Published:Updated:

இன்று முதல்வர்; நாளை பிரதமர்!

அரவிந்த் கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
அரவிந்த் கெஜ்ரிவால்

‘ஏழைத் தாயின் மகன்’ என்ற மோடியின் உருக்கமான பிரசாரம் உலகப்புகழ் பெற்றது.

இன்று முதல்வர்; நாளை பிரதமர்!

‘ஏழைத் தாயின் மகன்’ என்ற மோடியின் உருக்கமான பிரசாரம் உலகப்புகழ் பெற்றது.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
அரவிந்த் கெஜ்ரிவால்

‘‘என்றாவது ஒரு நாள் நீங்கள் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறீர்களா?’’ -2014-ம் ஆண்டு முதல்முறையாக டெல்லி முதல்வரானபோது அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இப்படிக் கேட்டார்கள். ‘‘யாருக்குத் தெரியும்’’ என்று சுருக்கமாக பதில் சொன்னார் அவர். அப்போது நரேந்திர மோடி பிரதமர் ஆகியிருக்கவில்லை. வலிமையான மோடியின் பிரசாரப் படையை இரண்டு முறை டெல்லியில் வீழ்த்திய உற்சாகத்துடன் இப்போது மீண்டும் தேசியக் கனவு காண்கிறார் கெஜ்ரிவால்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெல்லி மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட செவ்வாய்க்கிழமை காலை... டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரமாண்ட புகைப்படத்துடன் போஸ்டர்கள் பளிச்சிட்டன. ‘தேசத்தைக் காக்க ஆம் ஆத்மி கட்சியுடன் இணையுங்கள்’ என அவை அழைப்பு விடுத்தன. ‘மாநிலத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கெஜ்ரிவால் தயாராகிறார்’ என அங்கே பேச்சுகள் எழுந்தன.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

‘‘ஆம் ஆத்மி கட்சியை இரண்டு முறை தேசிய அரசியலில் நிலைநிறுத்த முயன்று தோற்ற கெஜ்ரிவால், இம்முறை அதற்கு சரியான ஃபார்முலாவைக் கண்டறிந்துவிட்டார். அடுத்து அவரது இலக்கு பிரதமர் நாற்காலிதான்’ என அவருக்கு நெருக்கமானவர்கள் வர்ணிக்கிறார்கள். கெஜ்ரிவால் வசப்படுத்தியது ‘மோடி ஃபார்முலா’தான். அதில் வளர்ச்சியும் தேசபக்தியும் தூக்கலாக இருக்கும். இந்துத்துவம் மட்டும் மோடி அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் மென்மையாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசியல் பரமபத விளையாட்டில் பெரிய ஏணிகளையும், நீளமான பாம்புகளையும் மட்டுமே சந்தித்தவர் கெஜ்ரிவால். 2013-ம் ஆண்டு அவர் கட்சி ஆரம்பித்தபோது, ‘இவராவது... டெல்லி முதல்வர் ஆவதாவது’ என நகைத்தார்கள் பலர். அடுத்த ஆண்டே அவர் டெல்லி முதல்வர் ஆனார். அவருக்குப் பெரும்பான்மை இல்லாத சூழலில், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதால், கெஜ்ரிவால் கேட்காமலே வெளியிலிருந்து அவருக்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ். ஆனால், இரண்டு மாதங்களுக்கும் குறைவாக ஆட்சியில் இருந்த அவர், அதிகம் வம்பிழுத்தது காங்கிரஸைத்தான்! அப்போது பட்ட சூடு... 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கெஜ்ரிவாலே முன்வந்தபோதும் அவருடன் காங்கிரஸ் கைகோக்கவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு அடித்தளமே இல்லாதபோதும் இந்தியா முழுக்க 400-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியது. வாரணாசியில் போய் மோடிக்கு எதிராகப் போட்டியிட்டு மோசமான தோல்வியைச் சந்தித்தார் கெஜ்ரிவால். மலர்வதற்கு முன்பே கருகிப்போன கட்சியாக அப்போது ஆம் ஆத்மி வர்ணிக்கப்பட்டது. ஆனால், 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றியுடன் முதல்வரானார்.

