Published:Updated:

`தேர்தல் முடிந்துவிட்டது;இனி அனைத்துக்கட்சியினரும் என் குடும்பத்தினர்!’-டெல்லியை கவர்ந்த கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் ( ANI )

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 3-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள மொத்தம் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைபற்றி மாபெரும் வெற்றி பெற்றது. பா.ஜ.க 8 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் 63 தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்காமல் படு தோல்வியடைந்தது. ஆம் ஆத்மியின் இந்த மிகப் பெரும் வெற்றிக்குக் காரணம், அவரது அரசு நடுத்தர மக்களைக் குறிவைத்துச் செயல்படுத்திய திட்டங்கள்தான். கல்வி, பெண்கள், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றை அடிப்படையாக வைத்தே அவர்களின் பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இதன் பயனாக இன்று மூன்றாவது முறையாக டெல்லியின் முதல்வர் அரியாசனத்தில் ஏறியுள்ளார் கெஜ்ரிவால். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, சத்தேந்திர ஜெய்ன், கோபால் ராய், கைலாஷ் கேலாட், இம்ரான் ஹுசைன் மற்றும் ராஜேந்திர கௌதம் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

`பேபி மப்ளர்மேன்' முதல் ஆட்டோ டிரைவர் வரை... கெஜ்ரிவால் பதவியேற்பில் பங்கேற்கும் ஆம் ஆத்மிக்கள்!

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பள்ளி மாணவர்கள், துப்புரவுத் தொழிலாளி, டாக்டர்கள், பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், இன்ஜினீயர், ஆர்கிடெக், பஸ் கண்டக்டர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், ஆசிரியர்கள், பியூன்கள் எனச் சமுகத்தின் பல மட்ட சாமானிய மக்களும் பங்கேற்றுள்ளனர். ஸ்பெஷலாக `குட்டி பேபிமப்ளர்' மேனும் கெஜ்ரிவாலின் பதவியேற்பில் பங்கேற்றுள்ளார்.

இன்றைய பதவியேற்பு விழா பாதுகாப்புக்காக ராம்லீலா மைதானம் முழுவதும் பல இடங்களில் ட்ரோன் கேமராக்களும், சிசிடிவி கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புப் பணியில் மட்டும் நான்காயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராம்லீலா மைதானம்
ராம்லீலா மைதானம்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் பிறகு மக்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ இந்த வெற்றி என்னுடையது அல்ல; மொத்த டெல்லி மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வெற்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி மக்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதே எங்களின் ஒரே முயற்சியாக இருந்தது. கெஜ்ரிவால் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாகச் சிலர் கூறுகிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு விலைமதிப்பு மிக்க விஷயமும் இலவசம் என்பதை இயற்கை உறுதிப்படுத்தியுள்ளது.

`பி.கே வியூகத்தில் ஏ.கே..!'-  இந்தியாவின் ஆன்மாவை கெஜ்ரிவால் கைப்பற்றியது எப்படி?

அது தாயின் அன்பு, தந்தையின் ஆசீர்வாதம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். எனவே, கெஜ்ரிவால் தனது மக்களை அதிகமாக நேசிக்கிறார். அதனால் அவர்களுக்கு இந்த அன்பு இலவசம். என் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன், அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருக்கலாம். அதனால் இங்கு வரவில்லை. ஆனால் டெல்லியை அபிவிருத்தி செய்வதற்கும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் பிரதமர் மற்றும் மத்திய அரசிடமிருந்து ஆசி பெற விரும்புகிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
ANI

தேர்தலின் போது சிலர் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர். சிலர் பா.ஜ.கவுக்கும் சிலர் காங்கிரஸுக்கும் வாக்களித்தனர். ஆனால் இன்று நான் மொத்த டெல்லியின் முதல்வராகத்தான் பதவியேற்றுக்கொண்டுள்ளேன். நான் ஆம் ஆத்மியின் முதல்வர், பா.ஜ.கவின் முதல்வர், காங்கிரஸின் முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர். தேர்தல் முடிந்துவிட்டது, நீங்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. தற்போது நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். உங்கள் அனைவருக்காகவும் உழைக்கத் தயாராக உள்ளேன்” என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு