Published:Updated:

`அமித் ஷா சொல்வது பொய்... என் மாநிலம் எரியும்போது வீட்டில் என்ன வேலை' - கொதிக்கும் பரூக் அப்துல்லா!

ராம் பிரசாத்

என்னுடைய மாநிலம் பற்றி எரியும்போது வீட்டுக்குள் எனக்கு என்ன வேலை என நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா ( ANI )

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. விவாதத்தின்போது பேசிய தி.மு.க எம்.பி தயாநிதிமாறன், ``காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, லோக் சபை உறுப்பினர் பரூக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டால் அது குறித்த தகவலை சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் அது தொடர்பாக விவரங்களை உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும் என விதி உள்ளது. பரூக் அப்துல்லா காணவில்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது எங்களுக்கு அவரது நிலை குறித்து தெரிய வேண்டும்'' என்றார்.

அமித் ஷா
அமித் ஷா

இதையடுத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் `பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்படவுமில்லை. அவரது விருப்பப்படி வீட்டில் உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். இந்த அவை கவலைகொள்ள வேண்டாம். அவர் நலமாக இல்லாததால் வெளியே வந்திருக்க மாட்டார்' எனக் கூறினார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பரூக் அப்துல்லா, ``என்னை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். என்னை கைது செய்யவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது பொய். இது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. எனது வீட்டு வாசலில் காவல் உயரதிகாரி நிற்கார். என்னுடைய மாநிலம் பற்றி எரியும்போது வீட்டுக்குள் எனக்கு என்ன வேலை. என்னுடைய மகன் உமர் அப்துல்லா சிறைவைக்கப்பட்டுள்ளார். அவர் எங்கே இருக்கிறார். எனது வீட்டுக் கதவுகள் அடைக்கப்பட்டு நான் சிறை வைக்கப்பட்டேன். கதவுகள் திறந்தவுடன் எங்கள் மக்கள் வெளியே வருவார்கள். நாங்கள் போராடுவோம். நீதிமன்றத்துக்குச் செல்வோம். நாங்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு ஓடுபவர்கள் அல்ல. கையெறி குண்டு வீச்சாளர்கள், கல் வீசுபவர்கள் அல்ல. அமைதியான முறையில் தீர்வை எதிர்நோக்கியுள்ளோம்.

பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா

எனது வீட்டில் இருந்த காவலர்களைத் தாண்டித்தான் உங்களிடம் பேசுகிறேன். நான் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தேன். யார் என்னை சிறை வைக்கச் சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினேன். இதற்காக எத்தனை பாதுகாப்புப் படையினர் வேலை பறிபோகும் எனத் தெரியவில்லை. நான் இந்த இந்தியாவைப் பார்த்ததில்லை. இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவருக்குமானது. நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். மரணம் என்பது கடவுளின் விருப்பம். எனவே, அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். சாதாரண மக்களின் நிலை குறித்துதான் எனக்குக் கவலையாக உள்ளது. பூட்டப்பட்ட வீட்டில் அவர்களுக்கு உணவு கிடைக்குமா... தேவையான மருந்துகள் இருக்குமா எனக் கவலையாக உள்ளது. அரசாங்கம் எங்களிடம் மூன்று மாதங்களுக்கு ரேஷன் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு சர்க்கரை இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஆட்டா இருக்கிறது என்கிறது. ஒரு மனிதனால் அதைப் பெற முடியாதபோது அவை இருந்து என்ன பயன்'' என்றார்.