அதன்பிறகும் ‘மோடியை நேரடியாகத் திட்டுவதன் மூலம் மட்டுமே மோடிக்கு இணையாக வளர முடியும்’ என நினைத்துக் கொண்டு மோதலில் இறங்கினார். ஆனால், இந்த மோதல் அரசியல் கைகொடுக்கவில்லை. 2017 பஞ்சாப் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து தேசியக் கட்சியாக ஆம் ஆத்மியை மாற்றக் கனவுகண்டார். ஆனால், அங்கு அவர்களால் எதிர்க்கட்சியாக மட்டுமே ஆக முடிந்தது. அப்போது நடைபெற்ற டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் ஆம் ஆத்மி மோசமான அடி வாங்கியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் தோற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸையும் தாண்டி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

அப்போதுதான் தன் அரசியலை மாற்றி, டெல்லியை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ள முடிவெடுத்தார் கெஜ்ரிவால். மோதல் அரசியலை மாற்றினார். பிரசாந்த் கிஷோரைத் தேர்தல் ஆலோசகராக ஒப்பந்தம் செய்தார். அதன்பின் கெஜ்ரிவாலின் அரசியல் யுக்தியே மாறியது. தங்கள் அரசு செய்த வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்டு ‘டெல்லி மாடல்’ என்ற புதிய பிரசாரத்தை உருவாக்கினார்.

டெல்லி ஒரு தனி மாநிலம் என்றாலும், மாநில அரசின் அதிகார வரம்புகள் கிட்டத்தட்ட ஒரு மாநகராட்சிக்கு உள்ளதைப் போன்றவையே! போலீஸ் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறையின் அதிகாரத்தின்கீழ்தான் டெல்லி போலீஸ் இருக்கிறது. இப்படி ‘தன் கைகள் கட்டிப் போடப்பட்டிருந்த நிலையில்’ செய்த வளர்ச்சிப் பணிகளை அவர் பட்டியல் போட்டார்.

குடிசைப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி தருவதற்காக ஏராளமாக ஆரம்பிக்கப்பட்ட ‘மொகல்லா’ க்ளினிக்குகள், மாற்றம் கண்ட அரசுப் பள்ளிகள், இலவச மின்சாரம், இலவசக் குடிநீர், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் என அவரின் பட்டியல் நீண்டது. அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதையும் குறிப்பிட்டார்.

மாநகராட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கிடைத்த வெற்றி, ‘இம்முறை டெல்லி நமக்குத்தான்’ என பி.ஜே.பி-யை நினைக்க வைத்தது. அவர்கள் வழக்கம்போல வெறுப்புப் பிரசாரத்தில் இறங்கினர்.

பெரும்பான்மை வாதமும் தேசபக்தியும் கலந்த பிரசாரக் களத்தில் எதிர்க்கட்சிகளை பி.ஜே.பி சந்திக்கும். கிட்டத்தட்ட தேர்தல் பிரசாரக் களம் முழுக்க என்னென்ன விஷயங் களைப் பேச வேண்டும் என்பதை பி.ஜே.பி-யே தீர்மானிக்கும். எதிர்க்கட்சிகள் இந்த வலையில் போய்ச் சிக்கிக்கொள்ளும். ஆனால், கெஜ்ரிவால் இந்தக் களத்தில் நேரடியாக மோதாமல், பைபாஸ் பாதையில் போய்விட்டார்.

