Published:Updated:

பா.ஜ.க தூண்டுதலில் செயல்பட்டாரா சமீர் வான்கடே? - பற்றியெரியும் ஆர்யன் கான் கைது விவகாரம்...

அப்பாவி பாலிவுட் பிரபலங்களை சமீர் வான்கடே மிரட்டிப் பணம் பறித்துவருவதாக எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

என்கவுன்ட்டர் தொடங்கி போதைப்பொருள் விவகாரம் வரை மும்பை போலீஸ் உயரதிகாரிகள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே பா.ஜ.க பின்னணியில் செயல்பட்டார் என்றும், ஷாருக் கானின் மேலாளரிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசினார் என்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் சர்ச்சைத் தீயில் தகிக்கிறது மும்பை!

அக்டோபர் 3-ம் தேதி... மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசுக் கப்பலில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை, சமீர் வான்கடே தலைமையிலான போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைதுசெய்தார்கள். இந்த வழக்கில் பா.ஜ.க பிரமுகர் பனுசாலி, கொசாவி, அவரின் பாதுகாவலர் பிரபாகர் ஆகியோர் நேரடி சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். கப்பலில் பார்ட்டி நடந்தபோது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தப்போவதைக் கண்டுபிடித்து அவர்கள்தான் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார்கள் என்பது போதைத் தடுப்புப் பிரிவு போலீஸாரின் வாதம்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

ஆனால், மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு இதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மகாராஷ்டிரா அரசுக்கும், பாலிவுட்டுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆர்யன் கான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறார் மகாராஷ்டிரா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக்.

‘‘அப்பாவி பாலிவுட் பிரபலங்களை சமீர் வான்கடே மிரட்டிப் பணம் பறித்துவருவதாக எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது. இதுவரை 25-க்கும் மேற்பட்ட போலி வழக்குகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். சமீர் வான்கடே தன் அதிகாரிகளுடன் சேர்ந்து மும்பை மற்றும் மாலத்தீவில் பாலிவுட் பிரபலங்களை மிரட்டி ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறார். இவரது பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது. உத்தரப்பிரதேசம், நொய்டாவில் உருவாகிவரும் புதிய திரைப்பட நகரத்துக்கு பாலிவுட்டை மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்” என்று பகீர் கிளப்புகிறார் நவாப் மாலிக். அத்துடன், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தனக்கு அனுப்பியதாக, ஒரு கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘சமீர் வான்கடேயும், அவரின் ஆட்களும் சேர்ந்து போதைப்பொருளை வைத்துவிட்டு ஆர்யன் கானையும், அவரின் நண்பர்களையும் சிக்கவைத்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பா.ஜ.க தூண்டுதலில் செயல்பட்டாரா சமீர் வான்கடே? - பற்றியெரியும் ஆர்யன் கான் கைது விவகாரம்...

ஆனால், நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் போதைத் தடுப்புப் பிரிவு போலீஸ் தரப்போ, ‘‘கஞ்சா வைத்திருந்ததாக நவாப் மாலிக்கின் மருமகன் சலீம் கானை, சமீர் வான்கடே கைதுசெய்து சிறையில் அடைத்தார். அதற்குப் பழிவாங்கவே அமைச்சர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்” என்றார்கள்.

இதற்கிடையே, இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்ட கொசாவி என்பவர், ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க போனில் பேரம் பேசியதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஷாருக் கானின் மேலாளர் பூஜாவிடம், வழக்கிலிருந்து ஆர்யனை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசிய கொசாவி, ‘அதில், 8 கோடி ரூபாய் சமீர் வான்கடேவுக்கானது’ என்று சொன்னதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்த கொசாவியின் உதவியாளர் பிரபாகர், மும்பை போலீஸாரிடம் புகாரும் அளித்திருக்கிறார். டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் டீம் ஒன்று இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளது. மற்றொரு பக்கம் மும்பை போலீஸ் சமீர் வான்கடே மீது வழக்கு தொடரத் தயாராகிவருகிறது.

இதையடுத்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார் சமீர் வான்கடே. அங்கும் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை. ‘கைதுசெய்யப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு சமீர் வான்கடேவிடம் மும்பை போலீஸார் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

“பா.ஜ.க தூண்டுதலுடன் அதிகாரிகள் இப்படிச் செய்வது முதன்முறையல்ல” என்கிறார் மகாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்... ‘‘ஏற்கெனவே மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், பா.ஜ.க-வின் தூண்டுதலின்படி மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிராக லஞ்சப் புகாரைக் கூறினார். அது இப்போது அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டதால், கைது நடவடிக்கைக்கு பயந்து பரம்பீர் சிங் நாட்டைவிட்டே ஓடிவிட்டார். அதேபோல, குற்றப்பிரிவில் பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி ரேஷ்மி சுக்லா, அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் போன் கால்களை சட்டவிரோதமாகப் பதிவுசெய்ததாகப் புகார் எழுந்தது. பா.ஜ.க முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தூண்டுதலில் செயல்பட்ட அவரும் வழக்கைச் சந்தித்துவருகிறார். பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்காக அரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அதுபோலவே சமீர் வான்கடேயும் மாட்டிக்கொண்டிருக்கிறார்’’ என்றார்.

பாலிவுட் நடிகர், நடிகைகள் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும்வரை இத்தகைய சர்ச்சைகளுக்கு முடிவே கிடையாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு