே உழைக்கவேண்டிய கடமைகொண்ட ஓர் அரசு ஊழியன் என்ற கர்வத்தில் அத்தனை அழுத்தங்களையும் புறந்தள்ளி பயணித்தேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. ஓர் அரசு ஊழியனாய் கிராம நிர்வாக அலுவலராய் என் கிராமத்தில் கடைக்கோடி கிராம மக்களின் வீடுவரை தேடிச் சென்று அவர்களுக்காக மிக நேர்மையாய் உழைத்தேன் என்ற நிம்மதியும் திருப்தியும் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்கும். தங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மிக நேர்மையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் நேர்மையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பணமும் நிலமும் பதவியுமே வாழ்வின் அதிமுக்கிய தேவை என்று கருதுபவர்கள் எந்தத் தவற்றையும் செய்யும் துணிவுக்குச் சென்றுவிடுகிறார்கள். அந்த ஒரு குறிப்பிட்ட தவறானவர்களால்தான் இந்தச் சமூகத்தின் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்டு வாழும் மக்களுக்கு எந்த நன்மையும் சென்று சேர்வதில்லை. எண்கள் அச்சடித்த ஒரு காகிதம்தான் வாழ்வையே மாற்றும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தவிர... சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. நண்பர்களே நான் உயிராய் நேசித்த இந்த அரசுப் பணியை என் தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்கிறேன் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணி
பணி

உடல் நலம் பாதித்த என் மனைவி, வயதான என் தாய், ஒரு மகள், ஒரு மகன் இவர்களின் நலன் கருதி என்னால் 24 மணி நேரமும் நேசிக்கப்பட்ட ஒரு பணியை துறந்து செல்கிறேன். அரசு ஊழியனிலிருந்து ஒரு மகனாய், ஒரு கணவனாய், ஒரு தகப்பனாய் என்னை நானே மாற்றம் செய்துகொள்கிறேன். ஒரு கிராம நிர்வாக அலுவலராய் விதிகளுக்கு உட்பட்டு அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன். ஆனாலும் எந்த ஒரு மாற்றத்தையும் இந்த கட்டமைப்பில் என்னால் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஓர் அரசு ஊழியனாக என் பணியின் கடைசி நாளில்கூட என் தலையை நான் தடவிப் பார்த்தேன். கொம்பு முளைத்ததற்கான எந்த ஓர் அறிகுறியும் அங்கே இல்லை.

நண்பர்களே... மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசாங்கத்தில் மக்களுக்குச் சேரவேண்டிய உதவியை அரசிடமிருந்து பெற்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதுவே அரசுப் பணி. ஆனால், கொம்பு முளைத்துவிட்டதாய் திரியும் பலருக்கு இது உரைப்பதே இல்லை. உரைக்கும் நாள் வந்து சேரட்டும். அந்த நன்னாளில் நானும் ஒரு நேர்மையான அரசு ஊழியனாய் இருந்தேன் என்று கடைசி பெருமூச்சை விட்டபடி உயிர் பிரிய காத்திருக்கிறேன். என்னை நேசித்த, நேசிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி" எனப் பதிவிட்டிருக்கிறார்.