‘இவர் இந்துத்துவ ஆதரவாளரா, மதச்சார்பின்மை பேசுபவரா’ என பி.ஜே.பி-யும் எதிர்க்கட்சிகளும் குழம்பும் அளவுக்கு கெஜ்ரிவாலின் அணுகுமுறை இருந்தது. பி.ஜே.பி-யின் அடையாளக் கடவுளாக ராமர் இருக்க, ராமரின் அணுக்கத் தொண்டரான அனுமனை வசப்படுத்திக்கொண்டார் கெஜ்ரிவால். டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் இருக்கும் அனுமன் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுப் பிரசாரத்தைத் தொடங்கினார். பிரசாரக் கூட்டங்களில் அனுமன் சாலிசா பாடினார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகள் அளித்த அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு அகற்றியபோது, எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. கெஜ்ரிவால் அதை ஆதரித்தார். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது, ஆம் ஆத்மி எம்.பி-க்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் இந்தியா முழுக்க கவனம் பெற்றிருக்கிறது. அந்தப் போராட்டக் களத்துக்கு கெஜ்ரிவால் போகவில்லை. போராட்டத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்து சொல்லவில்லை. (ஷாஹின் பாக் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்து சொன்ன ஒரே ஆம் ஆத்மி தலைவர், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா. கடந்தமுறை 28,000-க்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த அவர், இம்முறை வெறும் 3,207 ஓட்டு வித்தியாசத்தில் தடுமாறி ஜெயித்தார். ‘இந்தத் தடுமாற்றத்துக்கு ஷாஹின் பாக் ஆதரவுக் கருத்தே முக்கிய காரணம்’ எனக் கருதப்படுகிறது!)

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

‘போராட்டக்காரர்களுக்கு கெஜ்ரிவால்தான் பிரியாணி சப்ளை செய்கிறார்’ என பி.ஜே.பி பிரசாரம் செய்தபோது, ‘‘சாலையை மறித்துக் கொண்டு போராட்டம் நடத்துவது தவறு. இந்தியாவின் மிக வலிமையான உள்துறை அமைச்சரான அமித் ஷா ஏன் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மறுக்கிறார்?’’ என கெஜ்ரிவால் கேட்டார். போராட்டத்துக்கு கெஜ்ரிவால் வெளிப்படையான ஆதரவு தரவில்லை என்றாலும், முஸ்லிம் ஓட்டுகள் ஆம் ஆத்மிக்கே விழுந்தன. பி.ஜே.பி-யைத் தோற்கடிக்க அவர்களுக்கு அதுதான் வழியாக இருந்தது.

‘ஏழைத் தாயின் மகன்’ என்ற மோடியின் உருக்கமான பிரசாரம் உலகப்புகழ் பெற்றது. கெஜ்ரிவால் அதையும் காப்பியடித்தார். ‘‘வருமான வரித்துறை அதிகாரியாக இருந்த நான், மக்கள் சேவை செய்வதற்காகவே அதை ராஜினாமா செய்துவிட்டு வந்து சிரமப்படுகிறேன்’’ என்று உருகினார்.

டெல்லி தேர்தலுக்கு முன்பாகக் கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள், சில ஆச்சர்யமான விஷயங்களைக் கண்டார்கள். 10 மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு வாக்களித்த பலர், ‘இம்முறை ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன்’ எனச் சொல்வதைக் கேட்டார்கள். ‘ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் ஜெயிக்கும். ஆனால், இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும், டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் பி.ஜே.பி ஜெயிக்கும்’ என ஒரு கருத்துக்கணிப்பு சொன்னது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 16.32 சதவிகித வாக்குகள் பெற்றிருந்த ஆம் ஆத்மி, இம்முறை 53.57 சதவிகித வாக்குகள் பெற்றது.

