தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியபோது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தனர். இந்த நிலையிலும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்-ஸும் சட்டப்பேரவையில்அருகருகே அமர்ந்திருந்தனர். பின்னர் கூட்டம் தொடங்கியதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது சபாநாயகர் அப்பாவு, ``1988-89-ல் ஜானகி பதவிப் பிரமாணத்தின்போதும் இதேபோல் பிரச்னை செய்தீர்கள். நீங்கள் கலகம் செய்யவே வந்திருப்பதுபோல் தெரிகிறது. இந்தித் திணிப்பை எதிர்க்கக் கூடாது என்று முடிவு செய்துதான் வந்திருக்கிறீர்கள்" எனக் கூறி எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கோஷமிட்டபடியே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, ``சட்டமன்ற விதி 6-ன்படி எதிர்க்கட்சித் தலைவர் என்பதுதான் அங்கீகரிக்கப்பட்ட பதவி. மற்ற பதவிகளெல்லாம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களை திருப்திப்படுத்துவதற்குக் கொடுக்கிற பதவிகள். அவர்கள் யாரை விரும்புகிறார்களோ முன்வரிசையில் எப்படிக் கொடுக்க வேண்டுமோ, ஓர் உறுப்பினர் இருந்தாலும்கூட அவர்களுக்கும் மரியாதையைக் கொடுக்கும்விதமாகச் சபை மரபுப்படி இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன.
அதேபோன்று அலுவல்மொழி ஆய்வுக்குழுவில் உறுப்பினராக ஆர்.பி.உதயகுமாரைச் சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். யாரையெல்லாம் சேர்க்க வேண்டும் என்பது சட்டப்பேரவைத் தலைவரின் முழு உரிமை. அதில் நீங்கள் இவரைச் சேருங்கள், இவரை நீக்குங்கள் என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும், எந்த உறுப்பினருக்கும் கிடையாது" எனக் கூறினார்.