ஆனால், இந்த வெற்றியை வைத்துக்கொண்டு கெஜ்ரிவால் மோடிக்கு மாற்றாக உருவெடுக்க முடியுமா? 2024-ம் ஆண்டில்கூட மோடியை எதிர்கொள்ளும் அளவுக்குத் தேசிய அளவில் வலுவான தலைவர்கள் இங்கே களத்தில் தென்படவில்லை என்பதுதான் நிஜம். பி.ஜே.பி-க்கு இணையான தேசியக்கட்சியாகக் கருதப்படும் காங்கிரஸ் கிட்டத்தட்ட உருக்குலைந்து போயிருக்கிறது. பல மாநிலங்களில் அதற்குத் தலைவர்களும் இல்லை, தொண்டர்களும் இல்லை, வாக்கு வங்கியும் இல்லை. தன்னை மறுகட்டமைப்பு செய்துகொள்ளும் முயற்சியிலும் அந்தக் கட்சி இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் பெயரளவுக்கே தேசியக் கட்சிகள்.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் அவ்வப்போது தேர்தல்கள் நடைபெறும் போது உருவாகும் தலைவர்களை பிரதமர் வேட்பாளர்களாகச் சித்திரிக்கும் முயற்சிகள் நடைபெறும். சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், சரத் பவார் என இந்தப் பட்டியல் பெரியது. இவர்களில் ‘ஒருவர் இன்னொருவரை ஏற்க மாட்டார்கள்’ என்ற பொதுத்தன்மையே, பி.ஜே.பி மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக இன்னொரு அணி உருவாவதைத் தடுத்துவந்தது. கெஜ்ரிவால் இந்தப் பட்டியலில் எப்போதும் இருந்த தில்லை. அது மட்டுமல்ல, இவர்களில் மம்தாவைத் தவிர வேறு யாருடனும் அவர் நட்பாகவும் இருந்ததில்லை. கூட்டணி அரசியலில் அவருக்கு எப்போதும் விருப்பமும் இருந்ததில்லை.

‘வளர்ச்சியை முன்னிறுத்திச் செய்யும் அரசியல் ஜெயிக்கும்’ என கெஜ்ரிவால் நம்புகிறார். ஆனால், மோடியின் ‘குஜராத் மாடலை’ இந்தியா முழுக்கக் கொண்டு செல்வதற்கு பி.ஜே.பி என்ற வலிமையான கட்சி இருந்தது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். வலிமையாக வேர்களைப் பரப்பியுள்ள ஆர்.எஸ்.எஸ் இருந்தது.

ஆம் ஆத்மி அந்த நிலையில் இல்லை. டெல்லியைத் தாண்டி பஞ்சாப்பில் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க சீரியஸான முயற்சியில் அந்தக் கட்சி இறங்கியது. அப்போதுகூட அங்கு வலுவான தலைவரை உருவாக்க கெஜ்ரிவால் ஆசைப்படவில்லை. இந்த இரண்டு மாநிலங்களைத் தாண்டி கோவா, ஹரியானா எனச் சிறிய மாநிலங்களில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறது. படித்த இளைஞர்களைத் தொண்டர்களாக வைத்துக்கொண்டு நகர்ப்புறங்களில் அரசியல் செய்து பழகிய ஆம் ஆத்மிக்கு, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் அரசியல் செய்யத் தெரியாது.

ஆனால், நான்கு ஆண்டுகள் என்பது இந்திய அரசியலில் மிக நீண்ட காலம். அடுத்ததாக பி.ஜே.பி-க்கு பீகாரில் ஓர் அக்னிப்பரீட்சை இருக்கிறது. அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் தேர்தல் வருகிறது. இங்கெல்லாம் கெஜ்ரிவாலுக்கு எந்த வேலையும் இருக்கப் போவதில்லை. ஒருவேளை 2022-ல் நடைபெறும் பஞ்சாப் மற்றும் கோவா மாநிலத் தேர்தல்களில் அவர் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டினால், தேசிய கவனம் அவர்மீது திரும்பலாம். ‘மூழ்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கப்பலிலிருந்து தங்களைக் காப்பாற்றும் மீட்பராக’ கெஜ்ரிவாலைப் பலரும் கருதினால், நிலைமை வேகமாக மாறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism